Advertisement

தென்னைக்கு காப்பீடு திட்டம்

தென்னை விவசாயிகள் காப்பீடு திட்டம் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் இழப்பீடு பெற முடியும்.
தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிர் பரப்பில் வரிசையாகவோ, வீட்டு தோட்டத்திலோ பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்தால், தென்னை மரக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம்.

குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4 ஆண்டு முதல் நெட்டை ரகங்கள் 2 - 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்யலாம். ஒரு எக்டேருக்கு 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியானவையாக எடுத்து கொள்ளப்படும்.

திட்டத்தில் இணையும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை வயது, பராமரிப்பு பற்றிய சுய உறுதி முன்மொழிவு அளிக்க வேண்டும். தென்னை விவசாயிகள்
அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தினை பெற்று காப்பீடு தொகையை வரைவோலையாக 'D.D. in favour of AIC of India Ltd Axis Bank A/C No. 006010200018027 payable at Chennai' என்று எடுத்து தென்னை சாகுபடி சிட்டா, அடங்கல் இணைத்து வேளாண்மைத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தாண்டில் எந்த தேதியில் காப்பீடு தொகை செலுத்தப்படுகிறதோ, அதற்கு அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து மார்ச் 31 வரை அதற்கான இழப்பீடு வழங்கப்படும்.
காப்பீட்டு தொகை மானியம் 50 சதவீதம் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும், 25 சதவீதம் விவசாயிகளும் செலுத்த வேண்டும்.

தென்னை மரத்தின் வயது 4 - 15 வரை உள்ள மரங்களுக்கு விவசாயிகள் மரம் ஒன்றுக்கு 2 ரூபாய் 25 காசும், 16 - 60 வயது வரை உள்ள மரங்களுக்கு 3 ரூபாய் 50 காசும் மரம் ஒன்றுக்கு பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்தினால் போதும். தென்னை பாதிப்புக்கு இழப்பீடு கோரும் விவசாயிகள் கோரிக்கை மனுவை பூர்த்தி செய்து பாதிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். காப்பீடு காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்.

நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு தொகை 4 - 15 வரை உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு 900 ரூபாய், 16 - 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு 1,750 ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.
இதில் 10 - 30 மரங்கள் காப்பீடு செய்யும் போது குறைந்த பட்சம் 2 மரமும், 31 - 100 மரங்கள் காப்பீடு செய்யும் போது குறைந்தபட்சம் 3 மரங்களும், 100 மரங்களுக்கு மேல் காப்பீடு செய்யும் போது குறைந்தபட்சம் 4 மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இழப்பீடு பெற தகுதியாக கருதப்படும்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலோ, காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் வேண்டுமென்றே பராமரிக்காமல் இருந்தாலோ இழப்பீடு கணக்கிடும் போது கண்டறியப்பட்டால் இழப்பீடு வழங்க இயலாது.

- த.விவேகானந்தன்
இணை இயக்குனர்
வேளாண்மைத்துறை, மதுரை

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement