Advertisement

உடல் பருமனாக இருப்போரின் சிரமத்தை நாம் புரிந்து கொள்வதில்லை!

Share

உடல் பருமனுக்கு காரணம் என்ன?
பெற்றோரை எப்படி நம்மால் தேர்வு செய்ய முடியாதோ, அதுபோலவே, நம் பாலினம், நிறம், உயரத்தையும் தீர்மானிக்க முடியாது. இவையெல்லாம், மரபணுவில் இருந்து வருபவை. என்ன தான் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி என்று மெனக்கிட்டாலும், உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. எவ்வளவு உயரம் வளர முடியும் என்று, மரபணுவில் தீர்மானிக்கப்பட்டு உள்ளதோ, அந்த உயரம் மட்டுமே வளர முடியும். தீவிர உடல் பருமனுக்கும், மரபணுவே காரணம். உடல் பருமனை உண்டாக்கும் மரபணு இருந்தால், எவ்வளவு குறைவாக சாப்பிட்டாலும், பருமனை தவிர்க்க முடியாது.


ஒருவரின் சராசரி உடல் எடை எவ்வளவு?
ஆண், பெண், உணவு, சூழல் என்று, எதைப் பொருத்தும், எடை இருக்கக் கூடாது. அது, உயரத்தைப் பொருத்தே இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியம்.உயரத்தை, செ.மீ.,யில் அளந்தால் என்ன வருகிறதோ, அதிலிருந்து, 100ரைக் கழித்தால் வருவது தான், நம் அதிகபட்ச உடல் எடை. 1 அடி என்பது, 30 செ.மீ., 5 அடி இருக்கும் ஒருவர், 150 செ.மீ., உயரத்தில் இருப்பார். இவரின் அதிகபட்ச எடை, 40 - 50 கிலோ வரை இருந்தால், அது தான் ஆரோக்கியமானது. இதே நபர் கூடுதலாக, 35 கிலோ இருந்தால், அதீத உடல் பருமன்.மரபணு தவிர, சுற்றுச்சூழல், உணவு பழக்கம் போன்ற வெளிக் காரணிகளாலும், உடல் எடை அதிகரிக்கலாம்.

இதில் நகரம், கிராமம் என்ற வித்தியாசம் உள்ளதா?
நகரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், அவரவர் சூழலுக்கு ஏற்ப, வாகனங்களில் பயணிப்பர். ஆனால், கிராமத்தில் பள்ளிக் குழந்தைகள், 3, 4 கி.மீ., துாரம் நடந்து செல்வது, சாதாரண விஷயம்.மரத்தில் ஏறுவது, குதிப்பது, குளத்தில், கிணற்றில் குதித்து நீச்சல் அடிப்பது என, கிராமத்து குழந்தைகளுக்கு, இயல்பாகவே உடற்பயிற்சி கிடைத்து விடுகிறது. இந்த வாய்ப்பு, நகர குழந்தைகளுக்கு அமையாததால், உடல் எடை அதிகரிக்கிறது. நகரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இப்போது, விளையாட்டு மைதானங்களே இருப்பதில்லை.'குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் விளையாட, அனைத்து பள்ளிகளும் நேரம் ஒதுக்க வேண்டும்' என, சமீபத்தில், தமிழக அரசு கூறியுள்ளது. இதை முறையாக செயல்படுத்தினால், குழந்தை பருவ உடல் பருமனை,நிச்சயம் கட்டுப்படுத்த உதவும்.


உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள்?
உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகளை, உணர்வு பூர்வமாக, சமூக ரீதியாக, மருத்துவ ரீதியாக என, பிரிக்க வேண்டும். இதில், சமூக ரீதியில் அவர்கள் சந்திக்கும் பிரச்னை அதிகம்.எதையெல்லாம் நாம் இயல்பாக செய்வோமோ, அவையெல்லாம் அவர்களுக்கு, நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு சிரமமானது.குண்டாக இருக்கும் நபர் நம்மைக் கடந்தால், எவ்வளவு குண்டு என, உடனே திரும்பிப் பார்ப்போம். உணவகத்தில், இரண்டு இட்லி ஆர்டர் செய்தால் கூட, மற்றவர்களின் கவனம் முழுவதும், என்ன தான் இவர் சாப்பிட போகிறார் என்று, அவர் தட்டிலேயே இருக்கும்.துணி, காலணி போன்ற எதுவும், இவர்களின் அளவுக்கு கிடைக்காது. தினமும், ஆயிரம் பார்வைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒரே தகுதியுடைய இருவர், ஒரே வேலைக்கு வந்தால், உடல் பருமனாக இருப்பவர்களை நிராகரித்து விடுவர்.


உடல் பருமன் உள்ளவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?
சமூக, மருத்துவ பிரச்னைகளை எதிர் கொள்ளும் இவர்கள், அதை சமாளிக்க, நகைச்சுவையாகப் பேசுவது, பிறருக்கு உதவி செய்வது என்று இருப்பர். சிலர், என்னால் எதுவும் செய்ய முடியும் என்று காட்டுவதற்காகவே, வேகமாக வாகனங்களை ஓட்டி, பிறர் கவனத்தை ஈர்க்கும், எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதனால், அவர்களின் உடல் பருமனை மறந்து, செயல்களை நாம் கவனிக்க துவங்குவோம் என்பது, அவர்களின்நம்பிக்கை.அரை மணி நேரம் அவர்களோடு இயல்பாக பேசினால், மெதுவாக தங்களின் பிரச்னைகளை மனம் திறப்பர். 'ஆமாம் டாக்டர்... சட்டை, ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றை போட முடியவில்லை. குனிந்து, ஷூ லேஸ் கட்ட முடியவில்லை' என்பர். உடல் பருமனோடு இருப்பவர்களின் சிரமத்தை, நாம் புரிந்து கொள்வதில்லை.


மருத்துவ ரீதியிலான பிரச்னைகள் என்ன?
ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை கோளாறுகள் தவிர, கேன்சரால் இறக்கும் அபாயம் இவர்களுக்கு அதிகம். இயல்பான எடையை விடவும், 20 கிலோ அதிகமாக இருந்தால், துவக்கத்தில் சிரமம் தெரியாது. அதன்பின், மூட்டு வலி, முதுகு வலி என்று பல பிரச்னைகள் வரும். பரிசோதனைகள் செய்வதும் சிரமம். அறுவை சிகிச்சை, தொற்று என்று எந்த பிரச்னையானாலும், அதிலிருந்து வெளியில் வர, மற்றவர்களைக் காட்டிலும் அதிக நாட்களாகும்.பித்தப்பை கல், மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எதிர்மறை உணர்வுகள் அதிகம் இருக்கும். 90 சதவீதம் பேருக்கு, மன அழுத்தம் இருக்கும். மனநோய்க்கான மருந்துகள் அனைத்தும், உடல்பருமனை அதிகரிக்கும்.


உடல் பருமன் உள்ளவர்கள், கூடுதல் சத்துடன் இருப்பரா?
இப்படி ஒரு தவறான எண்ணம் உள்ளது. இவர்களை பரிசோதனை செய்து பார்த்தால், தீங்கான விஷயங்கள் உடலில் அதிகம் இருக்கும்; தேவையானவை குறைவாக இருக்கும் அல்லது இருக்காது.பெரும்பாலும், ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பர். தசைகளின் வலிமை குறைவாக இருக்கும்.


உணவு பழக்கம் எந்தளவு பாதிப்பை கொடுக்கும்?
மேற்கத்திய நாடுகளில், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், அதீத உடல் பருமனுடன் இருப்பர். அங்கு, பாக்கெட்டில் அடைத்த, பதப்படுத்தப்பட்ட பிஸ்கட், கார்பனேடட் பானங்கள், சிப்ஸ் போன்றவை குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும். இதில் உள்ள மைதா, சர்க்கரை, வேதிப் பொருட்கள், கலோரியை மட்டும் தருமே தவிர, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பது, அவர்களுக்கு தெரியாது.தற்போது, நம் நாட்டிலும், இதே நிலை தான் உள்ளது. இதுபோன்ற உணவுகள் எளிதாகக் கிடைப்பதால், அனைத்து தரப்பினரும் இதை உண்கிறோம். பர்கர், பீட்சா போன்ற, 'ஜங்க்' உணவுகளை, பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாமல், அனைவராலும் சாப்பிட முடிகிறது. எனவே, உடல் பருமன் தேசிய பிரச்னையாகி விட்டது.


இதற்கு தீர்வு தான் என்ன?
உடல் எடையைக் குறைப்பது, அத்தனை எளிதான காரியம் அல்ல. இருக்க வேண்டிய எடையை விடவும், சற்று அதிகம் இருப்பவர்கள், உணவு, உடற்பயிற்சி என்று, வாழ்க்கை முறையை மாற்றம் செய்வதன் மூலம், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதீத உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு, இரைப்பையின் அளவைக் குறைக்கும், 'பேரியாட்ரிக்' அறுவை சிகிச்சை, நல்ல பலன் தரும்.

டாக்டர் ரவீந்திரன் குமரன்
குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர்,
அப்பல்லோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனை,
சென்னை. 98410 41141

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement