Advertisement

குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!

வழக்கத்தை விட, அரை மணி நேரம் தாமதமாய் வந்த, சரசு, ''கேட்டீங்களாம்மா இந்த கூத்தை,'' என, 'சஸ்பென்ஸ்' உடன் ஆரம்பித்தாள்.
'ஏன் தாமதம்...' என, கேட்க முடியாத அளவுக்கு, என் கோபத்தை மடை மாற்றும் ரகசியத்தை எப்படிதான் கண்டுபிடித்தாள் என்று புரியவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக தான், வீட்டு வேலைக்கான ஆள் பிரச்னை இல்லாமல் இருக்கிறது. நகரத்தில் வீடு கிடைத்தாலும், நல்ல வேலைக்காரி அமைய, தவம் செய்திருக்க வேண்டும். இந்த சரசும் அப்படி தான் கிடைத்திருக்கிறாள். 'சளசள'வென பேசினாலும், வெள்ளந்தியானவள்.
குடிகார கணவன், இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
காலையில், வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு போவதற்கும், சரசு வருவதற்கும் சரியாக இருக்கும். என்ன தான் உலக செய்திகள் உள்ளங்கைக்குள் வந்தாலும், ஊரின் செய்திகளுக்கு, சரசு போன்றோரை தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.
''என்னாச்சு, சரசு... வரும்போதே பெரிய செய்தியோட வர போல!''
''ஆமாம்மா... ஊரு, ஒலகத்துல இப்படி எப்பவும் கேட்டதே இல்லை. மூணாவது தெருவுல இருக்கற, ஜானகியம்மா வூட்ல தான் இந்த கூத்து,'' என்றாள்.
''யாரு... அய்யப்பன் கோவிலுக்கு கூட்டிட்டு போவாரே, குருசாமி. அவர் வீட்லயா!''
''ஆமாம்மா... அந்த குருசாமி வூட்ல தான். அபூர்வமா, சீமையில இல்லாத, மருமகளை தேடி கட்டிட்டு வந்த பவுசுல, அந்த அம்மாவை கையில புடிக்க முடியாமல்ல இருந்துச்சு... இப்ப, ஊரே சீ சீன்னு கெடக்கு!''
''ரொம்ப, 'சஸ்பென்ஸ்' வைக்காதே, சரசு... சீக்கிரம் சொல்லிட்டு, வேலையை பாரு!''
''அந்த வூட்டு அய்யா, எப்பவும் போல, இந்த வருஷமும் மாலை போட போயிருக்கார்... மருமககாரி, 'எனக்கும் மாலை போடுங்க'ன்னு, போய் நின்னுருக்கா... அந்த அய்யாவுக்கு மயக்கமே வந்துருச்சாம்!''
''ஆத்தி, இது என்னடி அதிசயமா இருக்கு!''
என்னை வாயை மூடாதவாறு செய்து, வேலை பார்ப்பது போல் உள்ளே நுழைந்தவளை இழுத்து வைத்து, பேச ஆரம்பித்தேன்.
''அதெப்படி, காலம் காலமா, ஆம்பளைகதானே, 48 நாளும் விரதமிருந்து போவாங்க... வீடு, வாசலெல்லாம் சுத்தமா இருக்கணும்ன்னு சொல்வாங்களே!''
''ஆமாம்மா... ஆனா, இப்ப ஏதோ சட்டம் வந்திருக்காமே... பொம்பளையாளுக எல்லா வயசுலயும் போகலாம்ன்னு!''
''சரி தான்... வீட்ல, அவரு கூட சொல்லிட்டிருந்தாரு... 'டிவி'ல எல்லாம் பேசிட்டு இருந்தாங்க... அதுக்காக!''
''அந்த பொண்ணு, படிச்ச புள்ளையாம்... சட்டமே சொல்லியாச்சு; போயே ஆவேன்னு சொல்லுதாம்... என்ன செய்யிறதுன்னு பேசிட்டு இருக்காங்கம்மா!
''ஏம்மா... ஆம்பளைக மட்டும் தான் போகணுமா... பொண்ணுக போனா, சாமி கொல்லவா போகுது...
''அதென்ன ஆம்பிளைக்கும், பொம்பளைக்கும் தனித்தனியா சாமி... காலம் எவ்வளவோ மாறி போச்சேம்மா... போடுற உடுப்பு துணி கூட ஒண்ணு போல வந்துடுச்சு... படிக்கிற எடத்திலிருந்து, பாக்குற வேலை வரைக்கும், ஆண் - பெண்ணுன்னு பேதம் இல்லாதப்போ, சாமிக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனைன்னேன்,'' என்றாள்.
''அடி, சரசு... ஏன் இப்படி வெடிக்கிற... நீ சொல்றதெல்லாம் சரி தான்... கோவிலுக்கு போறதுக்கு கூடவா சட்டம் போட்டாகணும்ன்னு, எனக்கும் வேகம் வருது... ஆனா,'' என்றேன்.
''ஆனா, என்னம்மா... அப்ப, ஒங்களுக்கும் சரியா படுதா?''
''நா ஒண்ணு கேக்குறேன், சொல்றியா?''
''யம்மா, நீங்க போய் எங்கிட்ட... தெரிஞ்சா சொல்றேன்மா!''
''ரொம்ப பயப்படாதடி... சுளுவா தான் கேக்குறேன், நம் நாட்டுல, சாமி முன்னாடி வந்துச்சா, சட்டம் முன்னாடி வந்துச்சா?''
''அதெப்படிம்மா... சாமி தானே ஒலகத்தை படைச்சுச்சு. மனுஷங்கதானே, சட்டங் கிட்டமெல்லாம் கொண்டு வந்தாங்க!''
''அவ்வளவு தாண்டி... சட்டமெல்லாம் நமக்கு நாமே போட்டுகிட்டதுடி... ஆனா, சாமிங்கிறது எல்லாத்துக்கும் மேலடி! இன்னிக்கு, வெளிநாட்டுக்காரன், நம் ஊரை பார்த்து மயங்குறான்னா... அவங்கிட்ட இல்லாத என்னடி இங்க இருக்கு... ஆனாலும், நம் ஊர்ல இருக்கற குடும்பம், கோவில், பாசம் ஆகியவற்றுக்கு தான் சொக்குறான்.''
''ஏம்மா... அங்கயும் குடும்பமா இருக்கதானே செய்யிறாங்க... நம்ம தம்பி கூட சொல்லுச்சே!''
''சரிதாண்டி... ஆனா, அதெல்லாம் அங்க ரொம்ப குறைச்சலாதான் இருக்கு; இங்க இன்னும் விட்டுப் போகாம இருக்குடி. முழிக்காத... இங்க இன்னமும் இப்படி இருக்குன்னா, அதுக்கு மொத காரணம், நம் கோவிலுக தான். நம் சாமிக, பூமியில வந்து மனுஷனோட வாழ்ந்து, நமக்கு நல்லத சொல்லிட்டு போனவங்கடி...
''எல்லாத்துலயும் தப்பு இருக்கான்னு அடுத்தவன் ஆராய்ச்சி செய்யிறப்ப... செய்யிற எல்லாத்துலயும், நல்லது மட்டும் வச்சது இங்க தான், சரசு. கோவில்ன்னா இப்படிதான் இருக்கணும்... சாமி இந்த பக்கம் பார்த்து தான் இருக்கணும்ன்னு எப்பவோ எழுதி வச்சுட்டு போயிட்டான்!''
''அதுக்காக, மாறாமயே இருக்கணுமான்னேன்... எல்லாரும் கோவிலுக்குள்ள போகாம தான் இருந்தாங்க... இப்ப போறாங்களே, சாமி ஒண்ணும் செய்யாமதானே இருக்கு,'' என்றாள், சரசு.
''சரசு... அது, தீண்டாமை... இது, சம்பிரதாயம்... எல்லா விதிகளுக்கும், விலக்கு இருக்குடி.''
''இப்ப என்னதான் சொல்ல வர்றீங்கம்மா.''
''இருடி வாரேன்... வாசல்ல போடுற கோலத்துலருந்து, சாணம் தெளிக்கிறது, வேப்ப இலை கட்டி தொங்க விடுறது வரை, தாத்தனும், பூட்டனும் சொல்லி வச்சதுல, இப்ப நமக்கு தெரியுற அறிவியலும், ஆரோக்கியமும் மாதிரி...
''சில இடங்களுக்கு நாம போக கூடாதுன்னு வச்சதுக்கும், காரணம் இல்லாம இருக்காதுடி... படிச்சவங்களும், அறிவாளிகளும் அததான் முதல்ல கண்டுபிடிக்கணும். அதை விட்டுட்டு, சட்டமெல்லாம் நம் வசதிக்கு போட்டுகிட்டதுடி.''
''ஏம்மா, இப்ப ஜானகியம்மா மருமக, அய்யப்பன் கோவிலுக்கு போகலாம்கறீங்களா, வேணாங்கறீங்களா?''
''தாராளமா போகலாம்... எந்த வயசுல வரணும்ன்னு சொல்லியிருக்கோ, அப்ப தாராளமா போகலாம். வேலை செஞ்சா தான் சோறுன்னு இருக்கறவங்களும், பொழுது போகணும்ன்னு வேலைக்கு போறவுங்களும் இருக்காங்க இல்லையா... ஒருத்திக்கு அது சோறு, இன்னொருவருக்கு பொழுதுபோக்கு...
''பக்தியும் அப்படிதாண்டி. மனசார உருகி சாமி கும்பிடுவதும், அடுத்தவங்க கும்பிடுறாங்களேன்னு கும்பிடுறதும்... இங்க, இன்னும் எத்தனையோ சட்டமெல்லாம் எழுதுனதோட கிடக்கு. நம் நாட்டுல இல்லாத சட்டம் வேற எங்கயும் இல்லடி. போய் வேலையை பாரு!''
துாரத்து பள்ளி வாசலிலிருந்து, மோதினார், பாங்கோசை ஆரம்பிக்கிறார். தலையில் தொப்பியுடன் நடக்க ஆரம்பிக்கின்றனர், இஸ்லாமிய சகோதரர்கள். எதிர் வீட்டு காதர் கிளம்பியதும், சாக்கு படுதாவிலான வாசல் மறைப்பை இறக்கி விட்ட பாத்திமா, வீட்டுக்குள் தொழ போனாள்.
'காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம் எதுவும் மாறாமல் தானே இருக்கிறது... அப்புறம் என்ன...' என்று நினைத்தபடியே, சமையல் பாத்திரங்களை அள்ளி, கிணற்றடிக்கு நகர்ந்தாள், சரசு.

அழகர்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement