Load Image
Advertisement

ஒப்பந்த பண்ணைய சட்டம்: ஓர் அறிமுகம்

தமிழகத்தில் கரும்பு, பருத்தி, மூலிகை பயிர்கள் பயிரிடுவது, இறைச்சி கோழி உற்பத்தி போன்றவை பல ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் நடக்கிறது. எனினும், ஒப்பந்த சாகுபடியில் பங்கு பெறும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்டம் இல்லை. இதை கருத்தில் கொண்டு 'தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் - 2019' சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இச்சட்டம் அரசிதழில் வெளியாகியுள்ளது. இச்சட்டம் 2020 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. தேசிய அளவில் ஒப்பந்த சாகுபடிக்கென்று பிரத்யேகமாக தமிழக அரசு முதல் முதலாக தனிச்சட்டத்தை வடிவமைத்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

இச்சட்டத்தின்படி நெல் உள்ளிட்ட தானிய வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், நார் வகைகள், காய்கனிகள், நறுமணப் பொருட்கள், கால்நடை உற்பத்தி பொருட்கள், வனப் பொருட்கள், பட்டுக்கூடு, பட்டு இழை, கரும்பு உள்ளிட்ட 110 பொருட்களை ஒப்பந்த சாகுபடியில் ஒப்பந்தம் செய்து விளை பொருட்களை விற்பனை செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும்போது, அன்றைய தினத்தின் விலையையே பொருள்களை பரிமாற்றம் செய்யும்போது நிர்ணயிக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. ஒப்பந்த பண்ணைய சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளர், அந்த பகுதியை சேர்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையில் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ஒப்பந்த பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தை வேளாண் வணிகத்துறை அலுவலர் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும்.

பல்வேறு நன்மைகள்
அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இந்த புதிய ஒப்பந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எவ்வித பொருள் அல்லது பண இழப்பும் ஏற்படாது. விரும்புவோர் ஒப்பந்த சாகுபடி முறையில் சேரலாம். விவசாயிகளுக்கும், வேளாண் சார்ந்த தொழிற் சாலைகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்தல் ஏற்படும்.
விதைப்பு காலத்துக்கு முன்பே விளை பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அனைத்து சாகுபடி தொழில் நுட்பங்களையும் பின்பற்றி, அதன் மூலம் விளைச்சலை அதிகரித்து விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வாய்ப்புள்ளது.
இச்சட்டத்தால் தரிசு நிலங்கள், பயனற்ற நிலங்கள், விவசாயம் செய்யப்படாத நிலங்கள் பயன் பாட்டுக்கு வரும். விலை வீழ்ச்சியடையும் காலங்களில் விவசாயிகளை காப்பாற்ற இச்சட்டம் உதவும். பயிர் காப்பீடு, அரசு சலுகைகளும் பெறலாம். மத்திய, மாநில, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளை பொருட்களையும் ஒப்பந்த சாகுபடி சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்ய இயலாது.
- எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.
94435 70289



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement