Advertisement

வழி மீது விழி வைத்து... (2)

Share

சென்றவாரம்: எஜமான் மரணம் அடைந்ததை அறியாமல், திரும்பி வருவார் என, ரயில் நிலையத்திலேயே நம்பிக்கையுடன் காத்திருந்தது அற்புத நாய் ஷெப். இனி -

விசுவாசம் மிக்க, அந்த நாயின் செயல், அமெரிக்கா முழுவதும் பரவியது. நுாற்றுக்கணக்கானவர், அதைக் காண, வந்தனர். அதனுடன் நின்று படம் பிடித்து மகிழ்ந்தனர். விதம் விதமான உணவுகளைக் கொடுத்தனர்.
அந்த வழித்தடத்தில் வரும் ரயில் பயணியர், ஜன்னல் வழியாக, ரயில்நிலைய வளாகத்தில் நாயைக் காண ஆர்வத்துடன் காத்திருந்தனர். வேறு மார்க்கமாகப் போக வேண்டியவர்களும், பயண திட்டத்தை மாற்றி, நாயை கண்டு சென்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு இதழ்களில், விசுவாசம் மிக்க ஷெப்பின் படமும், செய்தியும் அடிக்கடி பிரசுரமாயின.
அந்த நாய்க்கு புகலிடம் தந்து, பாதுகாக்க விரும்புவதாக, ரயில்நிலைய அதிகாரிக்கு கடிதங்கள் குவிந்தன. பலரும், அதை தங்கள் உடமையாக்க போட்டி போட்டனர். நாய் வளர்ப்பு கழகங்கள், பராமரிக்க விருப்பம் தெரிவித்தன.
இதற்கெல்லாம், ரயில் நிலைய அதிகாரியும், நடத்துனரும் கூறிய ஒரே பதில், 'ஷெப்பை வற்புறுத்த மாட்டோம்; அதன் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்...' என்பது தான். அந்த நாயோ, 'என் எஜமானுக்காக, எவ்வளவு நாளானாலும் இங்கேயே காத்திருப்பேன்...' என, உணர்த்தி கொண்டேயிருந்தது.
புகழின் உச்சிக்கு சென்று விட்டது ஷெப்; உலகம் முழுவதும் அதற்கு, ரசிகர்கள் பெருகினர். அதன் நலம் விசாரித்து கடிதங்கள் குவிந்தன. அதன் பராமரிப்பு செலவுக்காக, பலர் பணம் அனுப்பினர். அதன் புகைப்படம் கேட்டு வந்த கடிதங்கள் ஏராளம். அதை, பாதுகாக்கும் யோசனையை தாங்கிய கடிதங்களும் வந்தன.
ரயில்வே அதிகாரியால், அந்த கடிதங்களை கையாள முடியவில்லை; அவற்றை நிர்வகிக்க, ஒரு அலுவலரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலக வரலாற்றில், அந்தரங்க செயலரைக் கொண்ட ஒரே நாய், ஷெப்பாக தான் இருக்கும்.
ரசிகர்களின் அன்பும், ஆதரவும் அதன் பண்பை சிறிதும் மாற்றி விடவில்லை.
வயதாகி விட்டதால், உடல் சிறிது தளர்ந்திருந்தது. கண்ணில், பழையது போல் ஒளி இல்லை; உன்னிப்பாக கேட்கும் காதுகளும், கொஞ்சம் மந்தமாகியிருந்தது. முதிர்வை காட்டும் விதமாக மிகவும் நிதானத்தை கடைபிடித்து வந்தது.
மழையோ, பனியோ, வெயிலோ... எந்த கால நிலையிலும், அங்கு வரும் ரயில்களை அது தவற விடுவதேயில்லை. முடிவற்ற தேடலுடன் இருந்தது. எஜமானை எதிர்பார்க்கும் ஆர்வம் சிறிதும் குன்றவில்லை.
ஐந்தரை ஆண்டுகள் கடந்தன -
ஜனவரி 12, 1942ல், போர்ட் பெண்டன் ரயில் நிலைய பகுதியில், பனி விழுந்து கொண்டிருந்தது; எங்கும் நசநசப்பு. காலை, 10:17 மணிக்கு வரவேண்டிய ரயில், துாரத்தில் தெரிந்தது. அதை வரவேற்க பயணியரும், அதிகாரியும் தயாராயினர்.
உடனே, வழக்கமான இடத்துக்கு வந்தது ஷெப். ரயிலை எதிர்நோக்கியபடி, தண்டவாளங்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தது.
அது, வழக்கமான காட்சி தான்; கடைசி வினாடியில் தண்டவாளத்திலிருந்து தாவி, நடைமேடையில் குதித்து ஏறி, எஜமானைத் தேடும்; ஐந்து ஆண்டுகளாக, தவறாமல் இது நடந்தது.
வேகத்தை குறைத்தபடி, நடைமேடையின் விளிம்பை ஒட்டி, நிலையத்துக்குள் நுழைந்தது ரயில். முக்கல், முனகல் பெருமூச்சுடன் நெருங்கி வந்த போது, நடைமேடைக்கு தாவ முயன்றது ஷெப்.
தளர்ந்திருந்த அதன் உடல், ஒத்துழைக்கவில்லை. திறன் குறைந்து இருந்ததால், சில வினாடிகள் தாமதம் ஏற்பட்டது. பனியின் நசநசப்பால் அதன் கால்கள் சறுக்கின.
அவ்வளவு தான்... ஒரு மூட்டை போல் சரிந்து, தண்டவாளத்தில் விழுந்தது.
'ஷெப்...' என, வீறிட்டாள் ஒரு பெண். நிலைய அதிகாரியும் பரபரப்புடன், 'சீக்கிரம்... ஏறி வா...' என்று அலறித் துடித்து ஓடி வந்தார். ரயில் நிலையமே ஸ்தம்பித்து, நாய் பக்கம் திரும்பியது.
ஆனால், காலம் திரும்பவில்லை. ராட்சதன் போன்ற ரயில் இன்ஜின், அந்த எளிய நாய் மீது மோதியது. அந்த வேகத்தில், 20 அடிகள் இழுத்து சென்றது. நன்றியுடன் காத்திருந்த ஷெப்பின் உடல் சிதைந்து, மூச்சு நின்றது. அதன் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
துயரம் மிக்க இந்த செய்தி நாடெங்கும் பரவியது. அதன் மறைவு, முதல் பக்க செய்தியாக, பத்திரிகைகளில் பிரசுரமானது. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள், கண்ணீர் விட்டு கதறினர். அதன் செயலைப் போற்றி, புகழஞ்சலி செலுத்தினர்.
போர்ட் பெண்டன் நகரம் சோகமயமானது. கடைகள் மூடப்பட்டன; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; இல்லத்தரசிகள் சமையல் அறையைப் புறக்கணித்தனர். இறுதி யாத்திரைக்காக திரண்டனர்.
ஷெப் உடலுக்கு, இறுதி மரியாதை செலுத்திய பாதிரியார், 'சுயநலம் நிறைந்த உலகில், தனக்கென வாழாத தோழன் நாய் தான். அது, எந்த சூழ்நிலையிலும், நம்பியவரை கைவிடுவதில்லை; நன்றி மறப்பதில்லை; துரோகம் செய்வதில்லை. வாழ்விலும், தாழ்விலும் நட்பை தவிர்ப்பதில்லை...' என, பிரார்த்தனை உரையில் குறிப்பிட்டார்.
நகர சிறுவர்கள் சோக கீதம் இசைக்க, அமைதியாக புதை குழிக்குள் இறக்கப்பட்டது ஷெப்பின் உடல்.
பெண்டன் நகரத்தில், இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஷெப்பின் கல்லறை. அதன் முகப்பில், நுட்ப வேலைப்பாடு நிறைந்த, நாயின் மரச்சிற்பம் உள்ளது. அந்த ரயில்நிலையத்தை கடக்கும் பயணியர், நெஞ்சுருகி அஞ்சலி செலுத்துவது இன்றும் தொடர்கிறது. உன்னதமான செயலால், மனிதர்கள் மனதில், மகத்தான இடம் பிடித்து விட்டது அந்த நாய்.
குழந்தைகளே... நல்ல செயல்கள் மட்டுமே, மங்கா புகழை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
முற்றும்

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement