Advertisement

இளஸ் மனஸ்! (25)

சகோதரி மெடோசுக்கு...
நகைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறேன். எனக்கு, இரண்டு பெண்; ஒரு ஆண் குழந்தைகள். ஒரு மகள் பட்டபடிப்பு படிக்கிறாள்; மற்றாரு மகள், பிளஸ் 1 படிக்கிறாள். கடைக்குட்டியாக பிறந்தவன், 9ம் வகுப்பு படிக்கிறான்.
அவனால் மனம் வருந்திதான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். அவன் பள்ளிக்கு சரியாக செல்வதில்லை; கேட்டால், 'படிக்க பிடிக்கவில்லை...' என்கிறான். அடித்து பார்த்தாகி விட்டது; மென்மையாக அறிவுரை சொல்லியாகி விட்டது.
வலியுறுத்தி சொன்னால், வீட்டில் இருக்கும் பொருட்களில் எதையாவது போட்டு உடைக்கிறான்; கத்தி கூச்சலிடுகிறான். மிகவும் நயமாக வற்புறுத்தும் போது, 'நாளை செல்கிறேன்...' என்பான். மறுநாள் காலை எழுந்ததும், 'நான் போகல...' என்பான்.
அக்கம் பக்கத்தவருக்கு என்ன பதில் சொல்வது என்று, மன உளைச்சலில் தவிக்கிறாள் அவன் அம்மா. இந்த பிரச்னையால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அடிப்படையில், கஷ்ட ஜீவனம் தான் நடத்துகிறோம். வேலைக்குச் சென்றால் தான் அன்றாட வாழ்க்கை ஓடும்.
இந்த நிலையில், 'இவனை பார்ப்பதா; வேலையை பார்ப்பதா' என, புரியாமல் தவிக்கிறேன். மகன் எதிர்காலம் கவலை தருகிறது. அதிகம் படிக்கா விட்டாலும், வாழ்வதற்கு தேவையான அறிவு வேண்டுமே...
அவன் பிறந்தவுடன் அழவில்லை; நான்கு வயது வரை பேச்சும் வரவில்லை; அவனை பரிசோதித்த, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர், 'வளர்ச்சி குறைவாக உள்ளது; அவனுக்கு, ஐந்து வயது என்றால், மூன்று வயதுக்குள்ள பக்குவம் தான் இருக்கும்... வளர வளர சரியாகி விடுவான்...' என்றார்.
மருத்துவரின் எச்சரிக்கையால், அவனிடம் கடுமையாக நடக்கவும் பயமாக உள்ளது. படிப்பை தவிர, எல்லா வேலையையும் ஆர்வமாக செய்கிறான்; துருதுருவென இருக்கிறான். அவனை ஒழுங்கு படுத்த உரிய அறிவுரை சொல்லுங்கள்.

மனம் கலங்கி நிற்கும் சகோதரரே...
இது போன்ற பிரச்னை பலருக்கும் உள்ளது. பெரிதாக கவலைப்படாமல் எளிதாக அணுகி இந்த பிரச்னையை தீர்க்கலாம் என, முதலில் நம்புங்கள்.
ஒவ்வொரு தந்தைக்கும், மகன் நன்கு படித்து, உயர்ந்த பொறுப்புகளில் அமர வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பு தான். அது நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அடிப்படையில் தான் உங்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் மகன், பிறந்த உடன் அழாமலும், பல ஆண்டுகள் வாய் பேச இயலாமலும், கஷ்டப்பட்டிருக்கலாம். அந்த பிரச்னைகளை எல்லாம் கடந்து, 9ம் வகுப்பில் படிப்பதே, ஒரு பெரிய சாதனை என்று சொல்வேன்.
வயதுக்கு தக்க வளர்ச்சி இல்லை என்றாலும், அதை குறையாக கருத வேண்டாம்.
உங்கள் கடிதத்தின் அடிப்படையில் பார்த்தால், உங்கள் மகன், படிப்பை தவிர, பிற வேலைகளை கவனமாக செய்வதால், எந்த குறையும் இல்லை என்று தான் தோன்றுகிறது.
இந்த காலத்தில், கல்வியறிவு மிக அவசியம் என்பதால், பக்குவமாக பேசித்தான், பள்ளிக் கல்வியை ஒழுங்கு படுத்த வேண்டும்.
அதையும் மீறி, கல்வியில் நாட்டமில்லை என்றால் பதட்டப்பட வேண்டாம். அவனுக்கு ஆர்வம் உள்ள துறையைக் கண்டறிந்து, அது சார்ந்து பயில ஊக்குவிக்க வேண்டும்.
எது எப்படி எனினும், பள்ளிக்கல்வியில் இறுதி வகுப்பை வெற்றிகரமாக முடிக்க, தேவையான முயற்சிகளை எடுப்பது அவசியம்; மிகுந்த பொறுமை, சகிப்புத் தன்மையுடன் இதை கையாள வேண்டும்.
மகன் போக்கிலேயே சென்று, வழிப்படுத்த வேண்டும்.
ஊரார் ஆயிரம் பேசுவர்; அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். பிற்காலத்தில், உங்கள் மகன், அவனுக்கு பிடித்த துறையில் பிரபலமாகும் போது, அதே ஊர், வாயாரப் புகழும்.
இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், கணித மேதை ஜான் நேஷ், இசைக் கலைஞர் ஆண்டிரியா போசெல்லி போன்று, உலக அளவில் பிரபலமான பலர், மனம் மற்றும் உடலியல் குறைபாடுகளுடன் பிறந்து, அவற்றை கடந்து, சாதனை படைத்துள்ளனர். இதை வரலாறு நெடுகிலும் காணலாம்.
உங்கள் மகனிடமும், ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கும்; அதை கண்டுபிடித்து, சரியான பாதைக்கு திருப்பி வழிகாட்டினால், முன்னேறி, சாதனையாளன் என்ற பெயரை பெறுவான். அதுவரை, மிகுந்த பொறுமையுடன் அணுகுங்கள். அவனை அடிக்கவோ, திட்டவோ வேண்டாம்.
பள்ளி செல்லாமல் சுணங்கி கிடப்பது சரியல்ல என்பதை, நயமாக உதாரணங்களுடன் எடுத்துக் கூறுங்கள். கரைக்க கரைக்க கல்லும் தேயும். வீண் சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர். நம்புங்கள் நல்லதே நடக்கும்.
அன்புடன், மெடோஸ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement