Load Image
Advertisement

'ஒத்தவீடு' ரகசியம்

நாம் பிறந்து வளர்ந்த கிராமம், முந்தைய தலைமுறை வரலாற்றை எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறோம். வரலாற்றை தெரிவதன் மூலம் நம் தனித்துவம், பாரம்பரியம், கலாசாரத்தை உணர முடியும்.
ஒரு கிராமம் எப்படி உருவானது என்பதற்கு விடைதேட வேண்டுமெனில் கரிசல் எழுத்தாளர்களின் முன்னத்தி 'ஏர்' என போற்றப்படும் 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா.,என்கிற கி.ராஜநாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்' மற்றும் 'கோபல்லபுரத்து மக்கள்' நாவல்கள் சிறந்த முன்னுதாரணம். ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் இடம் பெயர்ந்து, தமிழக கரிசல் மண் பிரதேசத்தில் 'கோபல்ல கிராம'த்தை உருவாக்கிய வரலாற்றை பேசுகிறது அந்நாவல்கள்.

கி.ரா.,தொகுத்து வெளியிட்ட கரிசல் கதைகளில் எழுத்தாளர் பொ.அழகுகிருஷ்ணன் எழுதிய 'ஒத்தை வீட்டுக்காரர்' சிறுகதை உண்டு. வெங்கடாசலம் ஆசாரி 10 ஏக்கர் கரிசல் பூமியை விற்க மனமின்றி, அந்த ஊரைவிட்டு வெளியேறாமல் கால் வயிறு கஞ்சி குடித்து, 2 குழந்தைகளை ஆளாக்கி 'ஒத்தைவீட்டுக்காரர்' என்ற ஊர் ஜனங்களின் அனுதாபத்தை சுமந்து கொண்டு வாழ்ந்த கதை அது. ஒரு கட்டத்தில் அவர் கரிசல் பூமியை விற்றுவிட்டு வெளியேறுவதுடன் கதை முடியும்.
அதென்ன 'ஒத்தவீடு'. கிராமம் எனில் நுாறு, ஐநுாறு என வீடுகள், மக்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறு இல்லாமல் ஒரு கிராமத்திலிருந்து தனித்து சில கி.மீ.,துாரம் தள்ளி ஒரே ஒரு வீடு, அதனுடன் விவசாய நிலம் சூழ்ந்திருக்கும். அதையே பக்கத்து கிராமத்து மக்கள் 'ஒத்தவீடு', 'ஒத்தவீட்டுக்காரர்' என்ற அடையாளத்துடன் அழைப்பர்.
மதுரை மாவட்டம் பேரையூர் (மாவட்ட எல்லை) அருகே விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கரிசல் பிரதேசத்தில் தீவுபோல் கோவிந்தநல்லுார் ஊராட்சியின் கீழ் உள்ளது 'ஒத்தவீடு' என்கிற முத்துச்சாமிபுரம். மழையை நம்பி பிழைப்பு நடத்தும் மானாவாரி நிலம். எண்ணி 11 வீடுகள். மாரியம்மன், ஜக்கம்மாள், கருப்பசாமிக்கு தனித்தனி சிறு கோயில்கள். விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பிரதான தொழில். பிள்ளைகளை வெளியூரில் படிக்க வைக்கின்றனர்.
கிராம விவசாய வாழ்வோடு இணைந்த கலப்பை, ஏர்க்கால், கொழு, மேழி என்பன போன்ற சொற்கள் மறக்கடிக்கப்பட்ட நவீன தலைமுறைக்கு நினைவூட்டவே இந்த 'ஒத்தவீடு' பற்றிய தேடல்.
'ஒத்தவீட்'டின் 80 வயது குருவம்மாள்,'' எனது தாத்தா முத்துநாயக்கர். வெள்ளைப்பொட்டிலில் இருந்து அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு விவசாய வேலைக்கு வந்தார். அங்கிருந்து 120 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து நிலம் வாங்கி, குடியேறினார். ஒரே ஒரு வீடு இருந்ததால், 'ஒத்தவீடு' என பெயர் வந்தது. நாங்கள் மூன்றாவது தலைமுறை. தற்போது 'முத்துச்சாமிபுரம்' என அரசு ஆவணங்களில் பெயர் இருந்தாலும், 'ஒத்தவீடு' என சொன்னால்தான் சட்டென புரிந்து ஊரை அடையாளம் காட்டுவர்,'' என்கிறார்.
அலமேலு, 'எங்கள் முன்னோர் கிணறு அமைத்து, கமலை மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்தனர். தற்போது தண்ணீர் வற்றி, பயனற்று உள்ளது. 3 ஆண்டுகளாக மழை இல்லை. இருந்தாலும் இந்த மண்ணைவிட்டு வெளியேற விருப்பமில்லை. எங்கள் தாத்தா காலத்தில் சதுரகிரி மலையிலிருந்து வந்த புலி இங்கு புகுந்தது. அதை மலைக்கு துரத்திவிட்டனர். திருட்டு பயம் எதுவும் இல்லை,'' என்றார்.
இளையதலைமுறையான கிருஷ்ணராதா,''எனது கணவர் ராஜபாளையத்தில் தொழில் செய்கிறார். சொந்த மண்ணை விட்டுவிட்டு எங்கு செல்வது. இதைவிட்டு பிரிய மனமில்லாததால், இங்கு வீடு கட்டுகிறோம்,'' என்கிறார் மண் மீதான தீராத பற்றால்.
இதை பார்க்கையில், 'கரிசல் மக்களிடம் அன்பு, பிரியமிருக்கிறது. பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது. உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது. இம்மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதைவிட, சொல்லாததே அதிகம் இருக்கிறது,' என்கிற கி.ரா.,வின் அனுபவ வரிகள் நினைவிற்கு வருகிறது.

பாரதி, வெங்கட்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement