Advertisement

மனிதரில் மாணிக்கம்!

நவம்பர் 14, நேரு பிறந்த நாள். அன்று, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

புன்னகை மன்னன்!
பிரதமராக இருந்த போது ஜவஹர்லால் நேரு, அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தார்.
அது, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரந்து விரிந்த தேசம். நேரு சென்ற இடங்களிலெல்லாம், திரளாகக் கூட்டம் கூடியது.
அவதுாறு பேசியே பழக்கப்பட்ட சிலர், 'அது தானாக விரும்பி வந்த கூட்டம் அல்ல; ரஷ்ய அரசு திட்டமிட்டுக் கூட்டிய கூட்டம்...' என்றும் குறை கூறினர்.
இதைப்பற்றி, நேருவிடம் கேட்ட போது, 'கூட்டத்தை அரசால் கொண்டு வர முடியும் என்பது உண்மை தான். ஆனால், கூட்டத்தினர் செய்த மகிழ்ச்சி ஆரவாரம், அரசு சொற்படி தான் நடந்ததா என, எனக்கு தெரியாது...' என்று, புன்னகையுடன் கூறினார்.

கனிந்த மனம்!
மருத்துவர் சையது முகமதும், ஜவஹர்லால் நேருவும், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் ஒன்றாக படித்தவர்கள்.
இருவருமே, காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றாக சிறை தண்டனை அனுபவித்தனர். அப்போது, மருத்துவர் சையது முகமதின் உடல்நிலை சீர்கெட்டது; பார்வையும் பறிபோனது.
அதனால், மருத்துவர் சையது முகமதுக்கு, தினமும் ஒரு மணி நேரம், பத்திரிகை படித்து காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார் நேரு. அதுமட்டுமல்ல, மூன்று வேளை உணவை, தினமும் எடுத்து வந்து கொடுப்பார். சாப்பிட்ட பின், தட்டுகளையும் சுத்தம் செய்து வைப்பார். மருத்துவர் சையது முகமது, ஒரு கட்டுரையில் இதை குறிப்பிட்டுள்ளார்.

அன்பின் சிகரம்!
இந்திய பிரதமர் பதவிகளை வகித்த நேருவும், லால்பகதுார் சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள். மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டு பழகி வந்தனர். கடந்த, 1946 ஏப்ரலில், நேருவை சந்திக்க, மகாராஷ்டிர மாநிலம், வார்தாவுக்கு சென்றார் சாஸ்திரி.
இரவு சாப்பாட்டின் போது, சாஸ்திரியை தேடினார் நேரு; காணாததால், தனியாக உணவு உண்டார்.
பின், ஒரு தட்டில், பழங்களும், பசும்பாலும் எடுத்து, லால்பகதுாருக்காக, ஒதுக்கப்பட்டிருந்த படுக்கை அருகே வைத்து திரும்பினார்.
இரவு உறங்க வந்த சாஸ்திரி, அவற்றை கண்டார்.
நேரு தான் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி மனம் கனிந்தார். நன்றி பெருக்கால் கண்ணீர் வடித்தார்!

பண்பில் இமயம்!
டில்லியில் உள்ள பார்லிமென்ட் மண்டபத்தில், ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. எம்.பி.,க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தின்பண்டங்கள் போட்டி போட்டு உண்டனர்; வாழைப்பழத் தோல்களை, கண்டபடி வீசினர்.
இது, பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு பிடிக்கவில்லை. ஒரு தட்டை எடுத்து, வாழைப்பழத் தோல்களை எல்லாம் சேகரித்து, குப்பைக் கூடையில் சேர்த்தார். பொறுப்பற்ற பிரமுகர்கள், வெட்கி தலை குனிந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement