Advertisement

வேர்க்கால்களை அசைத்து பார்க்கும் வைரஸ் நச்சு!

'ஐயோ! இப்படியே முடி கொட்டியபடியே இருந்தால், பத்து, பதினைந்து நாளில் வழுக்கை விழுந்து விடும் போல இருக்கே...' என, புலம்புவோர் அதிகம்.ஆண், பெண் இரு பாலருக்கும் முடி கொட்டுவதற்கான காரணங்கள் பல. அவற்றை அறிந்து, அவற்றுக்குரிய சிகிச்சை பெற்றும், முடி கொட்டுவது நிற்காத போது, 'மன உளைச்சல் காரணமாக இருக்குமோ...' என்ற சந்தேகம் வர வேண்டும். காரணம், முடி கொட்டுவதற்கும், மன உளைச்சலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

பாதிப்பு
அறுபது வயது பெண்மணிக்கு திடீரென்று கொத்து கொத்தாக முடி கொட்ட ஆரம்பித்தது. தலை, புருவம், உடல் என, முழுமையாக கொட்டி விட்டது. முடி வளர்ச்சிக்காக எடுத்த எந்த சிகிச்சையும் பயனில்லை!இவருக்கு முடி கொட்டுதலுக்கு காரணம், வைரஸ் காய்ச்சலின் நச்சுகள் தான். இந்த நச்சுகளை எதிர்த்து போராடும் போது, உடலில் ஏற்பட்ட எதிர்வினை சக்திகள், மயிர்க்கால்களை பாதித்து, முடிகளை வேரோடு சாய்த்து விட்டன.
முடி கொட்டி, வழுக்கை விழுவது வேறு ஒரு ரகம். இது நோய்க்கான அறிகுறி. இதன் பாதிப்பு, கண்ணாடி நொறுங்குவது போல மனதை நொறுக்கி விடும். முடி கொட்டினால், சத்து குறைவாக இருக்குமோ என்று நினைத்து, விட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு பார்க்கலாம் என்று சிலர், முயற்சி செய்து பார்ப்பர். 'இயற்கையாக கிடைக்கும், சத்தான உணவை உண்போம்' என்று நினைப்போர்மிகவும் குறைவு.
முடி, புரத சத்துக்களால் ஆனது. எனவே முட்டை, மாமிசம், பயறு வகைகள், கொட்டைகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முடி பளபளப்பாக இருக்க, கொழுப்பு சத்தும் இவற்றின் மூலம் கிடைக்கிறது. முடிக்கு தேவையான விட்டமின்கள், தாது உப்புகள், கால்சியம், இரும்புச் சத்து, செலினியம், துத்தநாகம் போன்றவை, பனை வெல்லம், எள், கேழ்வரகு, பேரீச்சை, கீரை வகைகள், பழங்களில் இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையையும், இந்த உணவு வகைகள் மூலமே, சரி செய்து கொள்ள முடியும்.
அதே சமயத்தில், தலையில் பொடுகு, கொப்பளங்கள், பூஞ்சை காளான் தொற்று, பேன், முடி கொட்ட காரணமாக இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ளுங்கள். இன்றைய காலக் கட்டத்தில், உப்பு நீர், தவிர்க்க முடியாததாகி விட்டது. மேலும், சிகைக்காய் பயன்படுத்துவதும் சிரமமாகி விட்டது. எனவே, ஷாம்பு பயன்படுத்துபவர்கள், குறைந்த அளவில் ஷாம்பூ எடுத்து, தண்ணீரில் கலந்து, முடி முழுவதும் படரும் வகையில் தேய்த்துப் பயன்படுத்தலாம்.காய்ச்சல் ஏற்பட்டால், தற்காலிகமாக முடி கொட்டலாம். டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் மூலம் முடி கொட்டினால், சரியான சிகிச்சை பெற வேண்டும். சில சமயங்களில் வழுக்கைக் கூட ஏற்படலாம்.
ஒரு முடியின் அஸ்திவாரமே மயிர்க்கால்கள் தான். இதற்கான அஸ்திவாரம், 'டெஸ்டோஸ்டெரோன்' என்ற ஹார்மோன் தான்.

ஹார்மோன் பிரச்னை
இது, இருபாலருக்கும் உண்டு. இந்த ஹார்மோனின் செயல் ஆக்கத்தை பாதிக்க, உடல் ரீதியாக தோன்றும் நோய்களும், மற்ற ஹார்மோன் பிரச்னைகளும் காரணமாகின்றன. இது, முடி கொட்டுதலுக்கான அடிப்படையாக அமைகிறது. அப்படிப்பட்ட நிலையில், முடி கொட்டுதலுடன், மன நல பிரச்னைகளும், பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும்.
ஆண்களுக்கு, மரபியல் காரணிகளால், முன் தலை மற்றும் பின் தலை வழுக்கை ஏற்படலாம்; பெண்களுக்கு கருக்குழாய் நீர்க்கட்டிகள், தைராய்டு கோளாறுகள், முடி கொட்டுவதற்கான முதன்மை காரணமாக, பலரிடம் காணப்படுகிறது. மாதவிடாய் கோளாறுகள், பிரசவத்திற்கு பின் முடி கொட்டுதல் போன்றவை, மன உளைச்சலுடன் முடி கொட்டுதலை உருவாக்கும்.
'சத்து குறைவா... மாத்திரைகளை கொண்டு சரிக்கட்டி விடலாம்; கரு முட்டை பையில் கட்டிகளா... அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லையா... ஹார்மோன் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம். மருந்து கலந்து முடிக்கு லோஷன் போடலாம்; தலையில் முடி வளர்ச்சிக்கான எண்ணெய் மற்றும் முடி வளர ஊசி போடலாம்' என்ற முயற்சிகள் எல்லாம் தற்காலிகம் தான்!
நாம் உடலில், சுயமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி, தன்னைத்தானே சரி செய்து கொள்ள விடுவது இல்லை. முடியில் கோளாறு, அது நம் உடலின் நலம் குன்றியுள்ளதை பிரதிபலிக்கிறது. ஒருவருக்கு முடி கொட்டுகிறது என்றால், பிரச்னை முடியில் மட்டுமல்ல. மற்ற நோய்க்கான அறிகுறிகள், உடலில் ஏற்படும் அறிகுறிகளின் மாற்றம், மன உளைச்சலாக வெளிப்படும்.
டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம்,
ஹோமியோ டைம்ஸ்,
சென்னை.
96771 55811

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement