Advertisement

அதிமேதாவி அங்குராசு!

கை தட்டுங்கள்!
தினமும் சில நிமிடங்கள் கைகளை தட்டி பயிற்சி செய்தால், ஆரோக்கியம் பெறலாம். இந்த, 'கிளாப்பிங் தெரபி' என்ற கைத்தட்டல் சிகிச்சைக்கு, மவுசு கூடி வருகிறது.
பொது நிகழ்ச்சிகளில் யாரையாவது புகழ்ந்து பேசும் போது, கை தட்டி வரவேற்கிறோம். அதை, அத்துடன் நிறுத்திவிடாமல், தினமும் பயிற்சியாக செய்தால் பயனடையலாம்.
உள்ளங்கையில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு நுனிகள் அமைந்துள்ளன; 30க்கும் மேற்பட்ட, வர்மப் புள்ளிகள் உள்ளன. கை தட்டும் போது, அவை துாண்டப்பட்டு, உடல் முழுவதும் உணர்வு படர்ந்து ரத்த ஓட்டம் துாண்டப்படுகிறது.

கைகளை தட்டுவதால் ஏற்படும் பலன்கள்:
* மன ஓட்டம் சீராக இருக்கும்; பதற்றம் கட்டுப்படும். நேர்மறை சிந்தனை எழுந்து, மன சோர்வை கட்டுப்படுத்தும்
* குழுவாக இணைந்து கை தட்டும் பயிற்சி, மகிழ்ச்சியை பெருக்கும்; மன பலத்தை சீராக்கி, செயல்திறனை கூட்டும்; இணைந்து பணியாற்ற உதவும்
* ரத்த அழுத்த அளவை சீராக்கி மேம்படுத்தும். இதனால், இதயநோய் அபாயம் குறையும். சுவாச கோளாறு பிரச்னைகளும் தீரும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதால், பருவ மாற்ற காலங்களில் வரும், நோய் தொற்று அபாயம் குறையும்
* அறிவாற்றல் மேம்படும்; நினைவுத்திறனும் கூடும்; கவனச்சிதறல் கட்டுப்படுவதால் கல்வித்திறன் ஓங்கும்
* முதுகு வலியின் தீவிரம் குறையும்; எலும்புகளும் புத்துணர்வு பெறும். ரோம கால்களை சுற்றியுள்ள, 'செல்' என்ற உயிரணு வளர்ச்சியை துாண்டுவதால், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் கட்டுக்குள் வரும்
* உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, துாக்கமின்மை, தலைவலி, மூக்கடைப்பு போன்ற நோய்களின் வீரியம் குறையும்
உள்ளங்கைகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, விரல்கள் நன்கு மோதும்படி கைகளைத் தட்டி பயிற்சி எடுக்கலாம். காலையில் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நலம் பெற...
கொத்தமல்லி தழையில் இரும்பு சத்து அதிகம். இதை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை நோய் குணம் ஆகும்.
எலுமிச்சை, தக்காளி அல்லது பெரு நெல்லிக்காயை, தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் நல்ல ஆற்றலை பெறலாம்; அளவுடன் சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம்.
உணவிற்குப் பின், இரண்டு நெல்லிக்காயை மென்று சாப்பிடலாம். ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை தினமும் இரவில் சாப்பிடலாம்.
சாப்பிடுவதற்கு, 15 நிமிடங்களுக்கு முன், கொதிக்க வைத்த, இளம் சூடான தண்ணீரை குடிக்கலாம். இது, நீரிழிவு நோயின் வீரியத்தை குறைப்பதுடன், உடலில் தேவையற்ற கொழுப்பு இருந்தால் கரைத்து விடும்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement