Advertisement

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நினைவாற்றலில் அசத்தும் ரோகித்

Share

கர்ப்பமான, எட்டாவது மாதத்தில், வழக்கமான பரிசோதனைக்கு சென்ற போது, 'ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது. 'சிசேரியன்' செய்து, குழந்தையை எடுத்து விட வேண்டும்' என்று சொல்லி விட்டனர்.
ஒரு கிலோ, 100 கிராம் உடல் எடையுடன் பிறந்த குழந்தைக்கு, ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருந்தது; செரிமான கோளாறும் இருந்தது. பிறந்த இரண்டாவது வாரத்தில், மலக்குடல் வழியே, ரத்தம் கசிய ஆரம்பித்தது. 'ஹெர்னியா' அறுவை சிகிச்சை செய்தனர்.

தனியாகவே இருப்பான்
'தட்டணுக்கள் இல்லாததால், ரத்தம் உறையவில்லை. எனவே, குழந்தையை காப்பாற்றுவது சிரமம். இரண்டு வாரம் தான் உயிருடன் இருப்பான்' என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர். மருத்துவ கணிப்பையும் தாண்டி, உயிர் பிழைத்தான், ரோகித் பரிதி.
முதல் ஓராண்டு முழுவதும், அவ்வப்போது இன்குபேட்டரில் வைத்திருக்க வேண்டிய நிலை. நிலைமை சீரானது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான். கொய்யா, ஆப்பிள் பழத் துண்டுகளை கொடுத்தால், கடித்து சாப்பிடுவான்.
இரண்டு வயதிற்கு பின், அவனுக்கு எதுவுமே தெரியாமல் போனது. ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த போது, கையில் சாப்பிடக் கொடுத்ததை, வாங்கத் தெரியாமல் விழித்தான்.
அதுவரை செய்தது எதுவும் செய்யத் தெரியவில்லை; எல்லாமே புதிதாய் சொல்ல வேண்டியிருந்தது. 4 வயது வரை, பேச்சு வரவில்லை; சைகையில் தான் என்னிடம் பேசுவான்.
'குழந்தை தானே... ஏதோ ஒரு மனநிலையில் இப்படி இருக்கிறான்... போகப் போக சரியாகி விடும்' என்று நினைத்தேன். ஆனால், அவன் செய்கைகள் வித்தியாசமாக இருந்ததால், டாக்டரிடம் காட்டினோம். பரிசோதித்த பின், 'ஆட்டிசம் மாதிரி தெரிகிறது' என்று சொன்னார்.
19 ஆண்டுகளுக்கு முன், 'ஆட்டிசம்' என்ற வார்த்தையை கேட்டதேயில்லை.
நான் திருமணம் செய்தது என் அத்தை மகனை. 'சொந்தத்தில் திருமணம் செய்ததால் தான் இப்படி' என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால், இது வருவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
அரேபிய நாடுகளில், நிறைய குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. பெரும்பாலும், அவர்கள் நெருங்கிய சொந்தத்தில் தான் திருமணம் செய்கின்றனர். அப்படி செய்யாத பல தம்பதியரின் குழந்தைகளுக்கும் ஆட்டிசம் கோளாறு இருக்கிறது.
தனியாகவே இருப்பான்; கண்களை நேராக பார்த்து பேச மாட்டான்; தலை குனிந்தபடியே இருப்பான்; ஆனால், அதீத சுறுசுறுப்புடன் இங்கும், அங்கும் ஓடுவான். என்னை தவிர, யாராலும் அவனை பார்த்துக் கொள்ள முடியாது.
ரோகித் பரிதிக்கு இரண்டரை வயதான போது, என் மகள், தேஜஸ்வர்யா லட்சுமி பிறந்தாள். 1 வயதிற்குள், அவள் பேச ஆரம்பித்தாள். அவளை கவனித்த இவன், அவள் சொல்வதை, அப்படியே சொல்வான்.
அப்போது தான், என் மகனுக்கும் பேச்சு வரும் என்று எனக்குப் புரிந்தது. ஒவ்வொரு வார்த்தையையும், மகளுக்கு சொல்லிக் கொடுப்பேன். அவள் சொல்வதை நான்கைந்து முறை கேட்டு, இவனும் திருப்பிச் சொல்வான்.
சராசரி பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க விரும்பி, நடிகர் ரஜினியின் மனைவி லதா நடத்தும், 'ஆஷ்ரம்' பள்ளி முதல் பல பள்ளிகளை அணுகினோம்; யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை.

மெட்ரோ ரயில் திட்டம்
இது போன்ற சிறப்பு குழந்தைகளுக்கு, பயிற்சி தருவதற்கு தனி பள்ளி இருப்பதாக கேள்விப்பட்டு, அங்கு சேர்த்தோம்.
அங்கு தான், அடிப்படையான பல விஷயங்களை கற்றுக் கொண்டான். அவனுடன் சேர்ந்து, இது போன்ற குழந்தைகளை கையாளும் பயிற்சியை நானும் கற்றேன்.
பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த, அக்குபிரஷர் டாக்டர், 'படுக்கையில் குழந்தை சிறுநீர் கழிக்கிறானா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றதும், பின் கழுத்துப் பகுதியில் ஒரு அழுத்தம் கொடுத்தார்; அன்றிலிருந்து அந்தப் பழக்கம் நின்று விட்டது.
இப்படித் தான், ஒவ்வொரு உதவியும், நான் எதிர்பாராத நேரத்தில், இயல்பாக கிடைத்தது. 2009ல், ரோகித் பரிதியின், 9 வயதில், அபுதாபி வந்து செட்டில் ஆனோம். இங்கும் சிறப்பு பள்ளியில் தொடர்ந்து படித்தான்.
இந்நிலையில், ரோகித்தை பரிசோதித்த டாக்டர்கள், அவனின் அபார நினைவாற்றலை உறுதிபடுத்தியுள்ளனர். குழந்தையாக இருந்த போது, அவனின் சில நடவடிக்கைகளை இந்த மருத்துவ அறிக்கைக்கு பின் தான், நானே நினைத்து பார்க்கிறேன்.
இரண்டு வயதில், அவனுக்காக தண்ணீர், பால், பழச்சாறு தருவதற்காக, தனித்தனியாக மூன்று பாட்டில்களை பயன்படுத்துவேன்.
தினமும் காலை, 11:00க்கு பழச்சாறு தருவேன். நான் மறந்தாலும், சரியாக, 11:00க்கு அந்த பாட்டிலை கொண்டு வந்து, சத்தமாக தரையில் வைப்பான். 'இவனுக்கு சரியாக நேரம் எப்படி தெரிகிறது?' என்று வியப்பேன்.
இது பற்றிய செய்தி, ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகும், 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டது. பேட்டிக்காக அந்த நிருபர் வந்த போது, 'செப்., 9, 2009 என்ன கிழமை?' என்றவுடன், நிமிட நேரம் கூட தாமதிக்காமல், 'புதன் கிழமை' என்றான். அன்று, துபாயில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கிய நாள்.

துல்லியமாக சொல்வான்
'துபாயின் தேசிய தினமான, 2.12.2021 என்ன கிழமை?' என்றதும், 'வியாழக்கிழமை' என்றான். பொது விஷயங்கள் மட்டுமல்ல, என்ன தேதியில் என்ன நடந்தது, வீட்டிற்கு யார் வந்தனர், அவர்கள் பிறந்த தேதி, காரின் நிறம், உடுத்தியிருந்த உடையின் நிறம் என்று, அனைத்தையும் நினைவில் வைத்து, துல்லியமாக சொல்வான்.
ரஜினியின் தீவிர ரசிகன். அவர் நடித்து, இதுவரை வெளியான படங்கள் அனைத்தும், எப்போது, 'ரிலீஸ்' ஆனது, குறிப்பிட்ட படத்தின் படப்பிடிப்பு நடந்த தேதி எல்லாம் நினைவில் வைத்திருக்கிறான்.
எந்த இசையை கேட்டாலும், அப்படியே திருப்பி பாடுவான். அவன் தங்கை சராசரி குழந்தை; அவள் கணக்கில் செய்யும் தவறுகளை, இவன் செய்யவே மாட்டான்.
பல்வேறு குழுக்கள் பங்கேற்ற, எலக்ட்ரானிக் கீ போர்டு வாசிக்கும் போட்டியில், பொதுப் பிரிவில் பரிசு வாங்கியுள்ளான். இரண்டு அல்லது மூன்று முறை ஒரு இசையைக் கேட்டால் போதும்; அதை அப்படியே பிசகாமல் வாசிப்பான்.
பகவத் கீதையில், 40 சுலோகங்கள் சமஸ்கிருதத்தில் மனப்பாடமாக சொல்வான். இந்திய அரசு நடத்திய, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வாகியுள்ளான்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் வாய்ந்தவர்கள். வளர வளரத் தான், அவர்களிடம் உள்ள திறமை, தனித்தன்மை தெரிய வரும்.
அதனால், பிறந்தவுடன் இப்படித் தான் என்று முடிவு செய்து விட வேண்டாம். நம்மால், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். பல செயல்களில் ஈடுபடவும், அவர்களுக்கு வாய்ப்பு அமைத்து தர வேண்டும்.

மாலினி ராமகிருஷ்ணன்
'ஆட்டிசம்' ஆலோசகர்,
பயிற்சியாளர், அபுதாபி.
00971 55 343 6656

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement