Advertisement

நகப்படுக்கையின்றி நகம் நல்லகம் அமையாது!

Share

இருபது விரல்களிலும் இயற்கை நமக்களித்த இணையற்ற வரம், நகம். நகம் விரலுக்கு மகுடம்; நம் உடல் காக்கும் முதல் கவசம்.
கரு உருவான ஒன்பதாவது வாரத்திலேயே, நக அச்சுவார்ப்புரு, விரல் நுனிகளில் தோன்றி, 16வது வாரத்தில் முழு நகமும் உருவாகி விடுகிறது.
நக அச்சுவார்ப்புருவின் நீட்சியும், தொடர்ச்சியும் தான், நகப் படுக்கை என்ற நகமென்னும் அகத்தின் படுக்கை. நகப்படுக்கை, நக வீட்டின் மிக முக்கிய அங்கம். ரத்த நாளங்களும், உணர்வு நரம்புகளும், மேலும் கீழும் இழையோடும் அரங்கம்.
புறச்சூழலின் தட்பவெட்ப மாற்றங்களை, உடனுக்குடன் துல்லியமாக மூளைக்குச் சொல்லும் சிறப்பு நுண்ணுணர்வு மையங்கள் அமையப் பெற்ற இந்த நகப்படுக்கையின்றி, நகம் நல்லகம் அமையாது.

உறுதியானது
நகப்படுக்கையும், விரல் நுனியும் கூடும் இடம் நகத்தடி அல்லது நகக்கண். இது, நகமென்னும் அகத்தின் முன் வாசலில் அமைந்துள்ளது. தொடு உணர்வையும், வலி உணர்வையும் மூளைக்கு அதிவேகத்தில் கொண்டு செல்லும், உணர்வு நரம்பு விசைகள், இந்த நகக்கண்ணில் தான் உள்ளன.
எனவே தான் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், உண்மையை வரவழைக்கவும் நகக் கண்ணில் ஊசி ஏற்றித் துன்புறுத்தும் வழக்கம், தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது.
நக அச்சுவார்ப்புரு மற்றும் அதன் நீட்சியான நகப்படுக்கையின் முக்கியமான உருவாக்கம் தான், நகத் தட்டு எனப்படும் மேற்கூரை. இது தான் நகம் என்று, எல்லாராலும் அறியப்படும் நகத்தட்டு, நகத்தின் ஒரு பகுதி தான். நகத்தட்டு, ஒரு போர்வீரனின் கேடயம் போன்று மிக உறுதியானது.

'க்யூட்டிக்கிள்'
நம் உடலையும், உயிரையும், நுண்ணுயிர்கள் மட்டுமல்லாது, விலங்கு மற்றும் மனித எதிரிகளிடமிருந்தும் காக்கும் நகத்தட்டின் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது. நகத்தட்டு, மேல் தட்டு நவநாகரிகப் பெண்மணிகள், வண்ணங்கள் பூசி மினுக்கும் வெறும் அழகும் பகட்டும் பறை சாற்றும் உறுப்பல்ல.
அண்ணல் காந்தியடிகள் கூறியது போல், பெண்ணினத்தைக் களங்கப்படுத்தும் கயவர்களின் கண்களைக் குருடாக்கி, கழுத்தை அறுக்கும் கைவாள்.
நகமென்னும் அகத்தின் முன்வாசல் தவிர்த்து மூன்று புறமும், நகமடிப்பு என்ற சுற்றுச் சுவர்கள் அமைந்துள்ளன. இவை, நகத்தைச் சுற்றியுள்ள தோலின் தொடர்ச்சி.
நகமென்னும் அகத்தின் பின் வாசலில், நகத்தட்டையும், தோலையும் இணைக்கும் மிக முக்கியமான இணைப்புத் திசு, 'க்யூட்டிக்கிள்' எனப்படும் மெல்லிய வெண்ணிறத்தடை இது.
நகத்தட்டு என்ற மேற்கூரையை, தோலுடன் வலுவாகப் பிணைப்பதுடன், நகத்தில் சேரும் ஈரம், அழுக்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் எவையும், தோலுக்குள் புகாதவாறு பாதுகாக்கிறது.
பெரும்பாலான அழகு நிலையங்களில், நகத்தை சுத்தம் செய்வதாகக் கூறி, அறியாமை மிகுதியால், இந்த அதி முக்கிய உறுப்பான க்யூட்டிகிளை அழுக்காகக் கருதி நீக்கிவிடுவதால், ஈரமும், அழுக்கும், நுண்ணுயிரி, பூஞ்சைக்காளான், இவையனைத்தும் தோலுக்குள் சென்று, நகச்சுற்று என்ற நோய்த் தொற்று ஏற்பட்டு, நகத்தட்டு என்ற மேற்கூரை பழுதாகி, நகமென்னும் அகத்தின் கட்டமைப்பே நிலைக் குலைந்து விடுகிறது.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல், வளர வளர வெட்டினாலும், நகம் நம்மைக் காக்கும் கடமையிலிருந்து தவறுவதில்லை; நகம் வளர்ப்போம்.

டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்
மருத்துவ இயக்குனர்,
தோல் மருத்துவ மையம், சென்னை.
போன்: 93811 22225; 93813 22234

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement