Advertisement

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

''ஆபீசுக்கு நேரமாச்சு, பத்மினி... சாப்பாடு பை மற்றும் வண்டி சாவியையும் எடுத்து வா,'' என்று குனிந்து, ஷூ லேசை கட்டியவன், மனைவியிடமிருந்து பதிலேதும் வராமல் போகவே, நிமிர்ந்து பார்த்தான்.
அவள் பார்வையும், கவனமும் எதிர் வீட்டிலேயே பதிந்திருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே, எதிர் வீட்டு கதவு திறக்க, ''பத்திரம், அத்தை... போயிட்டு வர்றேன்... கதவை தாழ் போட்டுக்கோங்க... மறக்காம, துணிகளை பிழிஞ்சு காய வெச்சிருங்க... ராத்திரி சமையலுக்கு வெங்காயம், காய்கறி எல்லாம் நறுக்கி வெச்சிருங்க... உங்க பேரன், 'நைட் டிபனு'க்கு சப்பாத்தி வேணும்ன்னான்... மாவு பிசைஞ்சு வெச்சிருங்க,'' என்றாள், சந்தியா.
''நான் எல்லாம் பாத்துக்கறேன்... நீ கவனமா போயிட்டு வா,'' என்று, கதவை சாத்தி, அவர் உள்ளே போனதும், எதிர் வீட்டிலிருந்த பார்வையை எம்மேல் திருப்பினாள், பத்மினி.
''என்னவோ கேட்டீங்களே... சரியா காதுல விழலே,'' என்றாள்.
''எப்படி விழும், ஐம்புலன்களும் எதிர் வீட்ல இல்ல பதிஞ்சு கிடக்கு... போயி, சாப்பாடு பை, வண்டி சாவி, 'மொபைல் போனை'யும் எடுத்து வா,'' என்றான்.
''ம்க்கும்... இன்னும் கொழந்தையாட்டம், எல்லாத்தையும் கையில எடுத்து குடுக்க வேண்டி இருக்கு... இதுல மிரட்டல் வேற... இருந்தா, சந்தியா மாதிரி இருக்கணும்... என்ன ஒரு கொடுப்பினை இருந்தா, இப்படி ஒரு மாமியார் கெடைப்பாங்க... நமக்கும் தான் வாய்ச்சிருக்கே,'' என, காதில் விழும்படி முணுமுணுத்தவாறே வந்தாள்.
சந்தியாவின் குடும்பம், எதிர் வீட்டுக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. அவளது கணவர், துபாயில் வேலை செய்வதாகவும், ஒரு மாத விடுப்பில், ஆண்டுக்கொரு முறை வருவார் என, எங்க வீட்டுக்கும், சந்தியாவின் வீட்டுக்கும், வேலை செய்யும் கண்ணம்மா சொன்னாள்.
'இந்தாப் பாரு, பத்மினிம்மா... சந்தியாவோட மாமியாக்காரிக்கு, 75 வயசாவுதாம். வூட்டுல எல்லா வேலையும் அந்தம்மா தல மேல தான். துணிகளை நாந்தான் தொவச்சி, அலசி வெக்கிறேன். ஆனா, நான் புழிஞ்சு காயப் போடக் கூடாதாம்; மாமியாரு தான் புழிஞ்சு காயப் போடணும்ன்னு, மருமவ சட்டம்.
'அப்பால, தேச்ச பாத்திரத்தை எல்லாம் தொடச்சு அலமாரில அடுக்கறது, காய்கறி நறுக்கறது, சப்பாத்திக்கு மாவு பிசையறது, காஞ்ச துணிங்களை இஸ்திரி போட்டு பீரோவுல அடுக்கறது...
'இஸ்கோலு விட்டு பேரப்புள்ளைங்க வந்த ஒடன, அதுங்கள குளிப்பாட்டி, பாலு, பட்சணம்ன்னு குடுத்து, சின்னப் புள்ளையாட்டமா தானும், அதுங்களோட பந்து வெளையாடறதுன்னு, மூஞ்சி சுளிக்காம எல்லா வேலையையும் செய்யுது. அனாவசியமா பேசாது. ஆனா, மொவத்துல எப்பவும் ஒரு சோகம் மட்டும் தெரியும்.
'மவன் வெளியூர்ல... மருமவ ராஜ்ஜியம் தான், கொடி கட்டிப் பறக்குதே...' என்று, சந்தியா வீட்டு விஷயங்களை வெளியில் கொட்டி, சுடச்சுட காபியை வாங்கி குடித்து வேலையை கவனிப்பாள்.
இத்தனை விஷயமும், பத்மினி மூலமாக மற்ற வீடுகளுக்கும் பரவ, அனைவரும் சந்தியாவை ஒரு வில்லியாக பார்த்தனர். சந்தியா பாவம், காலை, 9:00 மணிக்கு வேலைக்கு கிளம்பினால், இரவு, 7:00 மணிக்கு தான் திரும்புவாள். நானும் அதே நேரத்தில் திரும்புவதால், புன்னகையுடன் என்னை, ''ஹலோ அங்கிள்,'' என்று சொல்வாள்.
என்னை பொறுத்த வரை, சாந்தமான பெண், சந்தியா. அனைவரிடமும் நட்பான ஒரு புன்னகை. யாருடனும் அனாவசிய பேச்சு வைத்து கொள்வதில்லை. எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. இப்படி அவள் இருப்பது, எங்கள் காலனி பெண்களுக்கு பிடிக்கவில்லை. 'ரொம்பத்தான் மண்டை கர்வம்...' என, முகத்தை சுருக்குவர்.
நானும், பத்மினியும் சாயந்திரம் கடைக்கு போய் மளிகை பொருட்களுக்கு, 'லிஸ்ட்'டைக் கொடுத்துவிட்டு, மெயின் ரோடுக்கு வரும்போது, 'பைக் டயர்' பஞ்சரானது.
''எப்பவும் இப்பிடித்தான்... எனக்கு நேரமே சரியில்ல... எதோ இந்த மளிகை சாமான் வாங்கற சாக்குலயாவது மாசத்துக்கொருவாட்டி வெளி காத்தை சுதந்திரமா சுவாசிக்கலாம்னா, அதுக்கும் குடுப்பினை இல்ல. இப்பல்லாம் போன்லயே, மளிகை சாமான்களை, சொல்லிட்டா, கடைக்காரனே எடுத்து வந்து குடுக்கறானாமே...
''உங்க தங்கை லலிதா அப்படித்தான் வாங்கறாளாம்... 'நீ ஏன் மெனக்கெட்டு கடைக்குப் போகணும்'கிறாங்க, உங்கம்மா. அவங்க கண்ணுக்கு முன்னாலயே, 24 மணி நேரமும் இருந்தாகணும்கிறாங்க,'' என, பொருமித் தள்ளினாள்.
'வேறொண்ணும் இல்லீங்க... மளிகை சாமான் வாங்கற சாக்குல, ஐஸ்க்ரீம் பார்லருக்கு போயி, ரெண்டு மூணு வெரைட்டி ஐஸ்க்ரீம் சாப்ட்டுட்டு, பார்க்குல கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு வருவோம். வெய்யில் வேற கொளுத்துது, இந்த வண்டியால, அதுக்கும் பங்கம் வந்திருச்சே...' என்ற கோபம்.
''உன்னை, ஆட்டோல வீட்டுக்கு அனுப்பிட்டு, வண்டிய, 'ரிப்பேர்' பண்ணி, உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர்றேன்,'' என்றேன்.
அப்போது, 'ஸ்கூட்டி'யில் அங்கு வந்த சந்தியா, ''என்ன வெய்யில்ல நின்னுகிட்டிருக்கீங்க... வண்டில ப்ராப்ளமா,'' என்றாள்.
''ஆமாம்மா... டயர், பஞ்சராயிடுச்சு... அதான் பத்மினிய ஒரு ஆட்டோல வீட்டுக்கு அனுப்பிரலாம்ன்னு பாக்கறேன்,'' என்றேன்.
''ஆட்டோல்லாம் எதுக்கு அங்கிள்... என் வண்டில கூட்டிட்டுப் போறேன்... வாங்க ஆன்ட்டி போலாம்,'' என்றாள்.
''சரி... சரி... நான் சந்தியாவோட போய்க்கிறேன்... நீங்க சீக்கிரமா வீடு வந்து சேருங்க,'' என்று, முறைத்தபடி கிளம்பினாள்.
நான் பைக்கை தள்ளியபடி போய் சரி பண்ணி, வீடு வந்து சேர, இரவு, 8:30 மணி ஆனது.
கதவைத் திறந்த, பத்மினியின் முகமே சரியில்லை. மாமியார், மருமகளுக்கிடையே வரும் வழக்கமான வாக்குவாதமாக இருக்கும் என நினைத்து, எதுவும் கேட்கவில்லை.
''என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!''
''சொல்லு... அம்மாவோட என்ன பிரச்னை?''
''ஐயே... நான் ஒண்ணும் அம்மாவ பத்தி சொல்ல வரலே... சந்தியாவ பத்தி தான்!''
''இங்க பாரும்மா, உங்க மகளிர் குழுவுல தான், சந்தியா தலையை உருட்டுவீங்க... எங்கிட்டயுமா... எனக்கு துாக்கம் வருது... ஆள விடு,'' என்றேன்.
''இல்லங்க... இத்தன நாள் பாவம், அவள நாங்க தப்பாப் புரிஞ்சிகிட்டோம். இன்னிக்கு அவளோட வண்டில வரும்போது, 'வாங்க, ஆன்ட்டி... ஐஸ்க்ரீம் சாப்டலாம்'ன்னு கூப்ட்டா... அப்ப, அவ வீட்டைப் பத்தி விசாரிச்சேன்...
''சந்தியாவும், அவங்க அத்தையும் பரஸ்பரம் ரொம்ப அன்பா இருப்பாங்களாம்... சந்தியான்னா, அவங்கத்தைக்கு உயிராம்... ஆரோக்கியமா ஓடியாடி வேலை செஞ்சுக்கிட்டிருந்தவங்களுக்கு, போன வருஷம் மார்பகப் புற்றுநோய் வந்து, லட்சக்கணக்குல செலவு பண்ணி, வைத்தியம் பார்த்திருக்காங்க. அவங்க உயிர் பிழைக்கணும்ன்னு, மார்பகங்கள் ரெண்டையும் ஆபரேஷன் மூலமா எடுத்துட்டாங்களாம்.
''அப்போதிலிருந்தே அவங்க மனசு சரியில்லாம, ஓயாம அழுதுகிட்டே இருப்பாங்களாம். 'நான் யாருக்கும் எந்த கெடுதலும் நெனச்சதில்லையே... எனக்கு ஏன் இந்த பாழும் வியாதி வரணும்... இத்தனை செலவு செஞ்சி எனக்கு ஏன் வைத்தியம் பாத்தீங்க... அப்படியே விட்டிருந்தா போய் சேந்திருப்பேனே'ன்னு புலம்பிட்டே, சாப்பிடாம படுக்கையிலயே முடங்கிக் கெடப்பாங்களாம்...
''தன்னாலதானே வீட்ல உள்ளவங்களுக்கு இவ்வளவு பண விரயமும், மனக்கஷ்டமும் ஏற்பட்டுருச்சு... போதாக்குறைக்கு, 'செக்-அப்'புக்கு அழைச்சிட்டு போக வர, சந்தியாவுக்கும் தேவையில்லாத அலைச்சல்ன்னு தன்னிரக்கத்தால, புலம்பிட்டே இருப்பாங்களாம்.
''இந்த ஆபரேஷன் பண்ணிகிட்டவங்க தினமும், 'பிசியோதெரபி எக்சர்சைஸ்' செய்யணுமாம். இல்லைன்னா, கையில நீர் கோத்துகிட்டு வலியால துடிப்பாங்களாம். தற்கொலை செஞ்சுக்கக் கூடத் துணிஞ்சாங்களாம். அவங்கள, மனோதத்துவ டாக்டர்கிட்ட கூட அழைச்சிட்டு போயிருக்கா, சந்தியா... அங்க, 'கவுன்சிலிங்' குடுத்தும் அந்தம்மாவுக்கு சரியாகலையாம்.
''இவங்கள பழைய நெலமைக்கு கொண்டு வர, என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்ப தான், சந்தியாவுக்கு ஒரு ஐடியா தோணுச்சாம். ஒரு நாள் காலைல, எழுந்திருக்காம இழுத்துப் போத்திகிட்டு, குளிர் காய்ச்சல்ல நடுங்கற மாதிரி, சத்தமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கா.
''சந்தியாக்கு குளிர் காய்ச்சல்னதும் அந்தம்மா துடிதுடிச்சி, பரபரப்பா எழுந்திருச்சி, மிளகு கஷாயம் போட்டு குடிக்க வெச்சிருக்காங்க... அப்பவும் முடியலேன்னு இவ நடிக்கவும், அந்தம்மாவே குழந்தைகளை, 'ரெடி' பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பி, இயல்பா ஆபரேஷனுக்கு முன்ன செஞ்ச மாதிரி வேலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம்...
''இப்படியே ஒரு வாரம், சந்தியாவோட நடிப்பு நீடிக்க, அவங்களும், ரெண்டு கைகளுக்கும் நல்லா வேலை குடுத்ததால நீர் கோக்கறது, கை வீங்கறதுன்னு எந்த பிரச்னையும் வரலையாம். ஆனா, 'எக்சர்சைஸ்' மட்டும் செய்யவே மாட்டேங்கறாங்களாம்...
''அவங்க ஒடம்பு ஆரோக்கியமா இருக்கணும்கிறதுக்காகத்தான், துவைச்ச துணிகளை பிழிஞ்சு காயப் போடறது... பிள்ளைங்களோட பந்து வெளையாடறது... விரல்களுக்கு பயிற்சியா காய்கறி, வெங்காயம் வெட்டறது, சப்பாத்தி மாவு பிசையறதுன்னு செய்யச் சொல்றாளாம்...
''இத்தனை வருஷம், அவங்க, எங்களுக்காக உழைச்சாங்க... இப்ப, அவங்களை நல்லபடியாப் பாத்துக்கறது என் கடமை இல்லையான்னு கேட்டாள்,'' எனக் கூறி முடித்தாள், பத்மினி.
''ஆமாமா, மாமியாரை நல்லபடியா பாத்துக்கறதை விட்டு, ஒரு நல்ல மருமகளுக்கு வேறென்ன வேலை... நாங்கள்ளாம் எங்க மாமியாரை உள்ளங்கைல இல்ல வெச்சுத் தாங்கறோம்,'' என்றேன்.
''அதுவுமில்லாம, அவங்க, அவளோட மாமியார் இல்லையாங்க... 30 வருஷமா, மாமியார் வீட்டுல சமையல் செஞ்சுகிட்டிருந்தவங்களாம்... மாமனார், மாமியார் இறந்தப்புறம், அவங்கள அழைச்சிட்டு வந்துட்டோம். அவங்களுக்கும் சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமில்ல. தன்னோட அம்மா ஸ்தானத்துல வெச்சுப் பாக்கறதால, எங்க வீட்டுக்காரருக்கும் அவங்க மேல பாசமும், மரியாதையும் அதிகம்.
''எங்க பிள்ளைகளும் அவங்க மேல உயிரையே வெச்சிருக்காங்க. நாந்தான் இப்ப அவங்களுக்கு சமைச்சிப் போடறேன். எங்க குடும்பத்துல அவங்களும் ஒருத்தர். நாங்க அவங்களை, அத்தைன்னு தான் கூப்பிடுவோம்னு, சொல்லி கிளம்பிட்டாங்க...
''சமையல்காரம்மாவை தன்னோட உறவா நினைச்சதோட, அவங்க ஆரோக்கியத்துல கண்ணுங்கருத்துமா இருந்து இப்படி பாத்துக்கற நல்ல மனசு எத்தனை பேருக்கு இருக்கும். இந்த சின்ன வயசுல எத்தனை பெரிய மனசு அவளுக்கு...
''இந்த விஷயமெல்லாம் சரியாத் தெரிஞ்சுக்காம, நாங்க அவளை தப்பா நெனச்சுட்டோம். நாளைக்கு முதல் வேலையா, என், 'பிரண்ட்ஸ்'கிட்ட, சந்தியாவோட உயர்ந்த உள்ளத்தை பத்தி சொல்லணும். அப்பதான் எம் மனசுக்கு நிம்மதியா இருக்கும்,'' என, வருத்தப்பட்டாள், பத்மினி.

எஸ். கே. விஜயலட்சுமி

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement