Advertisement

அதிசய ரொட்டி!

காந்திநகரில் வசித்து வந்தான் வேணு; மிகவும் பணக்காரன்; உலக மகா கஞ்சன். ஒரு காசு செலவிடும் நிலை ஏற்பட்டாலும், தவிர்க்கும் வழி பற்றியே யோசனை செய்வான்.
அவனுக்கு ஏராளமான விவசாய நிலங்கள் இருந்தன. அவற்றை வைத்திருந்தால், வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டுமே என்று, விற்று பணமாக்கினான்.
பரம ஏழை போல வேஷமிட்டு திரிவான்; யாராவது, வேஷ்டி, புடவை தானம் செய்தால், முதல் ஆளாக ஓடி சென்று வாங்குவான்.
சாப்பாட்டுக்கு பணம் செலவிடுவதை எண்ணி மனம் வருந்துவான். கோவில்களில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கித் தின்று, நாட்களை ஓட்ட நினைத்தான்.
ஒரு நாள் -
அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவரிடம் குறைகளைக் கூறி, பரிகாரம் தேட திரண்டனர் மக்கள். வேணுவும், அந்த முனிவரிடம் சென்று, 'நான் மிகவும் ஏழை... சோற்றுக்கே கஷ்டப்படுகிறேன்...' என்று கதை அளந்தான். வறுமையை போக்க வேண்டும் என்றும் வேண்டினான்.
அப்போது, முனிவருக்கு காணிக்கையாக சில சோள ரொட்டிகளை ஒருவர் கொடுத்தார். அவற்றில், இரண்டு ரொட்டிகளை வேணுவிடம் கொடுத்து, 'நிறைந்து வாழ்...' என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.
அங்கிருந்தவர்கள் கடும் வெறுப்பில், 'எல்லாம் தெரிந்த முனிவர், தகுதியில்லாதவனுக்கு ஆசி வழங்கினாரே...' என்று வருந்தினர்.
சிறுமுறுவல் பூத்து, அமைதியானார் முனிவர்.
வேணுவுக்கும் ஏமாற்றமாக இருந்தது. 'தங்க காசு எடுக்க ஏதாவது மந்திரம் சொல்லித் தருவார் என்று எதிர்பார்த்து சென்றால், சோள ரொட்டியை கொடுத்து அனுப்பி விட்டாரே' என நினைந்து வருந்தினான். ஆனால், 'போனால் போகட்டும்... இன்றைய உணவுக்கு, ரெண்டு ரொட்டிகள்' என எண்ணியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.
மனைவியை அழைத்து, 'அரை ரொட்டி எனக்கு, அரை ரொட்டி உனக்கு... மீதியுள்ளதை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்...' என்றான்.
ரொட்டியை பிட்டு வாயில் போட்டு, மெல்ல ஆரம்பித்தான். விழுங்க விழுங்க வாயில் ரொட்டி தீரவில்லை; கையில் ரொட்டி அப்படியே இருந்தது.
வயிறு நிரம்பி வெடித்து விடும் போல இருந்தது; வாய் வலி வேறு தாங்க முடியவில்லை.
துப்பவும் மனம் வரவில்லை.
பயந்து போனவன், முனிவரிடம் ஓடினான். பேசக் கூட முடியவில்லை. ரொட்டித் துண்டால் வாய் நிரம்பி வழிய, 'மன்னித்து விடுங்கள்; இந்த ரொட்டியிடமிருந்து காப்பாற்றுங்கள்...' என, கதறித் துடித்தான். வாய்க்குள்ளிருந்த ரொட்டி மறைந்தது.
'போதும் என, சொல்ல வைக்கும் ஒன்று, உணவு தான்; அதை வாங்கும் மனம் உன்னிடம் இல்லை... பணம் மரணத்திற்குப் பின் உன்னுடன் வராது.
'செலவு செய்ய மனமில்லாத கஞ்சனான நீ, இதை பாதுகாக்கும் பூதமாகத்தான் அலைவாய். செல்வத்தை நன்கு அனுபவிப்பதுடன், தகுதியானவர்களுக்கு கொடுத்து உதவு...' என்று அறிவுரை கூறினார்.
அது மனதில் உறைக்க, புது மனிதனாக வீடு திரும்பினான் வேணு.
தளிர்களே... சிக்கனமாக வாழப்பழகுங்க; கஞ்சத்தனம் பண்ணாதீங்க...

உமா ஸ்ரீதரன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement