Advertisement

இளஸ்.. மனஸ்..! (30)

அன்பு பிளாரன்ஸ்...
மகனை நினைத்து, கவலைப்படும் தாய் எழுதுவது... என் மகன், 5ம் வகுப்பு படிக்கிறான்; 10 வயதாகிறது. மூன்று வேளையும், சரிவர சாப்பிட மாட்டான். எவ்வளவு பிரமாதமாக சமைத்தாலும், 'இதென்ன இந்த கலரா இருக்கு... இதுலேயிருந்து வர்ற வாசனையே சரியில்லையே...' என்பான்.
பலவந்தப்படுத்தினால், வாந்தி எடுத்துடுவான். 'கன்னாபின்னானு சாப்பிட்டு குண்டு பிசாசாக மாட்டேன்' என்கிறான். எங்காவது, விருந்து நிகழ்ச்சிக்கு போனால், வேண்டா வெறுப்பாக இரண்டு விள்ளல் சாப்பிட்டு, இலையை மூடி விடுகிறான்.
நொறுக்கு தீனி அறவே கிடையாது; பார்க்க பென்சில் குச்சி மாதிரி இருப்பான். எல்லாரும் அவனை, 'நரம்பன்' என்று தான் அழைப்போம். ஊட்டச்சத்து பானம் போன்ற, எதையும் தொட மாட்டான். நன்றாக சாப்பிடுபவர்களை, 'தின்னி பண்டாரங்கள்' என கேலி செய்கிறான்.
என் மகனும், மற்ற சிறுவர்கள் போல நன்கு சாப்பிட, வழி வகைகள் கூறுங்கள்.

அன்பு சகோதரிக்கு...
உங்கள் மகனுக்கு, 'அனரெக்சியா நெர்வோசா' என்ற மனநோய் உள்ளது; பேய் தீனி தின்பவர்களுக்கு, 'புலிமியா நெர்வோசா' என்ற எதிர்மறை மனநோய் இருக்கும்.
மகன் எடை குறைந்து, உடல் வளர்ச்சி இல்லாத சிறுவன் போல் இருப்பான். அடர்த்தியில்லாத தலைகேசம், மலசிக்கல், செரிமான கோளாறுகள் இருக்கும். முன்கோபியாக இருப்பான். கண்ணாடி முன் நின்று, 'ஒல்லியா, குண்டா' என ஆராய்வான்.
இது போன்ற பாதிப்புள்ள சில குழந்தைகள், மண், சோப், சாக்பீஸ், மணல், ஐஸ்கட்டி, தலைமுடி போன்றவற்றை சாப்பிடுவர். இதை, 'பிகா' என்பர்.
உங்கள் மகனுக்கு இதய துடிப்பு குறைந்திருக்கும்; ரத்த அழுத்தம் இறங்கியிருக்கும்; எலும்புகள் பலவீனமாயிருக்கும். தசைகள் தளர்ந்திருக்கும்; விரல் நுனியில், நீல நிறம் பூத்திருக்கும். இவையெல்லாம் நோய் அறிகுறிகள்.
கீழ்க்கண்டவாறு சிகிச்சை தந்து, இதை குணப்படுத்தலாம்.
* மனநல நிபுணரிடம் அழைத்து சென்று சிகிச்சை தரலாம்
* 'டாக் தெரபி' எனப்படும், இயல்பான உரையாடல் மூலம், நோய் நீக்கம் செய்யலாம்
* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை வழங்கலாம்
* யோகா, தியான பயிற்சி பெற்று தினமும், ஒரு மணிநேரம் செய்யலாம்
* 'ஆர்ட் தெரபி' கொடுக்கலாம்
* பத்து வயது சிறுவன், என்ன உயரம், எடை இருக்க வேண்டும் என்பதை, 10 வயது சிறுவர்கள், 100 பேரை வைத்து, அட்டவணைப் படுத்த வேண்டும்; சராசரியாக இருக்க வேண்டிய எடை, உயரத்தை ஒப்பிட்டு காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
ஒரு வாகனம் ஓட பெட்ரோல் போன்ற எரிபொருள் தேவை; ஒரு மனிதன் செயல்பட, ஆக்சிஜன், நீர், உணவு தேவை. ஒரு மனிதன் சரிவர உணவை உட்கொள்ளா விட்டால், நலிந்து, மெலிந்து நடை பிணமாவான்.
வயிறு புடைக்க சாப்பிட வேண்டாம். இரைப்பையின் கொள்ளளவில், மூன்றில் ஒரு பகுதியாவது சாப்பிட வேண்டும். குண்டு அல்லது ஒல்லியாக இருப்பது மரபணுவை பொறுத்தது.
அளவான உணவு, தினமும், எட்டு மணிநேர பணி மற்றும் முறையான உடற்பயிற்சி இருந்தாலே, உடல் அமைப்பு குண்டாகாது.
வித்தியாசமான, நல்ல வாசனையான, உணவை சமைத்து, சாப்பிட சொல்லலாம்; 'கொஞ்சம் சாப்பிட்டு பார், பிடிக்கா விட்டால் வைத்து விடு' என, அறிவுரைக்கலாம்.
* தினமும், இருவேளை மீன் எண்ணெய் மாத்திரை விழுங்க கொடுங்கள்
* தனியாக உண்ண விட வேண்டாம்; ஏழெட்டு பேருடன் சேர்ந்து உண்ணட்டும். கூட்டாய் உண்ணும் போது, உணவின் சிறப்பை உணர்ந்து அதிகம் உட்கொள்ளக் கூடும்
* மகனுடன் அன்னியோன்யமாய் பேசி, மனத்தடையை போக்க முயலுங்கள்
* தினமும், இரண்டு முறை காளான் சூப், கீரை சூப் போன்ற திரவ உணவுகளை கொடுங்கள்
* விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளை கொடுக்கலாம்
* ஒரே தட்டில், அம்மாவும், மகனும் சாப்பிடுங்கள். சாப்பாடும், அன்பு பரிமாற்றமும் ஒரே நேரத்தில் நடக்கும்
* அதிக கலோரி, கொழுப்பு சத்து இல்லாத உணவை உண்டால், குண்டாக மாட்டோம் என தெளிவுப்படுத்துங்கள்.
உணவு உண்ணுதல் இழிவான விஷயமல்ல; சமையல் கலை உன்னதமான கலாசார வடிவம். ஒருவன், இன்னொரு மனிதனை மகிழ்ச்சிப்படுத்த விருந்தோம்பல் தான் முழுமையாக உதவுகிறது.
'ஒவ்வொரு தானியத்திலும், அதை உண்ணும் மனிதனின் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. உணவை உண்டு உடம்பை பேணினால் தான், நினைத்ததை சாதிக்க முடியும்...' என்று மகனுக்கு அறிவுரை கூறுங்கள்.
பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement