Advertisement

அதிமேதாவி அங்குராசு!

Share

வானம் தொடலாம்!
சிலர், 25 வயது கடந்தும், குட்டையாக காணப்படுவர். சிலவகை பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தை கடைபிடிப்பதால் உயரமாக வளர வாய்ப்பு உண்டு. உடல் வளர்ச்சியில், 'ஹார்மோன்' என்ற, இயக்குநீர் சுரப்பி முக்கிய பங்காற்றுகிறது. இது சுரப்பது, 20 வயதுக்கு பின் படிப்படியாக குறையும்.
உயரமாக விரும்புபோர், தினமும் சில உடற்பயிற்சிகளை செய்யலாம். சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி போன்றவை, இயக்குநீர் சுரப்பைத் துாண்டும்.
உயரம் தாண்டுதல், 'ஸ்கிப்பிங்' என்ற, கயிறு குதித்தல், முன்னோக்கி குனிந்து, கை விரல்களால், கால் கட்டை விரலை தொடுதல், 'புல்லப்' என்ற, தொங்கி எம்புதல் போன்ற பயிற்சிகள், உயரமாக வளர துாண்டுபவை.
வைட்டமின் - டி என்ற சத்து எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை, அதிகாலை சூரிய ஒளியில் அதிகம் பெறலாம். யோகாசனங்களில், புஜங்காசனம், தாடாசனம், சர்வாங்காசனம் போன்ற நிலைகளை பயிற்சி செய்வது, வளர்ச்சியை துாண்டும்.
கோழி இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, மீன், உருளைக்கிழங்கு, கேரட், பச்சை காய்கறிகள், பீன்ஸ், முந்திரி, பாதாம், பட்டாணி போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதாலும், உடல் உயரமாக வளரும். தினமும், எட்டு டம்ளர் தண்ணீர் தவறாது பருகலாம்.

தேனீயின் நுட்பம்!
மனிதனால் முடியாத காரியம் இல்லை. இதை அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்து வருகின்றன. சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கோளை ஆராய விண்கலம் அனுப்பியாகிவிட்டது.
ஒரு பொருளை, 200 கோடியாக பிரித்து, ஒரு பகுதியை ஆராயும், 'நானோ' என்ற மீநுண் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதன் மூலம் வியக்கும் நன்மைகளை மனிதகுலம் அடைந்து வருகிறது. ஆனாலும், இயற்கையின் பல நடவடிக்கைகள், சவாலாக தான் உள்ளன.
சுறுசுறுப்பான செயல்பாட்டால் புகழ் பெற்றது தேனீ. பூவில், தேன் சேகரிப்பது விந்தை நிறைந்த இயற்கை நிகழ்வு. தேனை, பன்னெடுங்காலமாக உணவாக கொண்டுள்ளான் மனிதன்.
ஒரு வேலைக்கார தேனீ, தினமும், 2000 பூக்களுக்கு தாவுகிறது. அவற்றிலிருந்து, கூரிய நாக்கால், இனிப்பு திரவத்தை உறுஞ்சுகிறது. உடலில் உள்ள சிறு பையில் நிரப்பி எடுத்து செல்கிறது.
உடலில் சுரக்கும் ரசாயனத்தால், அந்த திரவத்தை மாற்றியமைக்கிறது. பின், கூட்டில் உள்ள மெழுகு அடையில் சேமிக்கிறது. அங்கு இறகசைப்பின் மூலம், திரவத்தை ஆவியாக்கி, இனிப்பை, தேனாக திரட்டுகிறது. சுத்தமான தேனில், 14 முதல், 18 சதவீதம் தான், நீர் சத்து இருக்கும். அது சுலபமாக செரிக்கும்.
ஒரு தேனீயால் வாழ்நாளில், ஒரு தேக்கரண்டியில், 12ல் ஒரு பங்கு அளவு தான், பூக்களில் இனிப்பு திரவத்தை சேகரிக்க முடிகிறது. பல்லாயிரக்கணக்கான தேனீக்கள், பல நாட்கள் உழைத்தால் தான், மனிதன் ஒருவேளை உப உணவாக கொள்ளும் தேனை, சேகரிக்க முடியும்.
செயற்கை முறையில், தேன் உருவாக்க நடந்த முயற்சி வெற்றி பெறவில்லை. பூவில் தங்கியுள்ள இனிப்பு திரவத்தை, தேனாக மாற்ற, அறிவியல் தொழில் நுட்பம் உதவவிலலை. சுறுசுறுப்பு உயிரினமான தேனீயின் நுட்பத்தை, மனிதனால் உருவாக்க முடியவில்லை.
உலக அளவில் தேன் உற்பத்தியில், ஆசிய நாடான சீனா, முதலிடம் வகிக்கிறது. ஆசிய நாடான துருக்கி மற்றும் அமெரிக்கா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சொல்லறிவோம்
ஹார்மோன் - இயக்குநீர்
நானோ - மீநுண்

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement