Advertisement

தாய்மைக்கு இலக்கணம், 'வசந்தா டீச்சர்'

Share

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, அண்டர்காடு என்கிற குக்கிராமம். இக்கிராமத்தின் சாலையோரத்தில், சிறிய கட்டடத்தில், 'சுந்தரேச விலாஸ்' உதவி பெறும் துவக்கப் பள்ளி செயல்படுகிறது.
சிறிய மைதானம் மற்றும் இரு வகுப்பறைகளுடன் காணப்படும் இப்பள்ளிக்குள் நுழைந்தால், பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 25 மாணவர்கள், 31 மாணவியர் என, மொத்தம், 56 பேர் பயிலும் இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவி, நிஷ்யா, 250 திருக்குறளை, நிமிடங்களில் தெள்ளத் தெளிவாக ஒப்புவிக்கிறார்.
இரண்டாம் வகுப்பு மாணவியர், ஆங்கில வார்த்தைகளை எழுதி அசத்துகின்றனர். நான்காம் வகுப்பு மாணவி, பூஜிதா, பழமொழிகளையும், ஐந்தாம் வகுப்பு, தரணி, நாட்டுப்புற பாடல்களிலும் திறமையை வெளிப்படுத்தி, நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, இப்பள்ளி மாணவ - மாணவியர், பன்முக திறமைகளில் ஜொலிக்கின்றனர்.
வகுப்பறைக்குள் நுழைந்தால், பயன்படுத்தப்பட்டு துாக்கியெறியப்பட்ட காகித கப்புகள், தட்டுகள், கற்றல் உபகரணங்களாக மாற்றப்பட்டு, வகுப்பறையை அலங்கரிக்கிறது. இது மட்டுமல்லாமல், மாணவர்கள், பாடங்களை விளையாட்டோடு இணைந்து பயிலும் வகையில், பனை ஓலை பொருட்கள், மண்பாண்டங்கள் மற்றும் மரத்திலான கலை நயமிக்க பொருட்கள் பிரமிக்க வைக்கின்றன.
ஆச்சரியங்களின் ஆணி வேராக, மாணவ - மாணவியர் பிரகாசத்திற்கு காரணம், வசந்தா என்கிற பட்டதாரி ஆசிரியை. ஆசிரியரின் பண்புகள், குணங்கள், மாணவர்களின் முகம் பார்க்கும் கண்ணாடி என்பர். இதற்கு உதாரணமாக திகழும், வசந்தா, திருக்குறளின், 1,330 குறள்களை வைத்தே, திருவள்ளுவரை நின்ற கோலத்திலும், அமர்ந்த நிலையிலும் வரைந்து, 'பிரேம்' செய்து வகுப்பறையில் மாட்டி வைத்துள்ளார்.
'கடந்த, 1992ல், இப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தபோது, ஒவ்வொரு வீடாக சென்று, பெற்றோரிடம் பேசி, குழந்தைகளை குளிப்பாட்டி, உடை உடுத்தி, பள்ளிக்கு அழைத்து வந்து, சிற்றுண்டி வாங்கிக் கொடுப்பேன். சிற்றுண்டிக்காகவே பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வர துவங்கினர்.
'அனைவரையும், என் குழந்தைகளாக நினைத்து, அவர்களுடன் விளையாடி, கல்வியோடு, சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தேன். பள்ளி முடிந்து, மாலையில், வீட்டிற்கு செல்லாமல், ஏழை தொழிலாளர் குடும்பங்களை அணுகி, என்னால் முடிந்த பொருளுதவிகளை செய்வேன்.
'ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்து, வெளியேறும் குழந்தைகள், மேல் படிப்புக்கு செல்லும் வரை, அவர்களை கண்காணித்து, தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்' என்பர். இது, என் வாழ்வில் நடந்த நிஜம்.
'என்னுடைய இரு பெண் பிள்ளைகள் மீது கவனம் செலுத்தா விட்டாலும், அவர்கள், இயல்பாகவே நன்றாக படித்து, மூத்த மகள், சென்னையில், தனியார் மருத்துவமனையில், மனநல மருத்துவராக பணியாற்றுகிறார். இரண்டாவது மகள், 'நீட்' தேர்வில், நாட்டில், 11வது இடத்தை பிடித்ததால், அரசு உதவித் தொகையுடன், டில்லியில் உள்ள பிரபல மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
'ஏராளமான ஏழை குடும்பத்திற்கு மாங்கல்ய உதவி செய்துள்ளேன். ஏழை மாணவ - மாணவியர், மேல் படிப்புக்கான உதவிகள் செய்து வருகிறேன். 'கஜா' புயலால், எங்கள் பகுதி பாதிக்கப்பட்டவுடன், என் மகள்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உதவியுடன், 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, ஒரு வீட்டிற்கு, 3,000 ரூபாய் வீதம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம்...' என்றார்.
கல்வி சேவை மட்டுமல்லாமல் கவிதைகள், வழக்காடு மன்றம், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். ஆசிரியர் செய்தி இதழில், தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது கல்வி சேவையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உட்பட, 30க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
இருப்பினும், 'தினமலர்' நாளிதழ் சார்பில் வழங்கப்பட்ட, 'டி.வி.ஆர்., சிறப்பாசிரியர் விருது' தன்னை மென்மேலும் வளர செய்வதாக கூறுகிறார்.
மழை காலங்களில், பள்ளிக்கு, மாணவர்கள் வருகை குறைவதால், அன்றாட பாடம் பாதிக்கப்படுவதை உணர்ந்தார். தம் சொந்த பணம், ஒரு லட்சம் ரூபாயில், 1,600 குடைகள் வாங்கி, தன் பள்ளி குழந்தைகள் மட்டுமல்லாமல், 16 அரசு பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களுக்கும் கொடுத்தது, இவரை, வெளியுலகுக்கு அடையாளம் காட்டியது.
சத்தமில்லாமல் சேவையாற்றும், வசந்தா, அடுத்ததாக, மழை காலங்களில், அப்பகுதி துப்புரவு தொழிலாளர்களின் சிரமத்தை போக்க, அவர்களுக்கு, மழை கோட் வாங்கித் தர உள்ளார்.
'என்னுடைய அனைத்து பணிகளுக்கும், ஊக்கமளித்து, உறுதுணையாக இருப்பது, வேறொரு பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றும், என் கணவர், சித்திரைவேல் தான்...' என்கிறார், வசந்தா.
இவரை சந்தித்தபோது, நமக்கு புரிந்தது, 'விருதுகள் வழங்கப்படுவதால், சிலருக்கு பெருமை; இவருக்கு வழங்கப்படும் விருதுகளால்,விருதுக்கு பெருமை...' என்பது தான்.
வசந்தா டீச்சரை தொடர்பு கொள்ள: 98656 71393

எஸ். மெட்டில் ராஜ்

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement