Advertisement

அதிமேதாவி அங்குராசு!

உணவே மருந்தென வாழ்!

முறையான உணவுப் பழக்கம் என்பது என்ன தெரியுமா...
வயது, உடல் உழைப்பு, வசிக்கும் சூழல், பருவகாலம் போன்றவற்றை, கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கும் உணவுகள் தான் முறையானது.
சாப்பிடும் அளவையும், நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று, சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.
வசிக்கும் இடத்திற்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ப, உணவு இருக்க வேண்டும்.
குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், வெப்பம் தரும், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதே உணவை, வெப்ப மண்டல நாடுகளில் வசிப்பவர்கள் சாப்பிட்டால், வயிற்றுப்புண், பெருங்குடல் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும்.
அதனால் தான், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐந்து வகை நிலங்களுக்கு ஏற்ப, உணவு வகைகளை பழங்காலத்தில் தமிழர்கள் வகுத்திருந்தனர்.
ஒரு நாளை, புத்துணர்ச்சியுடன் துவங்க, காலை உணவு மிகவும் அவசியம். பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள், அவசரம் கருதி, காலை உணவை தவிர்க்கின்றனர். சீக்கிரமாக பள்ளிக்கு கிளம்புவதால், காலை நேரத்தில், குழந்தைகளுக்கு பசி ஏற்படுவதில்லை.
பல குழந்தைகள், பால் மட்டும் அருந்தியே, பள்ளி செல்கின்றனர். இவர்களுக்கு, தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மூளைச்சோர்வு ஏற்படும்.
காலை உணவிற்கு, முக்கியத்துவம் கொடுக்காமல், துரித உணவுகளை சாப்பிடும் வழக்கம், எந்த விதத்திலும் நன்மை அளிக்காது.
காலை உணவு சாப்பிடவில்லை என்றால், இரைப்பை காலியாக இருக்கும். அப்போது சுரக்கும் ஜீரண அமிலத்தால், வயிற்றில் புண் உண்டாகும். இதனால், உப்புசம், வாந்தி, மயக்கம், ரத்தசோகை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற, பாதிப்புகள் பிற்காலத்தில் ஏற்படக்கூடும்.

காலை உணவு
கடலை, துவரை, உளுந்து, காராமணி, மொச்சை, பச்சைப் பயிறு, போன்றவற்றை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் சேர்த்து, பக்குவம் செய்து, காலை உணவாக சாப்பிட வேண்டும் என்பதை, பழந்தமிழ் நுாலான, பதார்த்த குண சிந்தாமணி குறிப்பிடுகிறது.
பயிறு வகைகள், மாவு மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்தது; உடலுக்கு தேவையான, ஊட்டத்தை அளிக்க வல்லது. இவற்றை சாப்பிடுவதால், உடல் சோர்வு ஏற்படாது.
எளிதில் செரிக்கும் கஞ்சி வகைகளை, காலையில் சாப்பிடலாம்; அத்துடன், சுண்டல் வகைகளையும் சாப்பிடுவது நலம் தரும்.

மதிய உணவு
கிழங்குகள், பழ வகைகள், காய்கறி, கீரைகள், தயிர், மோர் மற்றும் வறுத்த, பொரித்த உணவுகளை மதிய உணவாக சாப்பிடலாம்.
மதிய நேரம், உடலில் ஜீரண நீர், உணவை நன்றாக ஜீரணிக்கும். அதனால், மந்த உணர்வு ஏற்படாது; மனத்தெளிவு உண்டாகும். அதனால் தான், விருந்து உபசரிப்புகளை, மதிய நேரத்தில் திட்டமிடுகின்றனர்.

இரவு உணவு
எளிதில் செரிக்கும் உணவுகளையே, இரவில் சாப்பிட வேண்டும். பிஞ்சு காய்கறிகள் நல்லது. சுண்டைக்காய், துாதுவளை போன்றவற்றில் செய்த வற்றலை, இரவு உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரத்தில், குளிப்பது, விளையாடுவது, நீச்சலடிப்பது, அலைவது, விவாதிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உணவு மேஜையில்...
* முழு கவனத்தையும் உணவில் செலுத்தி, நன்றாக மென்று சாப்பிட வேண்டும்
* உமிழ் நீருடன் உணவு நன்கு கலக்க வேண்டும்
* ஜீரணம், வாய் பகுதியிலேயே ஆரம்பித்து விடுகிறது
* அலைபேசி, 'டிவி' பார்த்தபடியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
* கோபம், மனத்துயர் போன்றவை, செரிமானத்தை பாதிக்கும்
* ஜீரணம் ஆனதை உறுதி செய்தபின் தான், மீண்டும் சாப்பிட வேண்டும்.
* உணவின் அளவும், சாப்பிடும் நேரமும் மிகவும் முக்கியம்
* நான்கு மணி நேர இடைவெளி விட்டு, பசித்த பின் சாப்பிட வேண்டும்
* அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, நோயை உண்டாக்கும்
* தவிடு நீக்கிய மாவு உணவு, பேக்கரி உணவுகள், வறுத்து பொரித்த, கார உணவுகளை, மலச்சிக்கலால் அவதிப்படுவோர் தவிர்க்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்
* பசித்த பின், தாமதமாக சாப்பிடுவது தவறு; பசி அதிகரித்தால் உடலில், சர்க்கரையின் அளவு குறையும்; அதனால், படபடப்பு, சோர்வு ஏற்படும்.

- அன்புடன், அங்குராசு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement