Advertisement

இது உங்கள் இடம்!

தன்னம்பிக்கையை உசுப்பி விட்ட மேனேஜர்!
நண்பனின் அண்ணன் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். திறமையாக பணிபுரிந்தும், குறைவான சம்பளம் கொடுத்ததால், சம்பள உயர்வு தருமாறு, மேனேஜரிடம் பலமுறை கேட்டிருக்கிறார்.
'அப்படியெல்லாம் தர முடியாது...' என, மேனேஜர் கூறவும், 'என்ன சார், கடுமையா வேலை வாங்கறீங்க... ஆனா, சம்பளம் அதிகப்படுத்த மாட்டேங்கறீங்க... இங்கே வேலை பார்க்கிறதுக்கு, சித்தாள் வேலைக்கு போனா கூட, அதிக சம்பளம் கிடைக்கும்...' என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்.
'அப்படின்னா, சித்தாள் வேலைக்கே போகலாமே... அங்கே, அதிக சம்பளமும், படிப்படியா, 'புரமோஷனும்' கிடைக்கும்... நீயெல்லாம் அப்படிப்பட்ட வேலைக்கு தான் லாயக்கு...' என்று ஏக வசனத்தில், கிண்டலாக கூறியிருக்கிறார், மேனேஜர்.
இது, நண்பனின் அண்ணனை உசுப்பேற்ற, கம்பெனி வேலையை உதறி, மேனேஜர் சொன்னது போலவே, சித்தாள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
பெற்றோர் தடுத்தும் கேட்காமல், அந்த வேலையை கற்று, சில ஆண்டுகளிலேயே, 'மேஸ்திரி, கான்ட்ராக்டர்' என்று படிப்படியாக, 'புரமோஷன்' பெற்றார். பெரிய பெரிய, 'பில்டிங் கான்ட்ராக்ட்' பிடித்து, பல லட்சங்களில் வருமானம் கிடைத்து, நல்ல நிலைக்கு வந்து விட்டார்.
பழைய நிறுவன மேனேஜரின் புது வீட்டை கட்டித்தரும், 'கான்ட்ராக்ட்'டையே பெற்றார். அவரது உயர்வை கண்ட மேனேஜர், அவமானத்தில் தலை குனிந்துள்ளார்.
ஆனால், நண்பனின் அண்ணனோ, மேனேஜரிடம், 'நீங்கள் உசுப்பேற்றி விட்டதால் தான், ரோஷம் வந்து உழைத்தேன். அதனால், நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்...' என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
எது எப்படியோ, ஒருவரின் குத்தல் பேச்சு, வாழ்க்கையில் முன்னேற, 'லிப்ட்' ஆக அமைந்து விட்டது.
ஏ.எஸ். யோகானந்தம், ஈரோடு.

எங்கும் தீபம் ஒளிரட்டும்!
கார்த்திகை தீபத்திற்காக, புதிய அகல் விளக்கு வாங்க, மார்க்கெட்டுக்கு போன போது, பக்கத்து, 'போர்ஷனில்' குடியிருக்கும், வயது முதிர்ந்த பெண்மணியும் என்னுடன் வந்தார். அவர் கையில் நான்கு பைகள்.
ஒவ்வொன்றிலும், ஒரு டஜன் அகல் விளக்குகளை வாங்கி போட்டார். பின், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் மற்றும் தேங்காய் நான்கு, 'செட்!' அதன்பின், வீட்டிற்கு அருகே உள்ள கடையில், எண்ணெய் பாக்கெட், திரி, கற்பூரம், தீப்பெட்டி என, நான்கு, 'செட்' வாங்கிக் கொண்டார்.
நான், அவரை ஆச்சரியமாக பார்த்தபோது, அதற்கு, அவரே விளக்கம் சொன்னார்...
'எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண், பழம் விற்கும் பெண், கீரைக் கார பெண் மற்றும் பூக்கார பெண் என, அனைவருக்கும், 'தீபத்திற்கு, வீட்டில் விளக்கேத்துங்க...' என்று சொல்லி, முன்பொரு முறை பணம் கொடுத்தேன்.
'மறுநாள் அவர்களிடம், 'கார்த்திகை தீபத்திற்கு, வீட்டில் விளக்கேற்றி, சாமி கும்பிட்டீர்களா...' என, கேட்டேன். 'அதெல்லாம் எங்களுக்கு கட்டுப்படி ஆவுற சமாசாரமாம்மா...' என, விரக்தியாக பதில் கூறினர்.
'இப்போதெல்லாம் பணம் கொடுப்பதற்கு பதில், தீபத்திற்குரிய பொருட்களை, நானே, 'செட்' ஆக வாங்கி கொடுத்து விடுகிறேன். அடுத்த நாள், எல்லாரும் வந்து, முகம் மலர, 'நீங்க கொடுத்த பொருட்களை பார்த்ததும், ஆசையா, எங்க பசங்களே வாசல்ல விளக்கேத்தினாங்கம்மா. வீட்டில் தேங்கா, பூ, பழம் வச்சு படைச்சு, சாமி கும்பிட்டோம்...' என்றனர்.
'எல்லார் வீட்டிலும் தீபம் ஒளிர்ந்ததை எண்ணி, மனம் நிறைவாக இருக்கிறது...' என்றார்.
- எஸ். சரண்யா, சென்னை.

பாட்டியும், பல்லாங்குழியும்!
என் மகள் கருவுற்றிருந்தாள். அவளுக்கு, வாந்தி அதிகமாகவே, மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிட்டும் குறையவில்லை. என்ன செய்வதென்று புரியாமல், எங்கள் தெருவில் வசிக்கும், 80 வயது மூதாட்டியிடம் ஆலோசனை கேட்டேன்.
மிக எளிமையான வைத்திய முறைகளை கூறியவர், 'மதியம் உன் வீட்டிற்கு வருகிறேன்...' என்றார்.
மதியம் வீட்டிற்கு வந்தவர் கையில், பல்லாங்குழி கட்டை இருந்தது. என் மகளை அழைத்து, புளியங்கொட்டைகளை வைத்து, பல்லாங்குழி விளையாட்டை சொல்லிக் கொடுத்தார்.
விளையாட்டு புதுமையாக இருக்கவே, மகளும் அவருடன் சேர்ந்து விளையாடினாள். மாலையானதும், மகளிடம், 'நாளை விளையாடலாம்...' என்றார், பாட்டி.
ஒரு மணி நேரத்தில், 10 தடவை வாந்தி எடுக்கும் மகள், மூன்றரை மணி நேரம் வாந்தி எடுக்காமல் இருந்தாள். மறுநாள் காலை, சிறிது நேரமும், மாலையில் சிறிது நேரமும் பல்லாங்குழி விளையாடியதால், வாந்தி என்ற உணர்வையே மறந்திருந்தாள்.
அப்போது பாட்டி, 'கர்ப்ப காலத்தில், வாந்தி வருவது இயற்கை. அது படிப்படியாக குறையும். இந்த உணர்வு வராமலிருக்க, அக்கால கர்ப்பிணி பெண்களின் கவனத்தை திசை திருப்ப, எளிய விளையாட்டுகளை விளையாட செய்வோம்...
'அதில் ஒன்று தான், பல்லாங்குழி விளையாட்டு. இது, விரல்களுக்கு நல்ல பயிற்சி தருவதுடன், நம் கவனத்தை சிதறாமல் ஒருமுகப்படுத்தும் தன்மை உடையது. இதன் மூலம் கை நடுக்கம் குறையும். இரவில், நன்கு துாக்கம் வரும். பருவம் அடைந்த பெண்களுக்கு, வயிற்று வலி, இடுப்பு வலி தெரியாமலிருக்க, அக்காலத்தில் பல்லாங்குழி விளையாட செய்வர்...' என்றார்.
பழமையான பல்லாங்குழி விளையாட்டுக்கு பின், எத்தனை அர்த்தங்கள் இருக்கிறது என்று வியந்து போனோம்.
தன் தாய் வீட்டு சீதனமான பல்லாங்குழியை, பல ஆண்டுகளாக பாதுகாக்கும் பாட்டியையும், பழமையையும் நாமும் பாராட்டுவோம்!
என். குர்ஷித், நெல்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement