Advertisement

இளஸ் மனஸ்! (9)

அன்பு மிக்க அம்மா மெடோசுக்கு...
நான், 11ம் வகுப்பு படிக்க வேண்டியவள்; உடல் நலக்குறைவு காரணமாக, பள்ளிக்கு செல்ல முடியவில்லை; தனித்தேர்வராக, பிளஸ் 2 எழுத, வீட்டிலேயே படிக்கிறேன்.
சுமாராக தான் படிப்பேன்; கவிதை, கதை எல்லாம் நன்கு எழுதுவேன்; ஓவியமும் வரைவேன். இப்போது, இரண்டு கதை எழுதி வைத்துள்ளேன். அவற்றை, நடிகர் சூர்யா அண்ணாவோட தயாரிப்பில், சினிமாவாக எடுக்க ஆசைப்படுகிறேன்.
ஆனா, அவரை சந்திக்கிறது எப்படின்னு தெரியல... எப்படியாவது, என் கதையை படமா எடுக்கணும். தயவு செய்து உதவுங்க அம்மா.
எந்த கல்லுாரியில், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புக்கு நல்ல மதிப்பு இருக்குன்னு சொல்லுங்க... உங்களைத் தான் நம்பியிருக்கேன்!

அன்பு மகளுக்கு!
உடல் நலக் குறைவு ஏற்பட்டபோதும், கல்வியை கை விடாமல், வீட்டிலேயே படித்து, தனித்தேர்வு எழுத எடுக்கும் உன் முயற்சிக்கு, முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், கதை, கவிதை மற்றும் ஓவியத்தில் இருக்கும் ஈடுபாட்டிற்கும் வாழ்த்துகள்!
உன் படைப்புகளை, பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கிறாயா? இல்லையெனில், உடனே அனுப்பு. பல பத்திரிகைகள், சிறுகதைப் போட்டிகள் நடத்துகின்றன. அவற்றில் பங்கு கொள்.
உன்னைப் போன்ற, இளம் படைப்பாளிகளை, வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதில், சிற்றிதழ்களின் பங்கு மகத்தானது. நுாலகங்களில், ஏராளமான சிற்றிதழ்களை காணலாம்; அவற்றுக்கு, உன் படைப்புகளை அனுப்பு.
பெரிய அளவில், சன்மானம் கிடைக்காவிட்டாலும், உன் பெயர், பிரபலம் அடையும். தற்போது, மின்னணு யுகம் நடக்கிறது; அதையும் பயன்படுத்திக் கொள்.
'பிளாக்' எனப்படும் வலைப்பூ பக்கத்தை, எவ்வித முதலீடுமின்றி நீயே உருவாக்கலாம். அதில், உன் கதை, கவிதை, கட்டுரை, காவியங்களை வெளியிடலாம். உன் வலைப்பக்கம் குறித்து, 'வாட்ஸ் ஆப்' மூலமாக விளம்பரப்படுத்தலாம்.
இந்த வழிகளில் முன்னேறிய பின், திரைத்துறையில் காலடி பதிப்பது சுலபம்.
போட்டி நிறைந்த திரையுலகில், முதலில் உன்னை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கு நீ படிக்க விரும்பும், விஷுவல் கம்யூனிகேஷன் கல்வி உதவும். பல கல்லுாரிகளில், இந்த பாடத்திட்டம் உள்ளது. கற்பனை திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இந்த துறையில், திறமைக்குத் தான் முதலிடம் கிடைக்கும். அதனால், எந்த கல்லுாரியில் படித்தாலும், திறமை இருந்தால் சாதிக்கலாம்.
திரைத்துறை மட்டுமின்றி, வானொலி, 'டிவி' மற்றும் ஊடகங்களிலும், விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் உள்ளன.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
- அன்புடன், மெடோஸ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement