Advertisement

இளஸ்... மனஸ்... (24)

Share

அன்பு மிக்க மெடோஸ் ஆன்டிக்கு...
தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வரும் மாணவி நான். என் பிரச்னையே நான் தான். பார்க்க ரொம்ப அசிங்கமாக இருப்பேன். 10ம் வகுப்பு படித்த போது, வகுப்புத் தோழனை, ஒரு தலையாக காதலித்தேன். அவன் பார்க்க அழகாக இருப்பான். என் எண்ணத்தை கூறியபோது, முகத்தில் அறைந்த மாதிரி, 'முடியாது' என, கூறி விட்டான்.
அது மட்டும் அல்லாமல், எல்லாரிடமும் இதை, 'ஜோக்' மாதிரி கூறியுள்ளான். காதலை சொன்னதிலிருந்து, என்னை பார்த்து முறைக்கிறான்.
அவனை மறக்க முடியவில்லை; காதலை நினைத்து வருந்துகிறேன். சரியாக படிக்கவும் முடியவில்லை. அவன் வேறு ஒரு மாணவிக்கு, காதல் துாது அனுப்பினான். அவளும், சம்மதித்து விட்டாள்; இருவரும் காதலிக்கின்றனர். இதை, என்னால் தாங்க முடியவில்லை.
என் வகுப்பு மாணவியர், 'இவளுக்கு அறிவில்லையா... இவ போய், அவனிடம் காதலை சொல்லலாமா... இவ மூஞ்சிக்கு இது எல்லாம் தேவையா...' என, என் காதுபடவே கூறுகின்றனர். என்னுடன் சரிவர பேசுவதும் இல்லை.
பள்ளியில் முதலிடம் பெற்றுள்ள அவன், மருத்துவராகும் கனவுடன், படித்து வருகிறான். அவனை நினைத்து வாடிக் கொண்டிருக்கிறேன். மிகவும் குழப்பமாக உள்ளது; நல்ல வழி கூறுங்க ஆன்டி.

அத்தையின் அறிவுரைக்காக காத்திருக்கும் மருமகளுக்கு...
செல்லமே... நீ, 16 வயது நிரம்பிய சிறுமி; உன் மூளையும், உடல் உறுப்புகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. முழுமையாக வளர்ச்சி அடையும் வரை, ஹார்மோன்கள் கலகம் செய்யும்.
கன்றுக்குட்டி... உனக்கு வந்திருப்பது காதல் அல்ல; வெறும் இனக்கவர்ச்சியே. பள்ளிக்கூடம், காதலிப்பதற்கான இடமல்ல; கல்வியில் முறையாக பயிற்சி பெற்று, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான இடம். தமிழ் சினிமாக்களையும், 'டிவி' தொடர்களையும் பார்த்து, சிறுமியர் மனம் சீர்க்கெட்டு போவது போல், நீயும் தத்தளிக்கிறாய்.
ஒரு ஆண் அல்லது பெண்ணின் தனித்துவமிக்க ஆளுமை, முக அழகில் மட்டும் இல்லை; படிப்பு, பதவி, சமூக அந்தஸ்து, நிர்வாகம், சேவை, பழகும் தன்மை போன்றவை தான், பேரழகாக்குகின்றன. தனித்துவத்துடன் கவனிக்க வைக்கின்றன.
நீ, ஒரு தலையாய் காதலித்தவனும், காதலில் ஈடுபடுகிறான். அதேநேரம், படிப்பிலும் முழுக்கவனம் செலுத்துகிறான். அவன் காதலை பொழுதுபோக்காக கடந்து, சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணித்து வருகிறான். நீ தான், படிப்பையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டிருக்கிறாய்.
உரிய காலத்தில் படிக்காவிட்டால், எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். வேலைக்கு செல்கிறாயோ இல்லையோ, குறைந்தபட்சம், ஒரு முதுகலைப் பட்டத்தையாவது முடித்திருப்பது, வாழ்வதற்கு உகந்தது.
சின்னப்பெண்ணே... அத்தை சொல்வதை சற்று கவனமுடன் கேட்பாயா...
* காதலை தலைமுழுகி, படிப்பில் முழுகவனம் செலுத்து. ஒரு தலையாக காதலித்தவனை, முன்பின் அறிமுகமில்லாத அந்நியனை பார்ப்பது போல, கடந்து செல்; உன் தோழியரின் கேலிகளை அலட்சிப்படுத்து
* தலைகேசத்தை நன்கு பராமரி; தினமும் முகத்திற்கு கடலைமாவு போட்டு சீராக்கு; அழகிய மஞ்சள் தேய்த்து குளி; வாரம் ஒருமுறை, நகங்களை வெட்டி சீர்ப்படுத்து. சுத்தமான உள்ளாடைகளை உடுத்து; வண்ணமயமான ஆடைகளை அணி; பற்களை, நல்ல பல்மருத்துவரிடம் சுத்தம் செய்து வெண்மைப் படுத்து; அளவாக சாப்பிடு; உடல் எடையை கட்டுக்குள் வை
* படிக்கும் நேரம் தவிர, மற்ற நேரத்தை உபயோகமாக செலவழி; வீட்டில் தோட்டம் போடு; விதவிமான கோலங்கள் போட கற்றுக்கொள்; தன்னம்பிக்கை புத்தகங்களை வாசி; தினமும், அகராதியில், புதிய, 10 வார்த்தைகளை படித்து, பொருள் தெரிந்து கொள்
* இழிவான விஷயங்களை, மண்டைக்குள் திணிக்கும் தோழியரை புறக்கணி
* காதல் வயப்படாமல், ஆண்களுடன் நண்பர்களாக பழகும் வித்தையைக் கற்றுக் கொள்
* வாழ்க்கையில், எல்லாம் உரிய காலத்தில் கிடைக்கும்; அதுவரை அவசரப்படாதே.
உன் பிரச்னையை வெளிப்படையாக கூறி, தீர்வு காண விழைந்திருப்பது நல்ல விஷயம்; தவறு செய்தால், ஒத்துக்கொண்டு திருத்த தயங்காதே... அம்மாவிடம், பள்ளியில் நடக்கும் விஷயங்களை பேசி வடிகால் பெறு; பெற்ற தாயே மிகச்சிறந்த மனநல ஆலோசகர் என்பதை மனதில் கொள்.
காதலித்தவனை பழி வாங்க வேண்டும் என்றால், நன்றாக படித்து மிகப்பெரிய பதவியில் அமரு... அது தான் உன் வாழ்வின் லட்சியமாக அமைய வேண்டும். வாழ்த்துகள் மருமகளே.
- அன்புடன், மெடோஸ்.

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement