Advertisement

மழைக்கால கால்நடை நோய்கள்

மழை, கோடை காலங்களில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அப்பருவ காலங்களுக்கு ஏற்ப சில சிறப்பு பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்.
மாடுகளை பண்ணை அளவில் வைத்து வளர்ப்போர் கொட்டகைக்குள் மழை நீர் புகாதபடி பார்த்து கொள்ள வேண்டும். கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்வது நல்லது. சேறும் சகதியாக கொட்டகை இருந்தால் அது மாடுகளின் உடல் நலத்தை பாதிப்பதோடு பாலின் தரமும் குறைய வாய்ப்புகள் இருக்கிறது.

பூஞ்சக் காளான் நச்சு
கறவை மாடுகளுக்கு மழைக் காலங்களில் மடி வீக்க நோய் தாக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் பால் கறப்பதற்கு முன்னர் மடியையும், காம்புகளையும் 'பொட்டாசியம் பர்மாங்கனேட்' கரைசல் கொண்டு கழுவி பின்னர் பால் கறக்க வேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட் துகள்கள் வாங்குவதற்கு அதிக செலவு கிடையாது. கன்றுகளுக்கு கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்தகள் தர வேண்டும். மாடுகளின் தீவனப் பொருட்களான வைக்கோல், கலப்பு தீவனங்கள் போன்றவைகளை மழை நீரிலிருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழை நீரில் இவை நனைவதால் பூஞ்சக் காளான் நச்சு ஏற்படலாம். அடைமழை காலங்களில் ஆடுகளை மேயச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்று ஏற்பாடாக தழை மற்றும் இலைகள், காய்ந்த சோளம், கம்பு தட்டைகளை உணவாக கொடுக்கலாம்.

நீல நாக்கு நோய் கிருமி
அனைத்து ஆடுகளும் இப்படி கொட்டைகையினுள் வைத்து தீவனம் வழங்க முடியாத சூழ்நிலையில் குறைந்த பட்சம் சினை ஆடுகளுக்கும், பாலுாட்டும் தாய் ஆடுகளுக்கும் மட்டும் தீவனம் தருவது அவசியம். மழைக்காலம் என்பதால் ஆடுகளின் குளம்புகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இதனை தவிர்க்க ஆடுகள் கொட்டகைக்குள் நுழையும் பகுதியில் குளம்புகள் நனையும்படி பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை நிரப்பி வைக்க வேண்டும்.
ஆடுகள் தங்கும் கொட்டகைகயை சுற்றி மழை நீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் பெருக வாய்ப்பு ஏற்படும்.
இவையே ஆடுகளில் நீல நாக்கு நோய் ஏறபடுத்தும் கிருமிகளை பரப்பும் இடைநிலை காரணிகளாகும். மாடுகளை போலவே ஆடுகளுக்கும் இப்பருவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையின் ரேபில் அவசியம் செய்ய வேண்டும்.

- வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
94864 69044

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement