Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

Share

அன்பு சகோதரிக்கு —
நான், 40 வயது ஆண். திருமணம் ஆகி விட்டது. ஒரு மகள் இருக்கிறாள். சீட்டு பிடிக்கும் தொழிலில் இருந்தேன். என் மனைவி, அரசு பள்ளி ஆசிரியை. எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக உள்ளனர். என் மனைவி, அவர் வீட்டுக்கு ஒரே மகள்.
இரண்டு ஆண்டுக்கு முன், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு சீட்டு போட்ட ஒருவர், சீட்டை எடுத்து, தொகையை கட்டாமல் தலைமறைவாகி விட, குடும்பம் நிலை குலைந்தது.
என்னிடமிருந்த சேமிப்பு பணம், புறநகரில் வாங்கி போட்டிருந்த நிலம் விற்ற பணம் எல்லாம் சேர்த்து, ஐந்து லட்சம் ரூபாய் வரை திரட்ட முடிந்தது. மீதமுள்ள, ஐந்து லட்ச ரூபாய்க்கு, உடன் பிறந்தவர்களிடமும், பெற்றோரிடமும் கேட்டேன்; அவர்களால் தர இயலவில்லை.
என் மனைவியின் பெற்றோர், கொடுத்து உதவினர். சீட்டு போட்டவர்களுக்கு கடனை அடைத்து, ஒரு வழியாக கரையேறினேன். தொழிலும் இல்லாமல், வேறு வேலையும் கிடைக்காமல், உள்ளூரிலேயே இருக்கும், மாமனாரின் ஆலோசனைபடி, அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளை ஆனேன்.
அவர்கள் செய்த உதவிக்கு கைமாறாக, மளிகை பொருட்கள் வாங்கி தருவது முதல், மின் கட்டணம் கட்டுவது வரை, அனைத்து வேலைகளையும் கவனிக்க துவங்கினேன். பின்னாளில், அவர்கள் வீட்டு வேலைக்காரனாக, அடிமையாக மாறி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
மகள் கூட மதிக்காமல், என்னிடம் வேலை வாங்குகிறாள். பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ எனக்கு உதவ முன் வரவில்லை.
இப்படியே எத்தனை நாட்கள் ஓட்ட முடியும். ஏதாவது கடை வைத்தோ, ஆட்டோ வாங்கி ஓட்ட நினைத்தாலும், மீண்டும் மாமனாரிடமோ, மனைவியிடமோ தான் பணம் கேட்க வேண்டும். அதை நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இந்த இக்கட்டான நிலையிலிருந்து எப்படி மீள்வது.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.

அன்பு சகோதரருக்கு —
ஏலச் சீட்டை நடத்துவதும், எடுப்பதும் ஒரு சூதாட்டத்திற்கு சமம்.
அதிக உழைப்பில்லாமல் பணத்தை சம்பாதிக்க நினைக்கும் சூதாடி, நீங்கள். 40 வயது வரை, எந்த வருமானம் வரும் பணியிலும் இல்லாமல், இளமையை தொலைத்து விட்டீர். உங்களின் இரு தம்பிகளுக்கும், ஒரு தங்கைக்கும் திருமணமாகி, தனித்தனி குடும்பங்களாக உள்ளனர். அவர்கள் எப்படி, ஐந்து லட்ச ரூபாய், வட்டியில்லா கடன் தருவர்.
பெண்ணை கட்டி கொடுத்த பாவத்திற்காக, மனைவியின் பெற்றோர், உங்களுக்கு உதவி இருக்கின்றனர். உங்களை, வீட்டு வேலைக்காரனாக, அடிமையாக இருக்க, அவர்களா வலுக்கட்டாயப்படுத்தினர்... இரண்டு ஆண்டுகளாக, எந்த வேலைக்கும் போகாமல், விரும்பி, வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறீர்.
உங்கள் கடிதத்தில், நீங்கள் என்ன படித்துள்ளீர் என்பதை குறிப்பிடவில்லை. உங்களது கல்வித்தகுதி,
பிளஸ் 2 'பாஸ்' அல்லது 'பெயில்' ஆக இருக்கும் என, யூகிக்கிறேன்.
நீங்கள் சுயதொழில் செய்ய, பிறர் உதவியை எதிர்பார்த்து ஏன் நிற்கிறீர்...
எந்த முதலீடும் தேவைப்படாத, ஏதாவது ஒரு பணிக்கு போங்கள். சொந்த காலில் நின்று, மாதம், 8,000 - 10 ஆயிரம் ரூபாயோ சம்பாதியுங்கள். மனைவியும், அவரது வீட்டாரும், தம்பி - தங்கை வீட்டாரும், உங்களை மதிப்பர்.
முதலீடு தேவைப்படும் எந்த பணியும், உங்களுக்கு உகந்தது அன்று. உதவிகள் செய்வது, ஒரு வழி பாதை அல்ல. நீங்கள் நன்றாக இருந்த காலத்தில், உங்களின் தம்பிகளுக்கும் - தங்கைகளுக்கும் என்ன உதவி செய்தீர்?
மிக மோசமான ஆட்கொல்லி, சுயபச்சாதாபம். மனைவி மற்றும் மகள், மதிக்கவில்லை; பெற்றோரும், உடன் பிறந்தோரும், உதவவில்லை; சுயதொழில் செய்ய, மனைவியிடமோ, மாமனாரிடமோ தான், கை நீட்ட வேண்டியுள்ளது. இந்த மாதிரியான புலம்பல்களை எல்லாம், இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு, குடி பழக்கம் இருந்தால், அப்பழக்கத்தை தலை முழுகுங்கள். உடல் எடை அதிகமிருந்தால், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள்.
உங்களின் அறிவுக்கும், கல்வி தகுதிக்கும் ஏற்ப, முதலீடு தேவைப்படாத எந்த பணி செய்யலாம் என்பதை மனைவியுடன் விவாதியுங்கள்.
பத்து லட்ச ரூபாய், ஏலச் சீட்டை எடுத்தவர், பணத்துடன் தலைமறைவானார் இல்லையா, அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறீர்களா... கொடுத்திருந்தால், அவ்வப்போது காவல் நிலையம் சென்று, காவல் துறை நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
தலைமறைவான நபரை, கண்டுபிடித்திருந்தது என்றால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். ஏமாற்று பேர்வழியிடமிருந்து எவ்வளவு பணத்தை திருப்பி வாங்க முடியுமோ வாங்குங்கள்.
எதிர் மறை எண்ணங்களை துாக்கி கடாசி விட்டு, புது மனிதனாகுங்கள் சகோதரரே...
ஐந்து ஆண்டுகள் உழைத்து, சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில், ஆட்டோ வாங்கி ஓட்டுங்கள். பகல் பொழுதில், வேலை; இரவில், ஆட்டோ ஓட்டுதல். இரட்டை வருமானம், உங்களை மிடுக்கன் ஆக்கும். வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement