Advertisement

அதிமேதாவி அங்குராசு!

Share

மறுசுழற்சி நகரம்!
மாநகராட்சி ஊழியர்கள், 'மக்கும், மக்காத குப்பையை தனித்தனியே பைகளில் வையுங்கள்' என்று, திரும்ப திரும்ப கூறி வருகின்றனர். ஆனாலும், உடைந்த கண்ணாடி முதல், உபயோகித்த எல்லாவற்றையும், ஒரே பையில் அடைத்து, குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். தொட்டி நிரம்பி வழிந்தாலும் கவலைப்படுவதில்லை.
கிழக்காசிய நாடான ஜப்பான், கமிகட்சு நகரில், குப்பையே விழுவதில்லை. இந்நகரத்தில் பயன்படுத்தும் பொருட்களில், 80 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது; மீதி உள்ளவை தோட்டத்துக்கு ஏற்ற உரமாக்கப்படுகிறது.
இங்கு, மறுசுழற்சி திட்டம், 2003ல் துவங்கப்பட்டது. இந்த நகர மக்கள், அன்றாடம் பயன்படுத்தி துாக்கி வீசும் அலுமினிய, ஸ்டீல் கேன், ஸ்ப்ரேயர், பெட் பாட்டில், மூடி, அட்டை, செய்தித்தாள் என, அனைத்தையும், 34 வகையாக பிரிக்கின்றனர். ரக வாரியாக பிரித்து வைக்க, தனித்தனியாக, பெரிய கொள்கலன்களை வைத்திருக்கின்றனர்.
இவற்றை சுகாதார அலுவலர்கள் சேகரித்து, மறுசுழற்சி செய்கின்றனர். குழந்தைகள் விளையாடி மகிழ, கரடி பொம்மை தயாரிக்கின்றனர். குழந்தைகள் தின கொண்டாட்டங்களில், இவை இடம் பெறும்.
பழைய துணிகளை கூட, விதம் விதமான பைகளாக உருமாற்றி விடுகின்றனர்; பிளாஸ்டிக் என்ற நெகிழி பொருட்கள், கண்ணாடி புட்டிகள் என, எதுவும் வீணாகாமல், மறு சுழற்சியில் உபயோக பொருளாக உருவாகின்றன.
சமைத்த உணவுப்பொருட்கள், கெட்டுப்போன காய்கறிகள், மக்கும் குப்பையாகி, மறு சுழற்சியில் வீட்டுத் தோட்டங்களுக்கு உரமாகிறது.
அந்த சிறுநகர வாசிகள், மறுசுழற்சியில் பொருட்களை உருவாக்கும் முறை, உபயோகித்த பொருட்களை உருமாற்றம் செய்யும் வழிமுறைகள் பற்றி கற்பிக்கின்றனர்.
வரும், 2020க்குள், 100 சதவீதம் குப்பையில்லாமல் ஆக்குவதே இந்த நகரத்தின் இலக்கு.

இயந்திர மனிதன்
உலகில் இயந்திர பயன்பாடு போன்றே, 'ரோபோ' என்ற இயந்திர மனிதன் பயன்பாடும் அதிகரிக்க வேண்டும்; ஆயிரம் ஊழியர்கள் உள்ள தொழிற்சாலையில், கிழக்காசிய நாடான கொரியா, 710, தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூர், 658 என்ற விகித்தில் இயந்திர மனிதனை பயன்படுத்தி வந்தன. தற்போது அது, 970 என, உயர்ந்துள்ளது. இந்தியாவில், 10 என்ற அளவிலேயே உள்ளது.
இயந்திர மனிதன், மனித வேலையைப் பறிப்பதில்லை; மாறாக சுலபமாக்குகிறது. மனிதர்கள், பணி செய்ய அஞ்சி தயங்கும் இடங்களில், இயந்திர மனிதனை பணியமர்த்தினால், உற்பத்தி அதிகரிக்கும்; நல்ல லாபம் கிடைக்கும். பொறியியல் மாணவர்கள், இயந்திர மனிதன் தயாரிப்பில் கவனம் செலுத்தலாம்.

ஊருக்கு 100 பேர்!
பொறியியல் படிப்பில், நான்கு ஆண்டுகளை ஓட்டி வெளியே வருபவரைத் தேடி, எந்த வேலையும் வராது; வேலை கிடைத்தாலும், படிப்புக்கு ஏற்றதாக இருக்காது. நாட்டில் வளர்ச்சியும் நடக்காது.
இதில், மாணவர்களை மட்டும் குறை சொல்லி பலனில்லை; கல்லுாரிகளுக்கும் பங்கு உண்டு!
பொறியியல் படிப்பில் சேர வருவோரிடம், புதிய கண்டுபிடிப்புக்கான ஆர்வம் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். மதிப்பெண் அளவுகோலை மட்டும் வைத்து சேர்த்தால், பொறியியல் துறை சோபிக்காது.
சுய ஆர்வமும், கற்பனைத் திறனும் இருக்க வேண்டும். இவற்றை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, பொறியியல் படிப்பு பலன் தரும்.
'அப்பா ஆசைப்பட்டார்' என்றோ, 'மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை; கிடைத்த பொறியியல் படிப்பை முடித்தேன்' என்றோ, விட்டேத்தியாக சொல்லிக் கொண்டிருந்தால், பலன் எப்படி கிடைக்கும். காலத்துக்கும், குறை கூறியபடி இருக்க வேண்டியது தான்!

இளமை நாடு!
உலகில், இளமையான நாடு இந்தியா தான்; இங்கு, 40 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை, 52 சதவீதமாக உள்ளது. ஆனால் வளர்ச்சி...
ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில், இந்தியா பயன்படுத்தும் எரிசக்தியின் அளவு, 2.5 கிலோ வாட். இது, அமெரிக்காவில், ஆறு கிலோ வாட்டாகவும், ஜப்பானில், 16 கிலோ வாட்டாகவும் உள்ளது.
எரிசக்தி பயன்பாட்டுக்கு ஏற்ப, பலனும் அதிகரிக்கும் என்பதையே இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement