Advertisement

தம்பி!

Share

டவுசரை துாக்கிப் பிடித்து, வேகமாக மைதானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான், வேலு. வலது கையால், வேலுவின் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டான், அவனது தம்பி, அன்பு. வலது காலை ஊன்றி, வளர்ச்சி குன்றிய இடது காலுக்கு, இடது கையை முட்டுக்கொடுத்து, நொண்டி நொண்டி, வேலுவின் வேகத்துக்கு இணையாக தொடர்ந்து கொண்டிருந்தான்.
சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், நாள் முழுவதும் மைதானத்தில் தான். முந்தைய நாள் மாலை, விளையாட்டு முடிவில், தம்பியை, மைதானத்தில் விட்டு விட்டு, சினேகிதர்களோடு வீட்டுக்கு போனதால், அம்மாவிடம் வாங்கிய அடி, இன்னும் முதுகில் உரைத்தது, வேலுவுக்கு. அதனால், வேண்டுமென்றே வேகமாக நடந்தான்; விடாமல் தொடர்ந்தான், அன்பு.
ஒரு காலத்தில், தம்பி மீது அளவு கடந்த பாசத்துடன் தான் இருந்தான். ஆனால், அவன் வயது நண்பர்கள், எந்தத் தடையும் இன்றி விளையாடச் செல்லும்போது, அன்புவைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை, விலங்கு மாட்டியது போல் இருந்தது, வேலுவிற்கு.
முன்பெல்லாம், அன்புவை யாரேனும் கேலி செய்தால், அவர்கள் மீது பொங்கி எழுவான். ஆனால், இப்போது, அந்த கேலிக்கு ஆட்பட நேர்ந்ததை எண்ணி, அன்பு மற்றும் தாயின் மீது, கோபத்தைக் காட்டினான். ஆனால், எவ்வளவு கோபப்பட்டாலும் புன்னகையுடன் தன்னையே சுற்றி வரும், அன்புவை பார்க்க, வேலுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அன்புக்கு, இரண்டு வயது இருக்கும் போது, காய்ச்சலால், அவன் இடது கால் வளர்ச்சி பாதித்தது. அவனுக்கு இப்போது வயது, 5. தன்னால் முடிந்த வரை, வைத்தியரிடம் போய் ஏதாவது எண்ணெய் வாங்கி தேய்த்துக் கொண்டே இருக்கிறாள், அம்மா. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. துக்கம், கோபம், வலி, கொண்டாட்டம் என, எதற்கும் அவனது பிரதிபலிப்பு, மாறாத புன்னகை மட்டுமே.
அது ஒரு உன்னதமான நிலை; மனிதப் பிறவியில் பெரிய ஞானிகள் மட்டுமே எட்டிய நிலை; இப்படி இருக்க முடியுமா என, பலர் ஏங்கும் நிலை. ஒருவேளை, கால் ஊனம், அவனுக்கு இந்த ஞானத்தை கொடுத்திருக்கலாம். ஏதாவது இழந்திருந்தால் அல்லது விட்டுக் கொடுத்தால் தானே ஞானம் வரும்.
ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான், அன்பு; மற்றபடி, யார் என்ன சொன்னாலும் புரியும். அவனால் முடிந்த வேலைகளை செய்வான் அல்லது செய்ய முற்படுவான்.
ஓரக்கண்ணால் அன்புவின் முகத்தை திரும்பிப் பார்த்தான், வேலு. எந்த சலனமும் இல்லாமல் புன்னகையுடனே தன் குதித்த நடைக்கு ஏற்ப, மேலேயும், கீழேயும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான், அன்பு. வேலுவின் கோபம் சற்று தணிந்தது.
மைதானத்துக்கு அருகே, வசதி படைத்தவர்கள் வாழும் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து நிறைய பேர், அன்று, பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். இன்று, எப்படியாவது, 'டீலில்' தோற்கும் பட்டத்தில் ஒன்றை பிடித்து விட வேண்டும் என்று, இரண்டு நாட்களுக்கு முன், முடிவு செய்திருந்தான், வேலு.
இந்த ஆட்டத்தில் பெரிய கில்லாடி, அவன். பட்டங்களை காசுக்கு விற்க முடியும் என்பது, அவனுக்கு இன்னும் ஒரு ஊக்கமாக இருந்தது. கண்ணைச் சுருக்கி, வானத்தை அளவிட்டான்.
எந்தெந்த பட்டங்கள் அறுந்து போகப் போகிறது, அதில் எது தகுதியானது, எந்த சந்தில் போனால் பட்டத்தைப் பிடிக்க முடியும் என்பதை, சில நிமிடங்களில் அனுமானித்தான். அவன் குறி வைத்திருந்த பட்டம், எதிர்பார்த்த நேரத்திற்கு முன் அறுபட்டு, நினைத்த திசையை நோக்கி பறந்து வந்தது.
வேலுவைப் போலவே, பட்டம் எடுக்க வந்திருந்த சில பொடியன்களும், மைதானத்திலிருந்து, 'ஓ'வென கத்தியபடி, ஓடி வந்து கொண்டிருந்தனர். தன் சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பது தெரியாமல், வேலு ஓட்டமெடுத்த போது, தடுமாறி, குப்புற விழுந்தான், அன்பு.
வேலுவும் தடுமாறி நின்று, அன்புவைப் பார்த்து, 'சனியனே... எப்ப பாரு, என் பின்னாடியே தொங்கிட்டு இருப்பியா... எங்கயாவது போய் தொலைய வேண்டியது தானே...' என, சீறினான்.
பின், கோபமாக பட்டம் செல்லும் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தான். திரும்பிப் பார்த்தபோது, மற்ற பொடியன்கள் அருகில் வந்து கொண்டிருந்தனர். பட்டம் எந்த திசையில் போகிறது என்று மேலே பார்த்துக் கொண்டே, தன் வேகத்தை அதிகப்படுத்தினான், வேலு.
அவன் எதிர்பார்த்ததை விட, ரொம்ப துாரம் ஓடி வந்தாகி விட்டது. இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்து கொண்டிருந்தது, பட்டம். தன் கணிப்பு சற்று பிசகியதும், கீழே விழுந்த அன்புவை, அப்படியே விட்டு வந்தது நெருடலாக இருந்தது.
அதனால், வேலுவால், தெளிவாக சிந்திக்க முடியவில்லை. அவனது ஓட்டம், சற்று குறைந்தது. பின்னால் வந்த பொடியன்கள் அவனை நெருங்கி, கடந்தும் போயினர். மேலே பார்த்த போது, பட்டம் சற்று உயர்ந்து, வேறு திசையில் போய்க் கொண்டிருந்தது.
நின்று, மூச்சு வாங்கினான், வேலு. சில பொடியன்கள், அவனை கேலி செய்தபடியே கடந்து போயினர்.
வேலுவின் ஏமாற்றம் கோபமாகியது. ஓங்கி தரையை உதைத்து, 'எல்லாம் அந்த நொண்டி நாயால...' என, முணுமுணுத்தபடியே, திரும்பி நடந்தான்.
'எப்பப் பாரு, என் சட்டையை பிடிச்சிட்டே... தரித்திரம்... சனியன்...' என்று ஏசியபடியே வந்தான். தன் இயலாமயை, தனக்கு ஏற்படும் தோல்விகளை, அடுத்தவர் மீது காரணம் காட்டி பழி போடுவது, மனித இயல்பு தானே!
சுட்டெரிக்கும் வெயிலில், உள்ளே உஷ்ணத்துடன், அன்பு விழுந்த அந்த தெரு முனையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான், வேலு. பட்டத்தை எடுக்கச் சென்ற பொடியன்கள், கூச்சலுடன், அவனை நோக்கி வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, அவர்கள், மேலே பார்த்தபடி, வேலுவை கடந்து ஓடிக் கொண்டிருந்தனர்.
தெரு முனையை அடைந்தான், வேலு. அந்த இடத்திலோ, அருகில் இருந்த மரத்தடியிலோ அன்புவை காணவில்லை. மைதானத்தை நோக்கி வேகமாக நடந்தான். துாரத்திலிருந்து மைதானம் முழுவதும் கண்களால் அளந்தான். எங்கும் அகப்படவில்லை, அன்பு.
வேகமாக வீட்டுக்கு ஓடி, அம்மாவுக்குத் தெரியாமல் நோட்டமிட்டான்; கண்டிப்பாக இங்கு வந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது, உறுதியானது. மீண்டும் மைதானத்துக்கு ஓடினான். உள்ளுக்குள் சற்றே பதறியது. அவனை அறியாமல் கண்களில் நீர் கோர்த்து, வழிந்தது.
சற்று முன் இருந்த கோபம், அன்பு, எங்காவது தன்னை விட்டுப் போய்த் தொலைய வேண்டும் என்ற நினைப்பு, இப்போது இல்லை. அவனது பயம், அம்மாவால் அல்ல, அன்பு மீது வைத்திருந்த பாசத்தால். தன்னைத் தவிர வேறு எதுவுமே அறியாத, அன்பு, எங்கு சென்றானோ, எப்படி அலைகிறானோ!
மைதானம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சென்று பார்த்தான்; அனைவர் முகத்தையும் உற்று நோக்கி, யாராவது ஏதாவது சொல்வரா என்று எதிர்பார்த்தான். எவரிடமாவது கேட்கலாம். ஆனால், அந்த பதிலில் கேலி பேச்சு தான் வரும் அல்லது தவறான தகவல் தான் வரும்.-
இது, அன்பு மீது, இந்த சமுதாயம் கொண்டிருக்கும் பார்வையின் வெளிப்பாடு. திரைப்படங்களில், கதைகளில் அன்பு போன்றவர்களை கண்டோ, கேட்டோ நிறைய பேர் பரிதாபப்படுவர். ஆனால், நடைமுறையில், அவர்கள் மத்தியில் அன்பு போன்றவர்கள், தனித்தவர்கள், தடைகள், வேண்டாதவர்கள். இவ்வளவு ஏன், உடன்பிறந்த வேலுவே, சற்று முன், இப்படித்தானே நினைத்து, அன்பு மீது ஆத்திரப்பட்டான்.
மிகவும் சோர்வாக, மைதானத்தின் ஓரத்தில் இருந்த கல்லின் மீது அமர்ந்தான். தன் வெறுப்பை புரிந்து தான், தன்னை விட்டுப் போய் விட்டானோ...
எங்கோ, வேறு யார் சட்டையை பிடித்து போவது போலவும், இதுவரை அழுதிராத அவன் கண்கள், அழுதபடியே தேடுவது போலவும், வேலுவின் மனதில் ஓடின. சட்டையை முன்னால் இழுத்து, அன்பு எப்போதும் பிடித்து கசங்கியிருந்த அந்த பகுதியைப் பார்த்தான். அவன் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
கண்களை கசக்கி, நிமிர்ந்து உட்கார்ந்து, மைதானத்தை பார்த்தபோது, தொலைவில், ஒரு பள்ளத்திற்குள்ளிருந்து நொண்டியபடி, கைகளைப் பின்னுக்கு கட்டியபடி, வழக்கமான புன்னகையுடன் வெளிப்பட்டான், அன்பு.
வேலுவின் உடல், புத்துயிர் பெற்றது. துள்ளிக் குதித்து, ஓடிப்போய், அன்புவை கட்டி அணைத்து, முகத்தில் மாறி மாறி முத்தமிட்டான். வேலுவின் செயலால், குழந்தையாய் சிரித்தான், அன்பு.
வேலுவின் கோபம், தவறிய பட்டம் என, அனைத்தும் மறந்திருந்தது. அன்புவை தன் பாசப் பிணைப்பிலிருந்து விடுவித்தபோது, தன் பின்னாலிருந்து கைகளை விடுவித்தான், அன்பு. அவன் கைகளில், வேலு துரத்திச் சென்ற பட்டம் இருந்தது.

உமா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement