Advertisement

பிழைப்பு!

''எப்போதும் இப்படித்தானே பண்ணுவார், அப்பா... இதுக்கு நீங்க ஏன் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்க... இங்க மட்டுமா, அவரு ஊரு திருவிழாவுக்கும் இதே கதை தானே... விடுங்கம்மா,'' என்றான், பிரசன்னா.
வழக்கம் போல, அம்மாவின் ஊர் திருவிழாவுக்கு, சனிக்கிழமை காலை வந்து, திருவிழா முடியும் வரை தங்காமல், 'வேலை இருக்கிறது...' என்று, ஞாயிறு இரவே பெட்டியை துாக்கியதில் வந்த ஆற்றாமை.
''இல்லடா... ஊர்ல, என் சொந்தக்காரங்க எல்லாம் எப்படி கேக்குறாங்கன்னு, உனக்கே தெரியுமில்ல... இவரு என்னடான்னா, விடுப்பு எடுக்க தயங்கிக்கிட்டு, வருஷா வருஷம் ஒரு நாள், ரெண்டு நாள் இருந்துட்டு, ஓடிடுறாரு,'' என்று, ஆதங்கப்பட்டாள், அம்மா.
'எவ்வளவு வருஷம் ஆனாலும், எவ்வளவு நாள் விடுப்பு எடுத்தாலும், ஊர் திருவிழாவுக்கு போய், அம்மாவையும், உறவுகளையும் சந்தோஷப்படுத்தணும்...' என்று நினைத்துக் கொண்டான், பிரசன்னா.
மாதங்கள் ஓடின. கல்லுாரி படிப்பு முடியும் வேளையில், 'கேம்பஸ் இன்டர்வியூ'வில், வேலைக்கு செல்லத் துவங்கினான், பிரசன்னா.
கை நிறைய சம்பளம் வாங்கிய அவனை கண்டு, பெற்றோர் பெருமை கொண்டனர்.
வேலைக்கு சேர்ந்து, ஆறு மாதம் தான் இருக்கும். அம்மாவின், ஊர் திருவிழா வந்தது. இந்த முறையும், ஒரு சனிக்கிழமை துவங்கி, திங்கள் இரவு வரை திருவிழா நடப்பதாக, திட்டமிடப்பட்டு இருந்தது.
''இந்த முறையாவது, மூன்று நாளும், அவசியம் ஊரில் இருக்க வேண்டும்,'' என, அவன் அம்மா சொன்னதை, வழக்கம் போல் நிராகரித்தார், அப்பா.
''நீ எவ்ளோ நாள் வேணா இருந்துட்டு வா; நான் வேணாங்கலை... சனி, ஞாயிறு இருந்துட்டு, திங்கட் கிழமை காலையில் கிளம்பிடுவேன்... பொழைப்பு முக்கியம்மா... புரிஞ்சுக்கோ,'' என்று அவர் சொல்ல, தொங்கிய முகத்துடன் சென்றாள்.
''நான், உன் கூடவே இருந்துட்டு, செவ்வாய்க்கிழமை சாயந்திரம் வர்றேம்மா,'' என்று, பிரசன்னா சொல்ல, அவள் முகம் லேசாக மலர்ந்தது.
வழக்கமாக தங்கும், மாமா வீட்டிற்கு சென்றனர்.
''வாங்க அய்யா... வாங்கம்மா...'' என்று, பெற்றோரை அழைத்த, மாமா, என்னையும், ''வாங்க மாப்பிள்ளை,'' என்று அழைத்தது, அவனுக்கு புதிதாக இருந்தது.
வெட்கம் கலந்த புன்னகையோடு, உள்ளே நுழைந்தான். அந்த வருடம், ஊரில், பிரசன்னாவுக்கு நிறைய மரியாதை.
'தம்பி, எப்புடி இருக்கீங்க... வேலை எல்லாம் நல்லா போவுதா?' என்று, யார் யாரோ வந்து விசாரித்தனர்.
சிலர், அவன் அம்மாவிடம், வயது, திருமணம் பற்றிய விபரம் கேட்டனர்.
''என்னம்மா... இந்த வருஷமாவது, எல்லாரும் முழு திருவிழாவுக்கு இருப்பீங்களா,'' என்று கேட்டார், மாமி.
''இல்ல, மதனி... வழக்கம் போல, அவரு, வேலைக்கு போகணும்ன்னு சொல்லிட்டார். நானும், இவனும், மூணு நாளும் இருப்போம்,'' என்றாள்.
''சரி விடும்மா... அதான், நம் ராசா இருக்கான்ல்ல... அது போதும்,'' என்று பதிலளித்தாள், மாமி.
ஊர் திருவிழா முடியும் வரை, தந்தை கலந்து கொள்வதில்லை என்பது, மாமா வீட்டில் குறையாக இருந்து, பின் கேலியாகவும் ஆகி இருந்தது.
'நிர்வாகம் என்னிக்குமே, நம் கட்டுப்பாட்டுல தான் இருக்கணும்... நாம, அதுக்கு பயந்தா இப்புடி தான்... வாழ்க்கை பூரா குனிஞ்ச முதுகோடு இருக்கணும்... உன் புருஷன், பயந்தாகொள்ளிம்மா... லெனின், மார்க்ஸ் எல்லாம் அதுக்கு தான் பாடுபட்டாங்க... இவங்களுக்கெல்லாம் எப்பதான் அது புரியப் போவுதோ...' என்று மாமா சொல்வதை கேட்டு, வருத்தப்படுவாள்.
இத்தகைய பேச்சுகள், அவள் கணவர் காதில் விழுந்தாலும், அவர் கண்டுகொள்வதில்லை.
சாப்பிட்ட பின் தோட்டம் பார்க்க சென்றனர். அவன் மாமி, அவர்களின் சொத்து பற்றி பெருமை பேசினாள். தோட்டம் துறவுகளை சுற்றிக் காட்டினாள். அருகிலேயே மலைகள் இருந்ததால், மதியத்தில் வெயில் தெரியவில்லை.
மாமா, பெரிய பண்ணையார். அவருக்கு, ஊரில் நிறைய நிலங்கள் இருந்தன.
''டேய் ராமசாமி... வந்து, இளநீர் பறிச்சு போடுடா,'' என, மாமி கட்டளையிட, வேலை செய்து கொண்டிருந்த ஒருவன், இளநீர் பறித்துப் போட்டான்.
''என்னடா... வேலை எல்லாம் எப்படி போகுது?'' என, அவர்கள் முன், தன் அதிகாரத்தை காட்டுவதற்கென்றே, உரக்கப் பேசினாள்.
''உங்க புண்ணியத்துல நல்லா போவுதுங்கம்மா,'' என, அவள் எண்ணத்தை உணர்ந்தவன் போல், பணிவாக பதிலளித்தான், ராமசாமி.
அதிகாரத்தை காட்டுவதும், அதற்கு, அடுத்தவர்கள் அடங்குவதை ரசிப்பதும், பண்ணையார் குடும்பங்களுக்கு இஷ்டம். அடக்கம் போல் நடித்தால், புளகாங்கிதம் அடைந்து விடுவர். அவர்களின் நன்மதிப்பை பெற, அடக்கத்தோடு நடிப்பது தான் சுலபமான வழி என்பது, அவனுக்கு தெரியாதது அல்ல.
''சரி... மாரிமுத்து எங்க?''
''பொண்ணுக்கு முடி இறக்க, மாமனார் ஊருக்கு போயிருக்கான்மா... நாளைக்கு வந்துருவான், உங்ககிட்ட சொல்லச் சொன்னான்,'' என்றான்.
''ஏண்டா... இங்க வேலை எல்லாம் அப்படியப்படியே கெடக்கு... விட்டுட்டு ஓடிட்டானா... வந்தான்னா, வீட்டுல வந்து, என்னை பாக்கச் சொல்லு,'' என்றாள்.
''சரிங்கம்மா!'' இடுப்பு வளைய கும்பிட்டான்.
அருகே நிறுத்தியிருந்த, மாமாவின் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றனர்.
நடந்த அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்தான், பிரசன்னா.
மாலை வேளையில், தன் அப்பா, அவரது பால்ய நண்பர் வீட்டிற்கு சென்றிருந்ததை அறிந்து, அங்கு செல்வதாக அம்மாவிடம் கூறி சென்றான், பிரசன்னா.
அவன் தந்தையோடு படித்து, அரசு ஆசிரியராகி, இப்போது, அந்த கிராம பள்ளியில் பணி புரிகிறார்.
நண்பரும், அவர் மனைவியும், மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றனர். அவர்கள் அன்பு உண்மையானது என்பதை உணர்ந்தான்.
''சரிடா... நான், ஏரிக்கரை வரைக்கும் காலாற நடந்துட்டு வரேன்... நீ பேசிகிட்டு இரு,'' என்று, கிளம்பினார், அப்பா.
பிரசன்னாவிடம், பழைய கதைகளை பகிர்ந்து கொண்டார், அப்பாவின் நண்பர். அவனும் ஆர்வமாக கேட்டுவிட்டு, மாமா வீடு திரும்பினான்.
இரவு, சாப்பிட்ட பின், களைப்பில் நன்கு உறங்கினான்.
மறுநாள் காலை திருவிழாவிற்கு சென்று, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த போது, மாமா முன் கெஞ்சிக் கொண்டிருந்தான், ஒருவன்.
அவர்கள் பேச்சிலிருந்து, ஊருக்குப் போயிருந்த, மாரிமுத்து அவன் தான் என்பது தெரிந்தது.
''இதுக்கு தான் நாயே, உன்னயெல்லாம் வைக்க வேண்டிய எடத்துல வைக்கணும்ங்கறது. இப்போ என்ன, ஊரு வேண்டிக் கெடக்கு உனக்கு. அறுப்பு வேலை எல்லாம் முடிஞ்சதும் போகக் கூடாதா,'' என்றார், மாமா.
''மன்னிச்சுக்குங்கய்யா... புள்ளைக்கு, அம்மை போட்டு ரொம்ப சிரமப்பட்டுச்சு... 'சாமிக் குத்தம் ஆகிப் போச்சு. சீக்கிரம் வேண்டுதலை நிறைவேத்தணும்'ன்னு, வீட்டுல சொன்னதால தான், அவசரமா போக வேண்டியதாயிருச்சு. அப்போ, அய்யாவும் - அம்மாவும் எங்கயோ வெளியே போயிருக்கிறதா சொன்னாங்க. அதனால தானுங்க, ராமசாமிகிட்ட சொல்லிட்டு போனேன். தப்பு தானுங்க... மன்னிச்சுக்குங்க,'' என்றான்.
''இது, சரிப்பட்டு வராது, மாரி... எதுக்கும் நீ கணக்கை முடிச்சுக்க,'' என்றார்.
காலில் விழுந்து, ''என் குடும்பமே நடுத்தெருவில் நிக்கும்யா... இரக்கம் காட்டுங்க எஜமான்,'' என்று கெஞ்சினான்.
''சரி சரி... எந்திரி... இதுவே கடைசியா இருக்கணும்... இனி, இப்புடி நடந்தா, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்,'' என்று கர்ஜித்தார், மாமா.
கண்களில் கண்ணீருடன் வெளியேறுவதை பரிதாபமாக பார்த்தான், பிரசன்னா.
''என்ன மாப்பிள்ளை... வியப்பா பாக்குறீங்க... இவனுங்க இப்படித்தான், வாங்குற காசுக்கு நன்றியோட இருக்கணும்ன்னு ஒரு உணர்வே கெடையாது. இப்புடி அடிச்சா தான், இந்த மாடெல்லாம் படியும்... நீங்க போங்க,'' என்றார், சிரித்தபடி மாமா.
மதியம் உணவிற்கு பின், சிறிது நேரம் கண்ணயர முயற்சித்தான். கிராமத்தில் கண்ட, கேட்ட சம்பவங்கள் அவனை உலுக்கின.
ஊருக்கெல்லாம் தொழிலாளர் நலன் பற்றி உபதேசிக்கும், மாமா, தான் முதலாளி ஆக இருக்குமிடத்தில், தொழிலாளியிடம், விசுவாசமும், ஓய்வற்ற தீவிர உழைப்பையும் தான் எதிர்பார்க்கிறார் என்பது, அவனுக்கு உரைத்தது.
திருமணமான புதிதில், குறைவாக சம்பாதித்த தந்தையை, மாமா எவ்வளவு தரக்குறைவாக நடத்தினார் என்பதை, அவரது நண்பர் சொன்ன விஷயங்களால் அறிந்திருந்தான். புதிதாக வந்த மரியாதை முதற்கொண்டு, மாரிமுத்துவின் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது வரை எல்லாவற்றையும் முடிவு செய்வது, அவர்கள் வேலை, வருமானம் தான் என்பது, அவனுக்கு உரைத்தது.
மாமியும், ஊரும் கொண்டாடுவது, கை நிறைய சம்பாதிக்கும், பிரசன்னாவை தான். அது இல்லையெனில், அவனும், மாரிமுத்துவும் ஒன்று தானே. அந்த எண்ணமே, அவனை பயமுறுத்தியது. சிந்தித்தபடியே, அவன் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்.
மாலை -
காபியுடன் வந்து எழுப்பிய போது, ''அம்மா... நானும், அப்பாவோட இரவே சென்னைக்கு கிளம்பறேன். நாளைக்கு ஆபீஸ் போகணும்,'' என்றபடியே, தன் உடைகளை எடுத்து அடுக்க தயாரானான், பிரசன்னா.

ஸ்ரீநாத்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement