Advertisement

நங்கையர் திலகம்!

மதுரை, கருப்பாயூரணியில் இருக்கிறது விஜயலட்சுமியின் வீடு. வாசல் இரும்பு கேட் மீது முழங்கைகளை வைத்தபடி நின்றிருந்த அவரது முகம் முழுக்க, நீண்ட நேரமாய் நம்மை எதிர்நோக்கியிருந்த சுவடு! ஆனால், நம்முடன் உரையாடும் போது, அது குறித்து அவர் வெளிப்படையாய் பேசவில்லை.
'கசப்பா இருக்கு' என்பதைக் கூட, இனிப்பாக சிரித்துக் கொண்டே சொல்லும் பக்குவம் விஜயலட்சுமிக்கு!

உங்களோட பொழுதுபோக்குகள் என்னென்ன?
'பொழுதுபோக்கு' - ஆறெழுத்து. வார்த்தையும் நீளம், அதோட அர்த்தமும் நீளம். என்னை மாதிரி, 60 வயதை தொட்டுட்ட ஆட்களுக்கு, ஒருநாள் பொழுதை கழிக்கிறது எவ்வளவு பெரிய காரியம் தெரியுமா!

நீங்க என்ன செய்றீங்க?
குப்பைக்கு போற ஐஸ்கிரீம் டப்பாவுல இருந்து, புது ஆடைகள் கூட வர்ற அட்டை காகிதம் வரை எதையும் விட்டு வைக்க மாட்டேன்.
அதை வைச்சு ஏதாச்சும் பொம்மை செஞ்சிடுவேன். என் பீரோவை திறந்தா துணிமணிகள் இருக்காது;
முழுக்க முழுக்க இதுமாதிரியான பொம்மைகள் தான் இருக்கும்!

வேறென்ன செய்வீங்க?
பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி, ஐஸ்கிரீம் சாப்பிடுற போட்டி, சாக்குப்பை போட்டி எதையும் தவறவிட மாட்டேன். ரேடியோ, பேப்பர்ல போட்டி சம்பந்தமான விளம்பரங்கள் வந்தா இடம், தேதி, நேரம் குறிச்சுட்டு கிளம்பிடுவேன். கும்கி படத்தோட, 'சொய்ங்... சொய்ங்...' பாட்டுக்கு கூட டான்ஸ் ஆடியிருக்கேனாக்கும்! ஐஸ்கிரீம் சாப்பிடுற போட்டியில, காலேஜ் பொண்ணுங்களையே தோற்கடிச்சு முதல் பரிசு ஜெயிச்சிருக்கேன். சாக்குப்பை போட்டி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!

அப்படியா...?
என்ன அப்படியா! ஒரு சம்பவம் சொல்றேன்... கேளுங்க; ஒரு விழாவுல, சொன்ன நேரத்துக்கு முன்னாடியே சாக்குப்பை போட்டியை நடத்தி முடிச்சிட்டாங்க. எனக்கு கோபம் வந்து, திரும்ப போட்டியை நடத்தியே தீரணும்னு ஒத்தக்கால்ல நின்னுட்டேன். என்ன ஒண்ணு... மூச்சை பிடிச்சுட்டு குதிச்சு குதிச்சு போயும், 3வது இடம் தான் கிடைச்சது. ஆனாலும், பரிசு வாங்குறப்போ வானத்துல பறக்குற மாதிரி செம பீலிங்!

நிஜமாவே இதெல்லாம் பொழுதுபோக்குக்காகத் தான் பண்றீங்களா?
ஆமா... பொழுதுன்னு ஒண்ணு இருக்கிறதுனால தானே, மறக்க வேண்டிய நினைவுகள் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்து தொந்தரவு பண்ணுது. அதான்... பொழுதை கரைக்க என்னென்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணிட்டு இருக்குறேன். என் பேத்தி ரக் ஷிதா, இந்த விஷயத்துல எனக்கு ரொம்பவே உதவியா இருக்குறா!

நீங்க திருப்தியா இருக்குறீங்களா?
(சில வினாடிகள் மவுனத்திற்குப் பின்...) சிறு புன்னகை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • LAX - Trichy,இந்தியா

    Superb.. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் Ms.விஜயலக்ஷ்மி..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement