Advertisement

கடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது

Share

நம் கடந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, சில சமயங்களில் முக்கிய செயல்களை மேற்கொள்ளாததற்கு, நேரமின்மையை காரணமாக்குகிறோம்.


நேர மேலாண்மை பற்றி நமக்கு சரியான புரிதல் இல்லாதது தான், உண்மையான காரணமாக இருக்கும். கடந்த நேரமும், நனைத்த அலையும் திரும்பி வராது. நேரத்தை பணமாகவும், தம் சொத்தாகவும், அதிகாரமாகவும் கருதுவோர் உண்டு.பல பணிகளில் ஈடுபடுவது சிலரால்
சிலாகிக்கப்பட்டாலும், உண்மை வேறு விதமாக இருக்கிறது. பல பணியில் ஈடுபடுவோரின் திறன், நாளடைவில் குறைவதாக, உளம் சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நேரத்தின் முக்கியம் ஒரு ஆண்டின் முக்கியத்துவம், தேர்ச்சியடையாத மாணவனுக்குப் புரியும். ஒரு மாதத்தின் முக்கியத்துவம், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தெரியும். ஒரு வாரத்தின்
முக்கியத்துவம், வாரப்பத்திரிகை ஆசிரியர் அறிவார். ஒரு நாளின் முக்கியத்துவம், வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் தம்பதியர் அறிவர்.


ஒரு நிமிடத்தின் முக்கியத்துவம், பிரயாணப் பேருந்தை தவறவிட்டவர் உணர்வார். ஒரு
வினாடியின் முக்கியத்துவம், விபத்தில் தப்பியவர் சொல்வார். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தின் அருமை, ஒலிம்பிக், 100 மீட்டர் பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவருக்குப் புரியும். வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மையை முதன்மையானக் காரணமாகக் கூறுகின்றனர்.


சரியான நேரத்தில், சரியான வேலையைச் செய்வதே, நேர மேலாண்மை என்பது. நேர மேலாண்மையில் நிபுணத்துவம் பெறுவதற்கு, 'பரேடோ' கொள்கை பற்றி அறிந்திருப்பது
நல்லது.


வில்பெரடோ பரேடோ எனும்,இத்தாலிய பொருளாதார நிபுணர், சூப்பர் மார்க்கெட் ஒன்றில்
விற்பனையாகும் பொருட்களையும், வாங்கு வோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
விற்பனையாகும் பொருட்களையும், அதற்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் செலுத்தினர் என்று யோசித்தபோது, அவருக்கு ஒரு உண்மை புலப்பட ஆரம்பித்தது. 80 சதவீத விற்பனை பணம், 20 சதவீத பொருட்களின் விற்பனையிலிருந்து வந்தது என்று தெரிந்து கொண்டார்.


அதிலிருந்து, ஒரு கொள்கைக் கோட்பாட்டை உருவாக்கினார். இந்த உலகத்தில், 80 சதவீத விளைவுகளுக்கு, 20 சதவீத விஷயங்களே காரணமாக இருக்கின்றன என்று தெரிந்து
கொண்டார்.நம்முடைய செயல்களுக்கும், இந்த விதி பொருந்தும். 80 சதவீத விளைவுகளுக்கு, 20 சதவீத செயல்கள் காரணமாக இருப்பதால், முதலில் அந்த, 20 சதவீத செயல்களை
மேற்கொண்டால், நாம் நேர மேலாண்மையில் சிறப்புற முடியும் என்று, ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர். மேற்கூறிய, 20 சதவீத செயல்களை, 'முக்கிய சில' என்றும், மற்ற
செயல்களை, 'சாதாரண பல' என்றும் கருதுகின்றனர்.


எப்படி அந்த, 'முக்கிய சில'செயல்களைக் கண்டறிவது?


நம் முன்னே இருக்கும் செயல்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:


1. மிக முக்கியமான செயல்கள்


2. இச்செயல்களின் விளைவுகள் முக்கியாக இல்லாவிட்டாலும், சாதாரணமாக இருக்கும்.


3. இவ்வகை செயல்களின் விளைவுகளுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது.


4. மற்றவர்களின் செயல்கள்.


5. தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்.


ஒன்று மற்றும் இரண்டு வகை செயல்கள், நாம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய,
முக்கிய சில செயல்கள்.மூன்று, நான்கு, ஐந்து பிரிவுகள், நாம் தவிர்க்க வேண்டிய செயல்கள்.
போர்க்களங்களில், நேர விரயம் தவிர்க்கப்பட வேண்டியது.


போர் நாள் இரவொன்றில், நெப்போலியன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். எதிரிகள்
எல்லையில் ஊடுறுவதாக, தெற்கு எல்லை படை வீரர்களின் தலைவன், நெப்போலியனின் பணியாளை அணுகி, நெப்போலியனுக்கு அந்த விஷயத்தை தெரிவிக்குமாறு பணித்தான்.


உறங்கிக் கொண்டிருந்தநெப்போலியன், சற்றும் பதற்றம் அடையாமல், உறங்கிய இடத்தில் இருந்து கொண்டே சொன்னான், 'அலமாரியில் இருக்கும், 34வது வரைபடத்தை, அந்த தெற்கு படைத் தலைவனிடம் கொடுத்து, அதன்படி என் கட்டளைகளை நிறைவேற்றச் சொல்' என்றான்.
அவ்வாறே, அந்த படைத்தலைவனும் பின்பற்றி, எதிரியை விரட்டியடித்தான். தெற்கு படைத் தலைவனுக்கு, ஒன்று புரியாமலிருந்தது. எப்படி, அந்த குறுகிய நேரத்தில், நெப்போலியனால் ஒரு முடிவை எடுத்து, ஒரு வரைபடமாகத் தர முடிந்தது என்று.


ஆனால் உண்மை அதுவல்ல. போர் நிகழ்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, எல்லா
திசைகளிலும் எதிரிகளின் தாக்குதல் இருந்தால், எப்படி அதை எதிர்கொள்வது என்று,
நெப்போலியன் சரியாக திட்டமிட்டிருந்தான். அதற்கேற்ப, வரைபடங்களையும் தயாரித்து வைத்திருந்தான்.


நேர மேலாண்மைக்கு, திட்டமிடுதலும் ஒரு முக்கிய காரணம். நேரம், காத்திருப்பவர்களுக்கு மிக மெதுவாகவும், பயந்தவர்களுக்கு, மிக வேகமாகவும் புலம்புகின்றவர்களுக்கு, மிக
நீளமாகவும், கொண்டாடுபவர்களுக்கு, மிக குறைவாகவும் காட்சியளிக்கும்.
நேரம், விரும்புகின்றவர்களுக்கு நித்தியமாக இருக்கிறது.

டாக்டர் டி.வி.அசோகன்

மனநல மருத்துவர், சென்னை

94440 18060

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement