Advertisement

மனசே, மனசே குழப்பம் என்ன! - சென்னைக்கு வரவழைத்த இளஞ் சிவப்பு ஆகாயம்!

Share

இரண்டரை வயதில், திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்த குழந்தை, 30 ஆண்டுகள் கழித்து, இளம் பெண்ணாக, தனக்கு மறு வாழ்வு அளத்த, இதய அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே.எம்.செரியனை சந்தித்த நெகிழ்ச்சியான தருணங்களை, 'தினமலர் நாளிதழுடன்' பகிர்ந்து கொள்கிறார்.
என் அம்மா பிறந்தது, குஜராத்தில் உள்ள போர்பந்தரில். திருமணமாகி, அகமதாபாத்தில் வசித்து வந்தார். இந்திய குடும்ப வழக்கப்படி, தன் தாய் வீட்டில் என்னை பிரசவித்தார்.
ஐந்து மாத சிசுவான நான், அழும் சமயங்களில், என் உடல், கருமை கலந்த, நீல நிறமாக மாறுவதை கவனித்த அம்மாவின் அப்பா, 'டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது' என்று சொல்ல, பிறவியிலேயே இதயத்தில் துளை இருப்பதும், அதனால் சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் கலப்பதால், 'புளு பேபி' எனப்படும், நீல நிறமாக மாறும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னையில், டாக்டர் செரியனிடம் செல்லலாம் என, முடிவு செய்தனர்.
பல தலைமுறைகளாக, கல்வி அறிவு பெற்ற குடும்பத்தில், மருத்துவ தொழில்நுட்பத்தில் தாத்தாவிற்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், அதற்கேற்ற திறமையான டாக்டர் யார், தொழில்நுட்பம் எங்கிருக்கிறது என, சரியாக வழி காட்டுவார் தாத்தா.
இங்கு வந்து அறுவை சிகிச்சை செய்து, 'இனி குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் வராது; எல்லா குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்வாள்' என, டாக்டர் உறுதி அளித்ததுடன், 'சென்னைக்கு வர வேண்டாம்; அகமதாபாத்திலேயே மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளலாம்' என்றும் கூறினார்.
என் உடல் நிலை பற்றி எந்த விபரமும், 12 வயது வரை எனக்குத் தெரியாது. எல்லா குழந்தைகளையும் போலவே, பள்ளிக்கு சென்றேன்; சாப்பிட்டேன்; விளையாடினேன்; காய்ச்சல், சளி போன்ற எல்லாருக்கும் வரும் பிரச்னைகள் தவிர, வேறு பெரிய கோளாறுகள் வந்ததில்லை.
என் வயதையொத்த பெண் குழந்தைகளுடன் விளையாடும் போது, தற்செயலாக கவனித்ததில், நெஞ்சு பகுதியில், கோடு கிழித்தது போன்று நீளமான தழும்பு எனக்கு இருந்தது; என் தோழிகள் யாருக்கும் இல்லை.
'எனக்கு மட்டும் ஏன் இது இருக்கிறது' என்று அம்மாவிடம் கேட்டதற்கு, விபரமாக சொன்னார். அதன் பிறகும், பிறவி இதய கோளாறு எனக்கு இருந்தது என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. கல்லுாரிப் படிப்பை முடித்து, தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
கல்லுாரிக்கும் சரி, அலுவலகத்திற்கும் சரி, சைக்கிளில் போவேன். தினமும், காலையில் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி, யோகா, சமையலில் அம்மாவுக்கு உதவி செய்வது, கார் ஓட்டுவது என, தினசரி வேலைகளை தவறாமல் செய்கிறேன்.
பிடித்ததை சாப்பிடுவேன். இரண்டு தளங்கள் வரை, படிக்கட்டுகளையே பயன்படுத்துகிறேன். தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்து அனுபவம் பெற்ற பின், அப்பாவுடன் சேர்ந்து, குடும்பத் தொழில் செய்கிறேன்.
திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர், வரன்கள் பார்க்கின்றனர்; எனக்கு இருந்த கோளாறை தெளிவாக சொல்லியே, வரன் பார்க்கின்றனர்.
சமீபத்தில் வெளியான, 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற சினிமாவை பார்த்த என் அப்பாவிற்கு, அதில் வரும் அம்மா, தன் மகளை வாழ வைக்க படும் சிரமங்களை பார்த்ததும், என்னை ஆரோக்கியமாக வாழ வைக்க பட்ட சிரமங்கள் நினைவிற்கு வந்திருக்கிறது. 'உனக்கு மறு வாழ்வு அளித்த டாக்டரை பார்த்து, 30 ஆண்டுகள் ஆகி விட்டது; நன்றி சொல்லி வரலாம்' என, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் காத்திருந்த போது, காபி குடிக்க வந்த, டாக்டர் செரியனை பார்த்து, அறிமுகம் செய்து கொண்டேன்.
இரண்டு வயதில் பார்த்த குழந்தை, 32 வயது இளம் பெண்ணாக, தன் முன் நிற்பதைப் பார்த்து, 'அடையாளமே தெரியாமல் வளர்ந்திட்டியே' என்று சந்தோஷமாக சொன்னார். என் கையில் பூசியிருந்த, நீல நிற நெயில் பாலிஷ், என் பிறவி கோளாறின் அடையாளமா என்று கேட்டார்.
என்னை போல பிறந்த குழந்தைகள், முறையான மருத்துவ சிகிச்சைக்கு பின், ஆரோக்கியமாக பிறந்த, மற்ற குழந்தைகளைப் போலவே வாழலாம்; திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெறலாம்.
காய்ச்சல், சளி போன்ற பொதுவான பிரச்னைகள் வந்தால், மற்றவர்களைக் காட்டிலும், எனக்கு கூடுதல் கவனிப்பு கிடைக்கிறது. பிறவிக் கோளாறு இருந்தால் தான், இவ்வளவு அக்கறையாக கவனித்துக் கொள்கின்றனர் என்றெல்லாம், நான் நினைப்பது இல்லை.

இஷிதா தாவல், சுய தொழில் முனைவோர், அகமதாபாத்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement