Advertisement

இளஸ் மனஸ்! (20)

Share

பிரியமுள்ள அக்கா மெடோசுக்கு...
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, தலைமுறை தலைமுறையாக வாழ்கிறோம். என் வயது, 37; கணவரின் வயது, 40; எங்களுக்கு, 12 வயதில் ஆண், பெண் என, இரட்டைக் குழந்தைகள். இருவரும், 6ம் வகுப்பு படிக்கின்றனர்: வயதுக்கு மீறிய பேச்சால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
மகன் என்னிடம், 'வர வர நீலகிரி மாவட்டத்துல இருக்கவே பிடிக்கல; எப்ப பார்த்தாலும் குளிர்; பள்ளிக்கூடத்துக்கு, 12 கி.மீ., நடந்து போய் வரணும். சமவெளில இருக்குற மாதிரி, பொழுது போக்கும் வசதிகள் இல்லை; ஆண்டு முழுக்க சுற்றுலா பயணியர் தொந்தரவை தாங்க முடியவில்லை. சமவெளி பகுதி கல்லுாரியில் தான் படிப்பேன். பேசாம, வீடு, நிலங்களை வித்துட்டு, கோவையில் செட்டில் ஆயிடுவோம்...' என்கிறான்.
மகளோ, அவனுக்கு, நேர் எதிர் கருத்து உடையவள்.
'கோடி ரூபா கிடைத்தாலும், நீலகிரியை விட்டு போக மாட்டேன்; எதை படிச்சாலும், இங்கயே தான் படிப்பேன். வேலை, திருமணம் எல்லாம் இங்கு தான்; ஐ லவ் நீலகிரி...' என்கிறாள்.
மகன் - மகளிடையே வாக்குவாதம் நடக்காத நாளில்லை; சில சமயம், கைகலப்பும் நடக்கும்; யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தவிக்கிறேன் மெடோஸ்; தகுந்த அறிவுரை சொல்லேன்.

பிள்ளைகள் தொந்தரவால் மனம் நொந்த சகோதரிக்கு...
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வசிப்போருக்கு, அது ஒரு சொர்க்கமாக தெரிவதில்லை. தென்காசி, குற்றலாத்தில் பிறந்தவர், அருவிகளில் தினமும் போய் குளிப்பதில்லை. திருப்பதியில் வசிப்போர், ஆண்டில் ஒருமுறை கூட, சாமி தரிசனம் செய்வதில்லை. காஷ்மீரில் வசிப்போருக்கு, தால் ஏரி, சாதாரண குப்பை மிதக்கும் ஒரு ஏரிதான். அப்படித்தான் உன் மகன் சிந்தனையும் இருக்கிறது.
நீலகிரி மாவட்டம், காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசு அதிகம் இல்லாத ஆரோக்கியமாய், மக்கள் வாழத்தகுதியான இடம். அதை, மலைகளின் ராணி என அழைக்கின்றனர். உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகின், பல பகுதிகளிலிருந்தும், ஆண்டு முழுக்க சுற்றலா பயணியர் வருகின்றனர்; சமவெளியில் கிடைக்கும், எல்லா வசதிகளும் கிடைக்கிறது.
செல்ல மகனும், மகளும் சண்டை போடவே தேவையில்லை. ஒருவர் சொந்த மண்ணில் இருப்பாரா அல்லது துார தேசம் போவாரா என்பதை, காலமும், தேவையுமே முடிவு செய்யும்.
மகன், பிளஸ் 2 முடித்து, கல்லுாரி படிப்பை, உள்ளூரிலேயே தொடரலாம் அல்லது சமவெளிப் பகுதியில் ஏதாவது ஒரு கல்லுாரியில் சேர்ந்து படிக்கலாம். படிப்பு, வேலை, திருமணம் மூன்றுமே, அவனுக்கு சமவெளியில் நடப்பதாக வைத்துக் கொள்வோம்.
அவன், விரும்பியபடியே சமவெளி பகுதியிலேயே வசிக்கட்டும்; வீட்டை, நிலத்தை விற்று விட்டு வாருங்கள் என, பெற்றோரை வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பிறந்த ஊரை பற்றிய அபிப்ராயம் வயதாக வயதாக மாறும்; ஒன்றில் மூழ்கி திளைக்கும் போது, அதன் அருமை தெரியாது. அதை விட்டு, வெகு துாரம் விலகி நிற்கும் போது தான், அருமை புரியும்.
சமவெளியில் வசித்தாலும், வாரத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ, சொந்த ஊருக்கு, கட்டாயம் வந்து போவான் மகன். பணி ஓய்வு பெற்றவுடன், அவன் செட்டிலாவது, சொந்த மண்ணில் தான். மலை வாழ்க்கை, ஒருவகை வேப்பந்தேன்; வெளியில் கசந்து, உள்ளே தித்திக்கும்.
இனி, மகளுக்கு வருவோம்... நீலகிரியிலிருந்து வெளியே வரமாட்டேன் என, பிடிவாதம் பிடிப்பதும், அபத்தம் தான். படிப்பு, வேலை, திருமணத்திற்கான அரிய வாய்ப்புகள், சமவெளி பகுதியில் இருந்து வந்தால், வேண்டாம் என்பாளா, செல்ல மகள். மீறி, வேலைவாய்ப்பும், திருமணமும், சொந்த ஊரிலேயே அமைந்தால், அங்கேயே இருந்து விட்டு போகட்டும்.
சகோதரி... நீ யார் பக்கமும் பேசாதே!
'மகனே... நீலகிரி வேண்டாம் என்றால், சமவெளிக்குப் போ; மகளே... நீலகிரி வேண்டும் என்றால், இங்கேயே இரு. அது, உங்கள் விருப்பம். எங்களுக்கு, இந்த மண்ணும், நீரும் உயிருக்கு சமம். வீட்டையோ, நிலத்தையோ ஒரு போதும் விற்க மாட்டோம்; எங்கே வசிப்பது என்பதை, வாலிப வயதில் முடிவெடுங்கள். இப்போது, முழு கவனத்துடன் படிக்கும் வேலையைப் பாருங்கள்' என அறிவுறுத்து.
பிறந்த மண்ணின் பெருமைகளை, தெரிந்து கொள்ளும் நாள், வெகு தொலைவில் இல்லை.
- அன்புடன், மெடோஸ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement