Advertisement

அணில் தேவதை!

Share

களத்துார் கிராமத்தில், பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவருக்கு, நில புலன்கள் அதிகம். அவரது விளை நிலத்தில் தான், அவ்வூர் மக்கள் வேலை செய்து பிழைத்தனர்.
களத்து மேட்டிலிருந்து, கால்நடை பராமரிப்பு வரை, வேலையாட்கள் நிறைந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் கூலியோ மிகக் குறைவு; இதனால், மன வருத்தம் இருந்தாலும், முதலாளியிடம் முறையிட, துணிச்சல் வரவில்லை.
ஒருநாள் -
அவரது பழ தோட்டத்தில், சில விலங்குகள் புகுந்தன. பழங்களை தின்றும், மிதித்தும் பாழ்படுத்தின. அவற்றைப் பிடிக்க பொறிகள் அமைக்கப்பட்டன.
பொறி ஒன்றில், அகப்பட்டது அணில்; மாலையில், காலாற உலாவ வந்த பண்ணையார், அதைப் பார்த்தார். பின்னங்கால்கள் பொறியில் சிக்கிய நிலையில், தவித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டையால், அதை அடிக்கப் போனார்.
அப்போது, 'ஐயா... உங்கள் செய்கை தவறானது; மண்ணின் வளத்தை நீங்கள் பயன்படுத்துவது போல், உங்கள் தோட்டத்து கனிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்; அனைத்தும் இயற்கை தானே... என்னைக் கொல்வது, எந்த வகையில் நியாயம்...' என்று துணிச்சலுடன் கேட்டது.
பண்ணையார் திகைத்து விட்டார். அணிலின் கேள்விக்கு, அவரால் பதில் கூற முடியவில்லை; அதை விடுவித்தார்.
அந்த அணில், ஒரு தேவதையாக மாறி, 'ஐயா... உங்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்...' என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடியது.
அதை தடுத்து, 'தேவதையே... உன் உயிரைக் காத்த எனக்கு, எதாவது வரம் தரலாமே...' என்று கேட்டார்.
'வரம் கொடுப்பதில், எந்த சிக்கலும் இல்லை; ஆனால், பெறுவதற்கு, சில தகுதிகள் வேண்டும்; அப்போது தான், அதை அனுபவிக்க முடியும்...'
'அப்படியா... வரம் பெற, நான் என்ன செய்ய வேண்டும்...'
'உங்கள் உடலை, சோம்பல் எனும் பிசாசு பிடித்துள்ளது; அதை விரட்ட வேண்டும்; ஆறு மாத காலம், வியர்வை சிந்த உடல் உழைத்தால், அந்த பிசாசு ஓடி விடும்...' என்றது தேவதை.
மதிப்பு மிக்க வைரக்கற்களையும், நிலத்தையும் வரமாக கேட்கும் ஆசையில், இதற்கு சம்மதித்தார்.
வயல்களில் நீர்ப் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுவடை செய்வது, கால்நடைகளை மேய்ப்பது, குளிப்பாட்டுவது, தீவனம் போடுவது, கோழி முட்டைகளை சேகரிப்பது என, மற்றவர்களுடன் கடுமையாக உழைத்தார்.
ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளாக நாளாக, உழைப்பின் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டது. அது, மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது.
உடல், நலம் பெற்று, அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது; களைப்பு ஏற்பட்டதால், நன்றாக உறங்கினார். பசியை உணர்ந்ததால், உண்ணும் உணவில் சுவை கூடியதாக பட்டது.
உழைப்பிலுள்ள சிரமங்களை தெரிந்து கொண்டார். எனவே, அனைவருக்கும் கூலியை உயர்த்தினார். பணியாளர்கள் மகிழ்ந்து, மனதார வாழ்த்தினர்.
தேவதையை சந்திக்கும் நாள் வந்தது.
அன்று, 'தேவதையே... நான் நன்றாக உழைக்கிறேன்; வியர்வையில் தினமும் நனைகிறேன்; வாழ்நாள் முழுவதும் உழைத்தபடியே இருப்பேன். என்னிடம் சோம்பல் அண்டவே அண்டாது. இப்போது எனக்கு வரம் தரலாம்...' என்று பணிவாக கேட்டார்.
'ஐயா... நீங்கள் உழைக்க துவங்கியது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், உங்கள் மனம் இன்னும் தகுதியடையவில்லை. கோபத்தின் போது, ஒரு கரடியின் மூர்க்கத்தை அடைகிறீர்; அதிலிருந்து, விலக வேண்டும்...' என்றது தேவதை.
அதற்கு ஒப்புக் கொண்டு, வீடு திரும்பினார் பண்ணையார்.
திருக்குறள், கொன்றை வேந்தன் போன்ற, அற நுால்களைக் கற்க துவங்கினார்; அறிவுரைகளை உணர்ந்து நடந்தார். அன்பும், பாசமும் காட்டியதால், மக்கள் மத்தியில், மதிப்பும், மரியாதையும் கூடியது. தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை, ஏழை எளியவர்களுக்கு கொடுத்தார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது தேவதை, 'ஐயா... உங்களுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன; என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள்...' என்றது.
யோசித்த பண்ணையார், 'என்னை நல்வழிப்படுத்திய அணில் தேவதையே... தேவையான அனைத்தும், என்னிடமே இருப்பதாக உணர்கிறேன். இந்த வாழ்க்கையை, என் ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்...' என்று வணங்கினார்.
பண்ணையாரை வாழ்த்தி மறைந்தது தேவதை.
செல்லங்களே... அனுபவம் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல; நிறைந்த செல்வமும் கூட... கடுமையாக உழைத்து, நல் அனுபவத்தை பெறுங்கள்.

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement