Advertisement

ஏக்கருக்கு 12 டன் தரும் சுரைக்காய்

குறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் பெறலாம். இதற்கு அதிக செலவு ஏற்படாது. வங்கி சேவையும் உண்டு. சுரைக்காய்க்கு உள்ள சிறப்பு, அது ஓராண்டு தாவரமாக வேகமாக படர்ந்து செல்லும் தன்மை தான். இதனை தரையில் மற்றும் கூரைகளில் கூட படர விடலாம். இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும்.

சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் பி, புரதம் 0.2 சதவீதம் கொழுப்பு சத்து 0.1 சதவீதம், கார்போஹைட்ரேட் 2.5 சதவீதம், தாது உப்பு 0.5 சதவீதம் உள்ளன. சுரைக்காயில் கோ 1, அர்காபஹார், புசாசம்மர், நீளம் புசா சம்மர், புராலிபிக், புராலிக் உருண்டை, மெகதுாத், பூசா மன்ஞரி முதலிய ரகங்கள் உள்ளன.

நேரடியாக விதைப்பதை விட ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ 200 கிராம் விதைகளை பாலிதீன் பைகளில் நாற்று விட்டு வளர்த்தல் அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடுதல் நன்று. விதைக்கும் முன் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம்.
நடவு வயலுக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுவுரம் அல்லது தரமான மண்புழு உரம் 5 டன் மற்றும் 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இட வேண்டும்.

ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (800 கிராம்) 4 பாக்கெட் மற்றும் சூடோமோனாஸ் 5 பாக்கெட் (ஒரு கிலோ) என்ற அளவில் நன்கு மட்கிய தொழு உரத்துடன் உழவிற்கு முன் இட வேண்டும். செடிக்கு செடி 2.5 மீட்டர் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர் வீதம் இடைவெளியில் குழிகள் எடுத்து 7 -10 நாட்கள் அந்த குழிகள் ஆற விட வேண்டும்.

ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் உள்ள இக்குழிகள் தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நடுவது நன்று. பெண் பூக்கள் தோன்றிட 'எத்ரல்' எனும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 2.5 மில்லி எடுத்து, அதனை சுத்தமான தண்ணீரில் 10 லிட்டர் கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல் முறையும் பின் வாரம் ஒரு முறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம்.

உயர் விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, சாம்பல் சத்து 40 கிலோ இட வேண்டும். 30 நாள் கழித்து தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் மேலுரமாக இடவும். வண்டுகள் வந்தால் மீதைல் டெமடான் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். தாமிரம், கந்தகத்துாள்களை தெளிக்கக்கூடாது. மோனோக்ரோட்டாபஸ் பயன்படுத்தக் கூடாது.
- டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி. 98420 07125

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement