Advertisement

இளஸ் மனஸ்! (29)

அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...
மகள் எழுதுவது... என் மனதை ஆட்டி படைக்கும், ஒரு பிரச்னைக்கு தீர்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
என் வயது, 15; வறுமை காரணமாக, 8ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. தந்தை கூலித் தொழிலாளி; குடிப் பழக்கம் உள்ளவர். கூலியில் பாதிக்கு மேல், 'டாஸ்மாக்' சென்று விடும்.
வீட்டு வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் தாய். அவருக்கு துணையாக, வேலைகளுக்கு செல்வேன். அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்களுக்கு, ஜாக்கெட் தைத்து தருவேன்.
இப்போது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். மனப்புழுக்கத்தால், யாரிடமும், சரியாக பேச முடிவதில்லை; இதற்கெல்லாம் காரணம், இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தான்.
அப்போது, வேறு பகுதியில் குடியிருந்தோம். பக்கத்து வீட்டில், புதுமணத் தம்பதியர், புதிதாக குடித்தனம் வந்தனர்; வெகு சீக்கிரத்தில் நன்றாக பழகி விட்டனர்.
அந்த வீட்டுக்காரர், சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார்; அவரை, 'ஆட்டோ அண்ணா' என்று தான் அழைப்போம். அவரது மனைவி மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்.
அவ்வப்போது, பணம், பொருட்கள் தந்து உதவுவார். அவருக்கு, என் ஐந்து வயது தங்கை மீது கொள்ளைப் பிரியம். எப்போதும், துாக்கி வைத்துக் கொஞ்சுவார்.
சில மாதங்களில், அந்த பெண் பிரசவத்திற்காக சென்று விட்டார். அதனால், ஆட்டோ அண்ணாவுக்கும் சேர்த்து, என் தாய் சமைப்பார்.
ஒரு நாள், இடைவிடாமல் கனமழை பெய்தது; வீட்டுக்கூரையில் பழுது ஏற்பட்டு, மழைநீர் அறைக்குள் கொட்டியது.
இரவெல்லாம் துாங்காமல் விழித்திருந்தோம். விடிந்தும், மழை விடவில்லை; அதனால், ஆட்டோ அண்ணா வீட்டில் எங்களை தங்கச் சொல்லி, வேலைக்கு சென்றுவிட்டார் அம்மா.
எங்களுக்கு, பாய், தலையணை கொடுத்து படுக்கச் சொல்லி, சவாரிக்கு சென்று விட்டார் ஆட்டோ அண்ணா.
முதல் நாள் இரவில் துாங்காததால், தங்கையுடன் அயர்ந்து துாங்கி விட்டேன்.
திடீரென, உடம்பில் ஏதோ ஊர்வது போன்று உணர்ந்து விழித்தேன்; ஆட்டோ அண்ணா கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சியில், பலத்தை திரட்டி, அவரை தள்ளி விட்டு, வேகமாக வெளியேறினேன்.
அச்சமயத்தில், என்ன செய்வதென்று புரியவில்லை; நேராக, அம்மா வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். பதைபதைப்புடன் இருந்த என்னைப் பார்த்ததும், ஆசுவாசப்படுத்தி விசாரித்தார். அழுதபடியே நடந்ததை கூறியதும், அதிர்ச்சி அடைந்தார்.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் செய்தார். வீடு திரும்பிய போது தான், அந்த படுபாதகன் செய்த மற்றொரு கொடுமை தெரிய வந்தது. நான் தப்பியோடியதும், என் தங்கையை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டான்.
எங்கள் குடும்பத்தை உலுக்கிய இச்சம்பவத்திற்குப் பின், வசிப்பிடத்தை மாற்றினோம். அந்த காமுகனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தது.
இது நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த கொடூர சம்பவம் என் மனதை வாட்டி வதைக்கிறது. தங்கையை காப்பாற்றாமல் விட்டதாக குற்ற உணர்வால் தவிக்கிறேன்.
எதிலும் ஈடுபட மறுக்கிறது மனம்; நடைபிணமாக வாழ்ந்து வருகிறேன். ஒருமுறை, தற்கொலைக்கு முயன்று பிழைத்தேன். இந்த பிரச்னைக்கு என்ன தான் தீர்வு... நான் இயல்பு நிலைக்கு மாற, தகுந்த ஆலோசனை தர வேண்டுகிறேன்.

அன்பு மகளே... உன் கடிதம் கண்களை குளமாக்கியது.
'பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்' என்பர். வறுமை, கல்லாமை போன்றவற்றுடன் போராடி கொண்டிருந்த உனக்கு, மேலும் சோதனையாய், இந்த துயரம் அமைந்து விட்டது.
இந்த சம்பவம், 'யாரையும் நம்பி, பெண் குழந்தைகளை ஒப்படைக்க கூடாது' என்ற அறிவுரையை, பெற்றோருக்கு உணர்த்துகிறது.
பொறுப்பற்ற ஒருவனால், அவன் மனைவி மற்றும் குழந்தைகள் எப்படிப்பட்ட பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
'பக்குவப்படாத வயதில் சந்திக்க நேரும் பாலியல் கொடுமைகளை, வாழ்நாளில் மறக்க முடியாது' என, மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். இது, இரு பாலருக்கும் பொருந்தும்.
அந்த நிகழ்வை மறக்க முயற்சி செய்; தனிமையில் இருப்பதை தவிர்; மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற முயற்சி செய்.
ஏதாவது, ஒரு தொழிலில், செயலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள். உடல் காயத்தை மருந்து போட்டு ஆற்றலாம். மனதில் ஏற்படும், ஆழமான பாதிப்பை காலம் தான் மருந்திட்டு ஆற்றும். நடந்தவற்றை கெட்ட கனவாக எண்ணி மறந்து விடு.
உன் தங்கை இறப்பிற்கு நீ காரணம் அல்ல; மனதளவில் பக்குவப்படாத வயதில் பயங்கர அதிர்ச்சியை திடீரென நீ சந்தித்திருக்கிறாய். அந்த தருணத்தில், உன் நிலையில் இருப்போரின் மனநிலையில் தான், நீ செயல்பட்டிருக்கிறாய். அதனால், தங்கையை காப்பாற்ற தவறி விட்டோமே என, வருத்தப்படத் தேவையில்லை.
நம்பிக்கைக்கு உகந்தவர்கள் துணையுடன் மனநல மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால், வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவாய்.
தற்கொலை எதற்கும் தீர்வளிக்காது; கோழைகள் தான் தற்கொலைக்கு முயல்வர். வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்; அதை எதிர்கொண்டு வாழ்ந்தாக வேண்டும்.
'நடந்ததையே நினைத்திருந்தால் மனதில் என்றும் அமைதியில்லை...' என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளை மனதில் கொள். வாழ்க்கை என்பது, மிகப்பெரிய சமுத்திரம்; அதன் கரையோரத்தில் தான் நீ இருக்கிறாய்; இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும்.
வழியில், சுறா, புயல், இடி, மழை வந்து பயமுறுத்தும். அவற்றை எல்லாம் எதிர்க்கொள்ளும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சியை இப்போதே துவங்கு.
வாழ்வில் வெற்றி பெற்று, உன்னத நிலையை அடைய வாழ்த்துகிறேன். கவலை வேண்டாம் மகளே!
அன்பு தாய், பிளாரன்ஸ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement