Advertisement

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - பேசினால் தீரும் பிரச்னை!

என் மகன் பிறந்த ஓராண்டிலேயே, அவனுக்கு, காது கேளாமை குறைபாடு இருப்பதை கண்டுபிடித்தோம். பச்சிளங் குழந்தையின் அவயங்கள், ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான மருத்துவ வசதிகள், 50 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் கிடையாது. வேலுாரில் உள்ள, கிறிஸ்டியன் மெடிக்கல் மிஷன் - சி.எம்.சி., மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம்; கோளாறு இருப்பதை உறுதி செய்தனர்.

இது போன்ற குழந்தைகளுக்கென அந்த காலத்தில், சென்னையில் இரண்டு பள்ளிகள் இருந்தன. அந்த இரண்டிலும், 'குழந்தைக்கு ஐந்து வயதான பின் அழைத்து வாருங்கள்... சேர்த்துக் கொள்கிறோம்' என்று கூறினர். இதைக் கேட்டவுடன், அடுத்த நான்கு ஆண்டுகள், குழந்தையை இப்படியே வைத்திருப்பது சரியா, நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என, தீவிரமாக யோசிக்கத் துவங்கினேன்.

என்ன பிரச்னையாக இருந்தாலும், விரல் நுனியில் தகவல் கிடைக்கும் தற்போதைய இணையதள யுகம் இல்லை அது. புத்தகங்கள் வழியாக மட்டுமே, தகவல் பெற முடியும். கன்னிமாரா, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் லைப்ரரி மூன்றிலும் உறுப்பினராக சேர்ந்து, பிறவியிலேயே, செவித் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பது, பயிற்சி தருவது எப்படி என்ற தகவல்களை தேடத் துவங்கினேன். நான் படித்த வரையில், இது போன்ற குழந்தைகளிடம் விடாமல் தொடர்ந்து பேச வேண்டும் என்பது தான் அடிப்படை ஆலோசனையாக இருந்தது.

நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததால், வீட்டில் உள்ளவர்கள் மாறி மாறி, என் மகனிடம் பேசுவோம். மெதுவாக அவன் பேச ஆரம்பித்ததை கேட்டவுடன், எனக்கு இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து வயதான போது, பொது பள்ளியிலேயே சேர்க்க முடிகிற அளவிற்கு, அவனால் பேச முடிந்ததோடு மட்டும் அல்லாமல், படங்களைப் பார்த்து நிறங்கள், வார்த்தைகளையும் கற்றுக் கொண்டான்.

பிறவி காது கேளாமை உள்ள குழந்தையிடம் தொடர்ந்து பேசி, சுற்றி இருக்கும் விஷயங்களை கற்றுக் கொடுத்தால், அவர்களால், ஐந்து வயதில் பள்ளி செல்லும் ஆரோக்கியமான எந்த குழந்தையையும் போல, அவர்களை விடவும், அதிகமாக கற்றுக் கொள்ள முடியும் என்று தெரிந்ததும், இது போன்ற குழந்தைகளுக்காக, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என, தோன்றியது.

காது கேட்கும் கருவியை விற்பனை செய்யும் நிறுவனத்தினர், ஒரு குழந்தையை என்னிடம் அனுப்பினர். என் வீட்டிலேயே அந்தக் குழந்தைக்கு கற்றுத் தர ஆரம்பித்தேன்.

நெல்லை அருகே உள்ள கிராமத்தில் இருந்து, இன்னொரு குழந்தை வந்தது. ஏற்கனவே உள்ள குழந்தையின் தாய்மொழி ஆங்கிலம்; இந்த குழந்தைக்கு தமிழ். இரண்டு குழந்தைகளுக்கும் பயிற்சி தந்தேன். இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்தில் வசிக்கும் என் தோழி, நிறைய ஆலோசனைகளை வழங்கினார். 'நாம் ஏன் ஒரு பள்ளியை துவக்க கூடாது...' என்று கேட்டார். அப்படித்தான், அடையாறு சாஸ்திரி நகர் முதல் குறுக்குத் தெருவில், தானமாக கிடைத்த நிலத்தில் இப்பள்ளியை ஆரம்பித்தேன்.

இலவசமாக இப்பள்ளியை நடத்த வேண்டும் என, முதலிலேயே முடிவு செய்து விட்டோம். காது கேட்கும் கருவியை வாங்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து, நிதி திரட்டி நடத்தத் துவங்கினோம். நிறைய தன்னார்வலர்கள் உதவி செய்தனர். இந்த குழந்தைகளுக்கான பாடத் திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி எல்லாவற்றையும் என, நாங்களே பிரத்யேகமாக தயாரித்தோம்.

பள்ளிக்கு அங்கீகாரம் பெற, அரசை அணுகிய போது, 'ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பள்ளிக்கே, அங்கீகாரம் தர முடியும்; அப்படித்தான் விதி இருக்கிறது' என்று கல்வித் துறையில் கூறினர். சுகாதாரத் துறையை அணுகிய போது, 'எங்களுக்கு சம்பந்தமில்லை. இது, கல்வித் துறையின் கீழ் வருகிறது' என்றனர். சமூக நலத் துறையிடம் சென்றால், 'இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் இதுவரை செய்ததே இல்லை' என்று கை விரித்து விட்டனர்.

விடாமல் போராடி, 1969ல் துவக்கிய பள்ளிக்கு, 1981ல், 12 ஆண்டுகள் கழித்து அங்கீகாரம் பெற்றோம்; மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கிறது.

சிறப்பு ஆசிரியர் பயிற்சி, பாடத் திட்டங்களின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்த போது, பல நடைமுறை சிக்கல்களைத் தாண்டி, 20 ஆண்டுகள் கழித்து, 2001ல் கிடைத்தது.

இன்று, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருக்கும் இது போன்ற பள்ளிகளில், பணி செய்ய விரும்பும் ஆசிரியர்கள், எங்களிடம் பயிற்சி பெறுகின்றனர்.

சரஸ்வதி நாராயணசாமி,
கவுரவ இயக்குனர்,
பால வித்யாலயா காது கேளாதோர் பள்ளி,
சென்னை.
044 - 2491 7199, 98404 42628

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement