Advertisement

தோல் என்ற எல்லை பாதுகாப்பு படை

நம் உடலை கவசம் போல் பாதுகாப்பது மட்டுமே, தோலின் முக்கிய பணி என்று நினைக்கிறோம். நாம் அறியாத பல உன்னத பணிகளை, தோல் செய்கிறது.

பாதுகாப்பு கவசம்தோல், நம் உடலின் மிக மெல்லிய, மிக மிருதுவான உறுப்பு மட்டும் அல்ல; நம் உடலின் உறுதியான உறுப்பும், தோல் தான். கருவறைக்குள் வைத்து, கருவைப் போற்றி வளர்க்கும் அன்னை போல், சிறுகச் சிறுகச் சேமித்த செல்வங்களைப் பாதுகாக்கும் இரும்பு பெட்டகம் போல், தோல் நம் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது.தோலுக்கு இந்த உறுதியையும், வலிமையையும் அளிப்பது, 'கொலாஜன்' என்ற புரதம். வலிமையான நம் தோல், வளைந்து கொடுக்கும் தன்மையும் உடையது. 'எலாஸ்டின்' என்ற புரதம், இந்த இசைவுத் தன்மையை அளிக்கிறது.நம் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்றவாறு, பொறுமையுடன் இசைந்து கொடுக்கும் நம் தோலே, நம் உடல் உறுப்புகளின் தாய் என்பதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கொலாஜன், எலாஸ்டின் ஆகியவற்றின் திறன் சற்று குறைவதால், முதுமையில் தோல் சுருங்கத் துவங்குகிறது.ஆனால், இந்த இரண்டு புரதங்களும், இந்தியர்களின் தோலில் வலுவிழக்காமல் இருக்கின்றன. அதனால் தான், ஐரோப்பியர்களை ஒப்பிடும் போது, நம்முடைய தோலில் எவ்வளவு முதுமையிலும், அவ்வளவாக சுருக்கங்கள் தோன்றுவதில்லை. மேற்தோல் அடுக்கின் மேல், இயற்கையாக அமைந்த மிக மெல்லிய எண்ணெய் படலம், பயணங்களில் நம் பெட்டிகளைக் காக்கும் பாதுகாப்பு உறை போல், மற்றுமொரு கூடுதல் கவசமாக அமைகிறது.

தடுப்புச் சுவர்

நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான நீர் மற்றும் தாதுக்கள், நம் உடலை விட்டு வெளியேறாமல் காக்கும் பெருந்தடுப்புச் சுவராகவும் அமைந்துள்ளது.ஒரு மிகப் பெரிய அரண்மனையின் தலைமைக் காவலாளி போல், நம் உடலென்னும் அரண்மனையை காக்கும் தோல், நம் உடலுக்கு தேவையான, காற்றிலுள்ள ஈரம், தோலின் மிருதுத் தன்மையை தக்கவைக்கும் எண்ணெய் மற்றும் தோலில் தடவும் களிம்புகள் போன்றவற்றை மட்டும் பரிசோதித்து, தோலின் உட்செல்ல அனுமதிக்கும் சோதனைச் சாவடிப் பணியையும் செய்கிறது.தோலின் இந்த பெரும் தடுப்புச் சுவர் பணியால் தான், தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருளும், நம் உடலுக்குள் புகாமல் இருக்கிறது. அதே சமயம், நன்மை செய்யும் பொருட்கள் முறையாக பரிசோதிக்கப்பட்ட பின், உட்செல்ல முடிகிறது. ஒரு தேசத்தின் அமைச்சகங்களில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கே, முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், நம் உடலின் பாதுகாப்பு அமைச்சகமான தோலை, நாம் எவ்வளவு அலட்சியப்படுத்த முடியுமோ, அவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம்.

நோய் எதிர்ப்புதோல் என்ற எல்லை பாதுகாப்பு படை, பாதுகாப்பதோடு மட்டும் அல்லாமல், எதிரிகளை போராடி வீழ்த்தவும் செய்கிறது. நோய்க் கிருமிகள், விலங்குகள், மற்ற மனிதர்களின் தாக்குதல், தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் போன்ற எல்லா எதிரிகளையும் பற்றிய முதல் தகவல் அறிக்கையை, நம் உடலுக்கு சமர்ப்பிப்பது தோல் தான்.தோலெங்கும் பரவியுள்ள, 'லேங்கர்ஹான்ஸ்' செல்கள், சிறு சிறு காவல் நிலையங்கள் போல் செயல்பட்டு, குற்றவாளிகளை இனங்கண்டு, நம் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்துக்கு உடனுக்குடன் சொல்வதோடு, அவற்றை நினைவில் கொண்டு, மீண்டும் அவை நம்மை நெருங்காதவாறு, நம் உடலை கட்டிக் காக்கின்றன.தோலின் இந்த அரும்பெரும் இடையறாத, நோய் எதிர்ப்பு முதல் தகவல் பணியால் தான், நம் உடலில், 99 சதவீதம் நோய்கள், முன் கூட்டியே தவிர்க்கப்படுகின்றன.

வெப்ப நிலைஅதி வெப்பமான ஆப்பிரிக்க கண்டமாக இருந்தாலும், பனி நிறைந்த அண்டார்டிக்காவாக இருந்தாலும், அங்கு வாழும் மனிதர்களின் உடல் வெப்பம், ஒரே சீராக, 98.4 டிகிரி பாரன்ஹீட்டிலேயே இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா... நம் தோல் தான்.புறச் சூழலில், வெப்பம் மிகுதியாக இருந்தாலும், பனி மிகுதியாக இருந்தாலும், தோல் ஒரு குளிர் பதனக் கருவி போலச் செயல்பட்டு, நம் உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்வதால் தான், நம் உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தும், அதிக வெப்பத்தில் வெந்து போகாமலும், அதிகப் பனியில் உறைந்து போகாமலும் பாதுகாக்கப்படுகின்றன.புறச் சூழலில் வெப்பம் மிகுதியாகும் போது, தோலின் ரத்த நாளங்கள் சுருங்கி, அகச் சூட்டைத் தணிக்கின்றன. அதே போல், புறச் சூழலில் பனி மிகுதியாகும் போது, தோலின் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடல் வெப்பத்தை அதிகரிக்கின்றன. நம் தோலெங்கும் பரவியுள்ள வியர்வை சுரப்பிகள் ஓய்வில்லாமலும், மின்சாரக் கட்டணம் இல்லாமலும், அணு தினமும் உழைக்கும் நுண்ணிய குளிர்ச்சாதனக் கருவிகள் என்று அறியும் போது, நாம் வியப்பின் உச்சத்திற்கே சென்று விடுவோம்.கோடைக் காலங்களிலும், அதிக வெப்பமும், காற்றில் ஈரப்பதம் நிறைந்த கடலோரப் பகுதிகளிலும்,நம் தோலின் சுரப்பிகள் மிக அதிகமாக வியர்வையைச் சுரப்பதால், வியர்வை தோல் முழுதும் பரவி, நம் உடல் ஈரமாகி விடுகிறது. அதன் மேல் காற்று பட்டவுடன், நம் உடல் குளிர்ந்து விடுகிறது.புறச் சூழலில், எவ்வளவு வெப்பம் அதிகமாக இருந்தாலும், இந்த வியர்வை சுரப்பிகள் எனும், தோலின் அமுதசுரபிகளால், உடல் உறுப்புகள் வெந்தழிந்து போகாமல், பாதுகாக்கப் படுகின்றன.அதே போல், புறச்சுழலில் பனி அதிகமாக இருக்கும் போது, வியர்வைச் சுரப்பி வெகுவாகக் குறைந்து, உடல் வெப்பம் அதிகரிக்கிறது.

இதனால், உடல் உறுப்புகள் உறைந்து போய், செயலிழந்து விடாமல் பாதுகாக்கப் படுகின்றன.இந்த அறிவியல் உண்மைகள் புரியாமல், நாம் கோடைக் காலங்களில் கூட, மேலை நாட்டு மனிதர்கள் போல், மிக இறுக்கமான, மிக கனமான, காற்றே புகாத உடையணிந்து கொள்கிறோம்.உடல் வெப்பத்தை நாமே அதிகரித்து விட்டு, உடல் சூடாகி விட்டது என்று, சூட்டை தணிக்க செயற்கையான குளிர்சாதனக் கருவிகளைப் பயன்படுத்தி, நம் உடலையும் கெடுத்து, சுற்றுச் சூழலுக்கும் என்றும் நீங்காத கேட்டை விளைவிக்கிறோம்.இன்றைய சூழலில், மனிதனுக்கு சுத்தமான காற்றை, இலவசமாக வாரி வழங்கும் அற்புத வரமான மரங்களையும், நாம் இழந்து வருகிறோம். நம் நாட்டு தட்ப வெப்பத்துக்கும், நம் சூழலுக்கும் ஏற்றவாறு, தளர்வான, மெல்லிய, காற்று எளிதில் புகக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவதன் மூலமும், நம்மால் இயன்ற வரை மரங்களை வளர்த்து, காற்று மிகுதியாகச் செய்வதன் மூலமும், நம் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும் தோலுக்கு, நாம் உறுதுணையாக இருப்போம்.தோலின் மற்ற முக்கிய பணிகளான, உணர்வூட்டும் பணி, சமூக பாலின ஊடகப் பணி, உயிர் வேதியியல் பணி, சுவாசப் பணி, கழிவகற்றும் பணி குறித்து, அடுத்த வாரக் கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement