Advertisement

அண்டார்டிகா சென்று வந்தேன்! (3)

அண்டார்டிகா அழைத்து சென்ற கப்பல் ஊழியர்கள் சொன்னது போல, அந்த இரண்டு நாட்களும், கடலை கடக்கும்போது, பயமாக தான் இருந்தது. கப்பலை புரட்டி போடுவது போல, பெரிய அலைகள் வந்து அலைகழித்தது. ஒருநாள் முழுவதும் சாப்பிட முடியவில்லை. படுக்கையை ஒட்டியுள்ள கம்பியை பிடித்துக் கொண்டே தான் துாங்கினோம். அந்த கடல் பகுதியை தாண்டியதும், அண்டார்டிகா வந்தது.
அண்டார்டிகா என்பது, எப்போதும் இருளும், பனியும் சூழ்ந்த பிரதேசம். அதன் எல்லைக்குள் சென்ற பிறகு, கடல் முழுவதும் பனிக்கட்டிகள் தான் மிதக்கும். பனிக்கட்டிகள் என்றால், ஏதோ கையில் எடுத்து பார்க்கும் அளவு இல்லை. ஒவ்வொன்றும், பாறை போல பெரிதாக இருக்கும்; சில, மலையளவு கூட இருக்கும்.
அந்த பனிக்கட்டியை உடைத்து தான், சில இடங்களில், கப்பல் முன்னேறவே முடியும். கப்பலின் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், நீல நிற கடல் தெரிந்தது. அதன்பின், கண்ணுக்கு எட்டிய துாரத்திற்கு, வெள்ளை பனிக்கட்டிகள் தான் தென்படும்.
இதெல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பார்க்க முடியாத அழகு. இந்த காட்சியை பார்த்து ரசித்தபடியே, புகைப்படம் எடுக்க நினைத்தால், முடியாது. காரணம், கையை விட்டு கை உறையை கழட்ட முடியாத அளவிற்கு குளிர் அடிக்கும்.
இப்படி, அவர்கள் சொன்னது எல்லாம் நடந்தது. ஆனால், எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் பயணித்த போது, பனிப்புயல் எதுவும் இல்லை; வானமும் வெளிறிப்போய், புகைப்படம் எடுப்போருக்கு கொண்டாட்டமாக இருந்தது.
'நேஷனல் ஜியாகிராபி மற்றும் டிஸ்கவரி' சேனல்களில் பார்த்திருந்தாலும், நேரில் அண்டார்டிகாவை பார்க்கும்போது ஏற்பட்ட பிரமிப்பே தனி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில், மேகத்தில் மிதக்கும் கப்பலில், நாயகனும் - நாயகியும் செல்வர். அது போல இருந்தது, பனி சூழ்ந்த கடலில் நாங்கள் சென்ற பயணமும்.
ஒரு மாசு இல்லாத, துாசு படியாத, பரிசுத்தமான பூமியாக காட்சி தந்தது, அண்டார்டிகா. அங்கு, எங்களை போன்ற மனிதர்கள், எப்போதாவது வருவதால், நாங்கள் தான் கடல் வாழ் உயிரினங்களுக்கு, வேடிக்கையாகவும், வினோதப் பொருளாகவும் மாறியிருந்தோம். எவ்வித பயம், பதட்டம் இல்லாமல், கடலின் மேற்பரப்பில் வந்து, விளையாட்டு காட்டிச் சென்றன, திமிங்கிலங்கள்.
அண்டார்டிகா பற்றி ரொம்ப தான் பயமுறுத்தி விட்டனர். என்ன அழகு, அமைதி என்று, ரசித்துக் கொண்டிருந்த போது தான், அதன் சுயரூபத்தை ஒரு நாள் காட்டியது. அப்பப்பா... அந்த பயங்கரத்தை, இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது.

அண்டார்டிகாவில், ஏறத்தாழ, 5,000 மீட்டர் (16 ஆயிரத்து, 400 அடி) அளவிற்கு, தரையில் ஆழ்துளையிட்டால் தான், மண்ணை பார்க்க முடியும். ஏனெனில், 98 சதவீதம் பனிப் பாறைகளால் மூடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள தண்ணீரில், 68 சதவீதம் அண்டார்டிகாவிலே தான் உள்ளது. உலகிலேயே கொடுமையான குளிரும், பனிக்காற்றும் நிறைந்தது.
அண்டார்டிகாவில், பனிப்புயல், 300 கி.மீ., வேகத்தில் வீசும். 'கட்ஸ்' எனப்படும் சூறாவளி, சுழன்று சுழன்று வீசும். மிக இதமான சீதோஷ்ண நிலை போல் தோன்றும் நிலை, அரைமணி நேரத்திற்குள் உயிருக்கு போராடும் பனிப்புயலாகவும் மாறிவிடும் அபாயமும் உண்டு. குளிரால் ஏற்படும் ஆபத்தை விட, பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகமாக இருக்கும்.
அண்டார்டிகாவில், 1,000ம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது, பனிக்கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றனவாம். இதை, ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு, புவி வெப்பமயமாதல் தான் காரணம் என்கின்றனர்.


— தொடரும்
எல். முருகராஜ்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement