Advertisement

நிரந்தர பற்களின் ஆரோக்கியம் பால் பற்களின் பராமரிப்பிலும் உள்ளது!

குழந்தை பிறந்த ஆறு மாதம் முதல், ஆறு வயது வரை முளைப்பவை, பால் பற்கள். நிரந்தரப் பற்களின் ஆரோக்கியம், பால் பற்களின் பராமரிப்பிலும் உள்ளது. பால் பற்கள் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்பதால், அதிகம் கவனத்தில் எடுத்து பராமரிப்பதில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தையின் முதல் பிறந்த நாளன்று, பல் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், பால் பற்கள் தானே என்று, நாம் முறையாக பராமரிக்காமல் விட்டு விடுகிறோம்.பால் பற்களை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தான், நிரந்தரமாக முளைக்கும் பற்கள் ஆரோக்கியமானதாக முளைக்கும். உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை இவை இரண்டையும் முறையாக பின்பற்றுவதன் மூலம், இதைச் செய்ய முடியும்.இரவில், தாய்ப்பால் குடித்துக் கொண்டே துாங்குவது, பால் பாட்டிலை வாயில் வைத்து சப்பியபடி இருப்பதை பழக்கவே கூடாது. பல் சொத்தை ஏற்படுத்துவதில் பிரதானமாக இருப்பது, இந்த பழக்கங்கள்.தொடர்ந்து இதுபோல் இருந்தால், பால் பற்கள் அனைத்திலும் சொத்தை ஏற்பட்டு, இரண்டு வயதாகும் போது, ஒரு பல்கூட மிஞ்சாது. சொத்தையால், பற்களின் நிறம் மாறி, கறுப்பாக இருக்கும்.

பல் சிகிச்சை




பொதுவாக, முதல் இரண்டு ஆண்டுகளில், பெரிதாக பிரச்னை எதுவும் வராது. பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது தான், பிரச்னை இருப்பது தெரிய வரும்.பல்லில் சொத்தை அதிகம் இருந்தால், பல்லை எடுத்து விட்டு, அந்த இடத்தில், பெரியவர்களுக்கு செய்வது போல், 'ரூட் கேனால்' சிகிச்சையில், ஈறுகளின் உள்ளே, பல்லின் அடி பகுதியில், சொத்தை ஏற்பட்ட பகுதியை சரி செய்து, அந்த இடத்தில், 'கேப்' போட வேண்டும்.காரணம், சொத்தை இருந்த பல்லை, 2வயதில் எடுத்து விட்டால், அந்த இடத்தில் நிரந்தரமான பல், 6 வயதில்தான் முளைக்க ஆரம்பிக்கும்.அதுவரை, அந்த இடம் இடைவெளியுடன் இருந்தால், பக்கத்தில் வளர வேண்டிய பல்,அந்த இடத்தில் மாறி முளைப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், சீரான வரிசையில் பற்கள் இல்லாமல் இருப்பது, முன் பக்கம் துாக்கலாக முளைப்பது, ஒரு பல் மேல் இன்னொரு பல் போன்ற பிரச்னைகள் வரலாம்.ஆறு மாதத்தில் துவங்கி, 12 வயது வரை, ஒவ்வொரு பல்லும் குறிப்பிட்ட வயதில் விழுந்து, அந்த இடத்தில் நிரந்தர பற்கள் முளைக்கும். எந்த வயதில், எந்த பல் விழ வேண்டுமோ, அந்த வயதில் தான் விழ வேண்டும். பல்லை எடுப்பதும், அது விழ வேண்டிய வயதில் தான் எடுக்க வேண்டும். முன்போ, பின்போ எடுக்கக் கூடாது.சொத்தை அதிகமாகி, வேறு வழியில்லாமல், சொத்தைப் பல்லை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பல் எடுத்த இடத்தில், அதன் பக்கத்தில் உள்ள பல் நகராமல் இருப்பதற்கான, 'ஸ்பேஸ் மெயின்டனன்ஸ்' செய்ய வேண்டியது கட்டாயம்.இதுதவிர, சொத்தை இல்லாவிட்டாலும், எந்த வயதில் பால் பல் விழுந்து, நிரந்தர பல் முளைக்க வேண்டுமோ, அந்த வயதில் தான் முளைக்க வேண்டும். அப்படி விழாத பட்சத்தில், அந்த இடத்தில் முளைக்க வேண்டிய நிரந்தர பல், முளைக்க இடம் இல்லாமல், நாக்கை ஒட்டியோ, ஈறுகளின் பக்கவாட்டில், உள் பக்கம் அல்லது வெளிப் பக்கமாகவோ இடம் மாறி முளைக்கலாம்.பால் பற்கள் இருக்கும் போதே, பல் சொத்தை இல்லாமல், ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிரந்தரப் பல் முளைக்கும். பிறந்த ஓராண்டிற்குள், பல் பரிசோதனை செய்தால், சொத்தை இல்லாமல், வேறு சில காரணங்களால், சரியான வயதில் பால் பல் விழவில்லை என்றால், காரணத்தை கண்டறிந்து, சரி செய்யலாம்.இது தவிர, குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், உதடு கடிப்பது, வாயால் மூச்சு விடுவது, விரல் சூப்புவது போன்ற பழக்கங்கள் இருந்தால், தெத்து பல், சுவாச பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், இரண்டு வயதிற்குள் மாறி விட வேண்டும்.சிலருக்கு, 30 வயது வரையிலும், இப்பிரச்னை உள்ளது. 15 வயதிற்கு மேல் இப்பழக்கம் இருந்தால், அதனால் வரும் கோளாறுகளை, அறுவை சிகிச்சை செய்தே சரி செய்ய முடியும்.

பல் பராமரிப்பு



குழந்தைக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் முன்னதாகவே, ஈறுகளை சுத்தம் செய்வது முக்கியம். காலையில் விழித்ததும், குழந்தையை பராமரிப்பவர்கள், தங்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின், மென்மையாக ஈறுகளை மசாஜ் செய்து, ஒரு மிடறு தண்ணீர் குடிக்க தர வேண்டும்.இரவில் தரும் பாலில், சர்க்கரை அளவை குறைவாக தரலாம். 'பிரஷ்' செய்ய முடியாத வயதில் இருக்கும் குழந்தைக்கு, இரவில் பால் குடித்த பின், ஒரு மிடறு தண்ணீர் குடிக்கத் தருவது, பாலில் உள்ள சர்க்கரை பற்களில் தங்கி, சொத்தை ஏற்படுதுவதைத் தவிர்க்கும்.பற்கள் முளைக்க துவங்கியதும், விரல்களில் பொருத்தக் கூடிய, 'டூத் பிரஷ்'கள் உதவியுடன், பற்களை சுத்தம் செய்யலாம். பற்கள் தவிர, ஈறுகள், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.வளரும் குழந்தைகளுக்கு, சாக்லெட், கேக் போன்ற, அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தருவதை, தவிர்க்க வேண்டும். ஆறு மாதம் அல்லதுஆண்டிற்கு ஒருமுறை பல் டாக்டரிடம்காட்டி, சொத்தை இருந்தால், தேவையான சிகிச்சையை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement