மன அழுத்தம் என்பது என்ன?
ஏமாற்றங்கள், இழப்புகள், நிஜத்தை ஏற்க மறுக்கும் போது ஏற்படும் மன ரீதியான தாக்கங்களை மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) எனலாம். மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களின் குறைபாடால் மன அழுத்தம் ஏற்படும். உடலில் நோய்கள் உருவாக முக்கியமான காரணங்களில் ஒன்று மன அழுத்தம்.
மன அழுத்தத்திற்கு என்ன காரணம்?
பிறக்கும் குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. வேலைப்பளு, தேர்வு பயம், குடும்பம், கவலைப் படுதல், பதட்டம், அவசரம், உடல் மற்றும் உயிருக்கு ஆபத்தை உணரும் போது, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது உணர்வு ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அறிகுறிகள் என்ன?
பதட்டம், எரிச்சல், மனதை ஒருமுகப்படுத்த முடியாதது, மனச்சோர்வு, பிடித்தது கூட பிடிக்காமல் போகும், துாக்கமின்மை, பசியின்மை, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, எதிர்காலத்தை நினைத்து பயம், இதயம் வேகமாக துடிப்பது, தாம்பத்ய உறவில் திருப்தியின்மை, அஜீரண கோளாறு, மூச்சுவிடுவதில் சிரமம்.
பக்க விளைவுகள் உண்டா?
மன அழுத்தம் ஏற்படும் போது மூளை, நரம்பு மண்டலம், இதயம், ரத்த ஓட்டம், சிறுநீரகத்தை பாதிக்கிறது. அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு, சோர்வு, எதிலும் ஆர்வமின்மை, தலைவலி, செரிமான பிரச்னை ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு, சினைப்பையில் நீர் கட்டி வரலாம்.
அதிகம் பாதிக்கப்படுவது யார்?
மனஅழுத்தம் ஆண்களை விட பெண்களிடம் இரண்டு மடங்கு அதிகம் வெளிப்படுகிறது. நாகரீகம், வாழ்க்கை முறை மாற்றத்தால் 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாத பலரும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சிகிச்சை முறைகள்?
மன அழுத்தம் ஒரு நோயே இல்லை. எதிர்மறை எண்ணங்களுக்காக மட்டும் மன அழுத்தம் ஏற்படுவதில்லை. சில நல்ல காரியங்களை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகவும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பொதுவாக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க தெரிந்தால் ஆரோக்கியமாக வாழலாம். தினமும் எட்டு மணி நேரம் துாக்கம், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.
என்ன செய்யலாம்?
மனதிற்கு பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும். கோயில், சுற்றுலா செல்ல வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். பிரச்னைகளை சமாளிக்கும் வழிகளை அறிய வேண்டும். டாக்டரின் ஆலோசனை கேட்டு மருந்துகள் சாப்பிட்டால் மன அழுத்தத்திற்கு இடமில்லை.
டாக்டர் சா.டீன்வெஸ்லி
மனநல நிபுணர்
திண்டுக்கல்
98421 55774
ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!