Advertisement

அப்பம் ஒன்று ஆள் இரண்டு!

கல்லுப்பட்டி என்ற ஊரில், மனைவியுடன் வசித்து வந்தான் சேகரன். இருவரும் கருமிகள். சம்பாதிக்கும் பணத்தில், சில்லரைக் காசு இருந்தால் தான் செலவு செய்து சாப்பிடுவர். ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும், அப்படியே சேமித்து வைத்துக் கொள்வர்.
ஒரு நாள் -
கையிலிருந்த சில்லறைக் காசுக்கு, ஒரு அப்பம் தான் சுட முடிந்தது. இரண்டு பேரும், ஒரு அப்பத்தை எப்படி சாப்பிடுவது... ஒருவர் தான் சாப்பிட முடியும். 'யார் சாப்பிடுவது...' என்ற சண்டை ஏற்பட்டது.
சேகரன், 'நான் தான் சம்பாதித்து பணம் கொண்டு வந்தேன்; அதனால், சாப்பிடும் உரிமை எனக்குத்தான்...' என்றான்.
'இல்லை... இல்லை... வீட்டு வேலை முழுவதையும் செய்கிறேன்; இந்த அப்பத்தையும் சுட்டேன்; அதனால், நான் தான் சாப்பிடுவேன்...' என்றாள் மனைவி.
இவ்வாறு சண்டை நடந்த போது, உறவினர் ஒருவர் வந்தார். வழக்கை கேட்டவர், 'இந்த அப்பத்தில், இருவருக்கும் உரிமை உள்ளது; நான் சொன்னபடி செய்யுங்கள்; அதில், வெற்றி பெற்றவருக்கே அப்பம்...' என்றார்.
'என்ன செய்ய வேண்டும்...' என, ஆவலாக கேட்டனர்.
'இருவரும் கண்ணை மூடி நன்றாக துாங்க வேண்டும்; யார், பின்னால் எழுந்திருக்கிறாரோ, அவருக்கே உரியது இந்த அப்பம்...' என்றார்.
இருவரும் கண்ணை மூடியதும், சந்தடியில்லாமல், அந்த அப்பத்தை எடுத்து போய் விட்டார், உறவினர்.
மறுநாள் காலை -
கணவனும், மனைவியும் படுக்கையை விட்டு எழவே இல்லை. முதலில் எழுந்து விட்டால், அப்பம் கிடைக்காமல் போய் விடுமே என்ற அச்சம் தான். அன்று மாலையும் கடந்தது.
மறுநாள் விடிந்தது. அண்டை அயலாருக்கு சந்தேகம் வர, 'இரண்டு நாளாக எழவே இல்லையே... இறந்து தான் போய் விட்டனரோ' என்று எண்ணினர்.
வீட்டுக்குள் சென்று எழுப்பினர்; இருவரும் அசையவில்லை. இறந்து விட்டதாக முடிவு செய்து, இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர். உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று, நெருப்பு மூட்டினர்.
நெருப்பு எரிந்து, முதலில் கணவன் காலைச் சுட்டது. சூடு பொறுக்க முடியாமல் எழுந்து, 'ஐயோ... அப்பம் போனதே...' என்று ஓலமிட்டபடியே ஓடினான்.
கணவன் எழுந்தது தெரிந்ததும், 'அப்பம் எனக்கு தான்...' என்று கூவியபடியே எழுந்து ஓடினாள் மனைவி.
ஊராருக்கு ஒன்றும் புரியவில்லை; வியப்புடன் இருவரையும் பார்த்து நின்றனர். அவர்களுக்கு போட்டி வைத்த உறவினர், நடந்தவற்றை விவரமாக விளக்கினார்; ஊரார் சிரித்தனர்.
தளிர்களே... உங்களுக்கும் சிரிப்பு வருதா... இப்படி ஒரு கஞ்சத்தனமான வாழ்க்கை தேவை தானா என்பதை, முடிவு செய்து கொள்ளுங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement