Advertisement

தேனீப்பெட்டி பராமரிப்பு

தேனீ பெட்டிகள் தென்னந்தோப்பில் அல்லது இதர இடங்களில் வைத்த சில விவசாயிகள் பராமரிப்பு குறித்து அறியாமல் உள்ளனர்.
இதனால் தேனீ கூட்டங்கள் இடம் மாறும் நிலை ஏற்படும். தேனீக்கள் தேன் சேகரித்திட செல்ல இயலாத சமயத்தில் அதாவது தற்போது நிலவும் தொடர் மழை பெய்யும் தருணங்களில் கட்டாயம் தேனீ பெட்டிக்குள் சர்க்கரைப்பாகு வைத்தல் அவசியம்.
அதாவது செயற்கையாக ஒரு பங்கு சர்க்கரையுடன் ஒரு பங்கு தண்ணீர் என்று சேர்த்து பாகு காய்ச்சி ஆறியவுடன் ஒரு பெட்டிக்கு ஒரு வாரத்துக்கு 250 கிராம் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.
இதனை தேங்காய் தொட்டியிலோ அல்லது பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் கோப்பைகளில் சர்க்கரைப்பாகு ஊற்றி தேன் அறை சட்டம் நீக்கப்பட்டு காலியாக உள்ள அறைகளில் வைக்க வேண்டும்.
சர்க்கரைப்பாகில் தேனீக்கள் மூழ்கி இறப்பதை தவிர்க்க அதில் சிறு சிறு குச்சிகளை மிதக்க விடுவது அவசியம். தவிர சர்க்கரைப்பாகு ஒரு பாகம், மொலாசஸ் ஒரு பாகம் கலந்தும் செயற்கை முறையில் உணவு அளிக்கலாம். இதற்கும் மேலாக தேன் கிடைக்கும் காலங்களில் சிறிதளவு தேனை சேமித்து வைத்து அல்லது விலை குறைவாக உள்ள நேரத்தில் தேனை வாங்கி வைத்து ஒரு பெட்டிக்கு வாரத்திற்கு 100 மில்லி என்ற அளவில் தேனையே அளிக்கலாம்.
தேனீக்கள் வளர உதவும் மதுரம் தரும் பயிர்களான மா, புளி, வேம்பு, இலவம், முருங்கை, அகத்தி, அரப்பு, புங்கம், அரசு, தீக்குச்சி, இலந்தை, குதிரை மசாமல், கர்ப்பு, ரப்பர் மரங்கள் நட்டு வைத்தால் அதிக தேன் பெறலாம். மகரந்தம் தரும் தாவரங்களான தென்னை, வேல்பனை, பாக்கு, தக்காளி, சோளம், கம்பு, கத்திரி மற்றும் பூசணி முடிந்த அளவு தோட்டத்தில் சாகுபடி செய்யும் போது லாபம் உண்டு. தேனீக்களுக்கு மதுரம் மற்றும் மகரந்தம் இரண்டையும் தரும் வாய்ப்புள்ள முருங்கை, வாழை, கொய்யா, சூரியகாந்தி, எள், கடுகு, நெருஞ்சி, சப்போட்டா, வெங்காயம் இருந்தாலும் தேன் அதிகம் பெறலாம்.
- டாக்டர் ப.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர்
தேனி
98420 07125

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement