Load Image
Advertisement

ஆண்கள்... பெண்கள்... இன்றைய பொங்கல்! - எழுத்தாளர் சோ. தர்மன்

'சூல்' நாவலுக்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனை, கோவில்பட்டி வ.உ.சி.நகர் வீட்டில் சந்தித்தோம். கல்லுாரிகளில் பேசுவதற்கு அவரை அழைக்க பேராசிரியர்கள் காத்திருந்தனர். அவரும் மழை பெய்து நனைந்து கிடக்கும் சொந்த ஊர் உருளைக்குடிக்கு போய் வந்த மகிழ்ச்சியில் இருந்தார்.
''அதிக மழையெல்லாம் இல்லை. வழக்கம்போல தான். கொஞ்சம் வேண்டுமானால் கூடியிருக்கலாம். இந்த ஆண்டு தமிழக அரசு, குளம் மராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை துார்வாரி வைத்திருந்ததால் குளங்களில் நீர்பெருகிஉள்ளது. விருதுக்காக என்னை பாராட்டி பேசிய முதல்வரிடம் குளங்களை துார்வாரியதற்காக ஒரு சம்சாரியாக பாராட்டினேன்'' என்றார்.

அவரது சூல் நாவலும் முழுக்க நீர்மேலாண்மை குறித்ததுதான்.
''நிறைமாத கர்ப்பிணியை ''சூலி' என்கிறோம். அதைப்போல நிறைந்த கண்மாய், எங்களுக்கு விவசாயத்திற்கு நீர் தருவதன் மூலம் புதிய வாழ்வு அளிக்கிறது. ஒரு குளத்தை கர்ப்பிணிபெண் போல பாதுகாக்கிறோம். எனவே தான் நீர்மேலாண்மை குறித்த அந்த படைப்பிற்கு சூலி என்ற பெயர்'' என்றார் சோ தர்மன்.
அவரே தொடர்ந்தார்.

''நம் மன்னர்களும், ஜமீன்களும் எண்ணற்ற குளங்களை ஏற்படுத்தி இருந்தனர். நீரை பாதுகாக்க, ஒவ்வொரு குளத்தையும் பாதுகாப்பதற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பிரிட்டீஷ் அரசு இங்கிருந்து கிளம்பும்போது 39 ஆயிரத்து 640 கண்மாய்களை விட்டுச்சென்றனர். 6 லட்சம் கிணறுகள் பயன்பாட்டில் இருந்தன. 1947க்கு பிறகு அதனை பாழ்படுத்திவிட்டோம். அந்த காலங்களில் ஒவ்வொரு கண்மாய்களையும் ஊர்மக்களே சேர்ந்து ஒரே நாளில் ஒன்றுசேர்ந்து துார்வாரி, மழையை எதிர்கொள்வார்கள். மக்களே பாதுகாத்து வந்தவரையிலும் நீர்நிலைகள் பாதுகாப்பாக இருந்தன. ஆனால் குளங்களை அரசு கையகப்படுத்தியபிறகு மக்களின் கையைவிட்டு போய்விட்டது.
அந்த காலத்தில் விவசாயம் என்பது தொழில் அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. விவசாயத்திற்கு துணையாக கால்நடை வளர்ப்பு இருந்தது. தற்போது விவசாயம் போய், கிராமங்களில் கால்நடை வளர்ப்பு மட்டுமே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. விவசாயிக்கு தொடர்பே இல்லாமல், மக்காச்சோளமும், சூரியகாந்தியும் பயிரிடுகிறோம். இதைத்தான் பயிரிடுங்கள் என கூறி சில நிறுவனங்கள், அட்வான்ஸ் பணம் கொடுத்து நித்யகல்யாணி பூஞ்செடியை பயிரிடச்சொல்கிறார்கள். அதில் இருந்து ஏதோ கெமிக்கல் எடுக்கிறார்கள். சிவகங்கையில் ஒரு பெரிய சைஸ் வெள்ளரிக்காய் பயிரிடச் செய்கிறார்கள். வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வெள்ளரியால் என்ன பயன் என்றே அந்த விவசாயிக்கும் தெரியாது. இயற்கை உரம் இல்லாமல் ரசாயன உரம் வந்துவிட்டது. அரசு, விவசாயதுறையும் இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லாத வெளிநாட்டு விதைகளை விளைவிக்க முயல்கிறார்கள். மரபுகள் அழிக்கப்பட்டுவிட்டன' என்றார் வருத்தத்தோடு.

* தமிழர் திருநாளான பொங்கல் விழா உங்கள் சிறுவயதில் எப்படியிருந்தது..இப்போது எப்படியிருக்கிறது..
''கிராமங்களில் பொங்கல் விழாதான் எல்லாமுமாக இருந்தது. தற்போது விவசாயமும் பொய்த்துவிட்டது. பொங்கலும் மறந்துபோய்விட்டது. பிழைப்பு கருதி அனேகர் வெளியே சென்றுவிட்டதால் கிராமங்களில் வயதானவர்களை தவிர யாரும் இல்லை. கரிசல்காட்டு பகுதியில் ஒரு முறை குளம் நிரம்பிவிட்டால், அதை கொண்டு வெற்றிலை முதல் வாழைத்தோட்டம், நெல், தானியங்கள் என முடிந்தவரை பயிரிட்டுவிடுவோம். பிறகு கடலை, வெள்ளரிக்காய் என நீர்அதிகம் தேவைப்படாதவற்றை பயிரிடுவோம். இதைத்தான் வான்சிறப்பில் வள்ளுவரே சொல்கிறார். பொங்கல் வரும்போது புதுநெல், புது அரிசி வந்துவிடும். கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மேய்ச்சலுக்கு கொண்டுசெல்வது குதுாகலமாக இருக்கும். இப்போது கிராமங்களிலேயே கூட பொங்கல் விழாவை பெண்கள் தொலைக்காட்சி பெட்டி முன்பு கொண்டாடுகிறார்கள். ஆண்கள் டாஸ்மாக் கடைகளில் கொண்டாடுகிறார்கள் அவ்வளவுதான்' என்றார்.

* பதிமூன்றாவது மையவாடி
''சூல்' நாவலை தொடர்ந்து சோ.தர்மனின் அடுத்த படைப்பு ''பதிமூன்றாவது மையவாடி' வெளிவந்துவிட்டது. இந்த படைப்பு குறித்து அவர் கூறுகையில்...
கன்னியாஸ்திரிகள், துறவிகள் குறித்த நாவல். 2 சதவீதமே உள்ள கிறிஸ்தவர்கள் 42 சதவீத கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். இந்தியாவில் புதிதாக கல்வி நிறுவனங்களை துவக்க ஆயிரம் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன.
கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு அத்தகைய விதிமுறைகள் இல்லை.
டயோசீசன் நிறுவனங்களின் பணிமாற்றங்களில் அரசு தலையிட முடியாத நிலை உள்ளது. ஆனால் அவர்கள் அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். இதுகுறித்துதான் அந்த நாவல் பேசுகிறது. இதற்காக நான் விமர்சிக்கப்படலாம். இதுகுறித்து அச்சப்படபோவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற விமர்சனங்களால் கிழித்து தொங்கவிடுவார்கள். ஆனால் தமிழகத்தில் அத்தகைய எழுத்துக்களை யாரும் எழுதவில்லை. கேரளாவில் கூட சபைகளில் இருந்து வெளியேறிய கன்னியாஸ்திரி ஜெஸ்மி எழுதிய 'ஆமென்', லுாசி எழுதிய ''கர்த்தரின்டே நாமத்தில்..' நுால்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக கம்யூனிஸ்ட்கள் திராவிட கட்சிகளில் அடிமையாகிவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 2 லோக்சபா சீட்டும் கொடுத்து 25 கோடி ரூபாயும் கொடுத்துள்ளார். பின்னர் எப்படி விமர்சனம் செய்வார்கள் என்றார்.
68 வயதாகும் சோ.தர்மன், கோவில்பட்டி அருகே உருளைக்குடியை சேர்ந்தவர். கரிசல்மண் எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி போன்றவர்களின் பாதையில் தடம்பதிப்பவர். கூகை, ஈரம், சோகவனம், துார்வை உள்ளிட்டவை இவரது படைப்புகள். கூகை நாவல், ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி பிரஸ் மூலம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது படைப்புகளை 62 மாணவர்கள் எம்.பில்., 40 பேர் பிஎச்டி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சூல் 2016ல் வெளியானது.
ஆங்கிலேய அதிகாரி வேல்ஸ் குறித்து ஆய்வு செய்து புதிய படைப்பை எழுதிவருகிறார். கரிசல் மண்ணிற்கு வேல்ஸ் படையெடுத்து வந்தபோது பெரும்மழை.
கரிசல் மண் எவ்வளவு நீரையும் பிடித்துவைத்துக்கொள்ளும். அதுதெரியாமல் வெடிமருந்துகளோடு போருக்கு வந்த வேல்ஸ், வெறும், ஈட்டிகளையும், வேல்கம்புகளையும் கொண்டுவந்தவர்களிடம் எதிர்கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தை பதிவு செய்துள்ளார்.
இடதுசாரி இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர் சோ.தர்மன். இடதுசாரியான கோணங்கி, ''சோ.தர்மன் ஒரு தான்தோன்றி ஓடை. விழுந்த பனங்காய்கள் கருப்புமண்ணில் கம்மென்று கிடக்கும் மவுனம் அவரது படைப்புலகம்' என பாராட்டுகிறார்.
வலதுசாரி எழுத்தாளராக அறியப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகன், ''சோ.தர்மனின் நடை, நேரடியானது. அவரது வட்டார வழக்கு நுணுக்கமான மொழிவெளிப்பாடாகவும், வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது. பூமணியின் இயல்புவாத அழகியலும், கி.ராஜநாராயணனின் நாட்டாரியல் கூறுகளும் கலந்த புனைவுலகம்' அவருடையது என பாராட்டுகிறார். இப்படி எதிரெதிர் முகாம்களில் இருந்து பாராட்டுக்களை சேகரம் செய்கிறார் சோ.தர்மன்.

-முப்ஸ்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement