Advertisement

பாடம்!

கண்ணாடியை கழற்றி, மின்வாரிய எழுத்தர் அறியாதவாறு, கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக் கொள்ள முயன்று, தோற்றார், கதிர்வேலு.
மின் வாரிய எழுத்தருக்கு வயது, 30 இருக்கும். பெயர்: பாஸ்கர். 'ஹார்மோன்' கோளாறோ என்னமோ, முன் தலை வழுக்கை. முகத்திலிருந்த மீசை, உதடுகளை ஒட்டி கீழே வளைந்திருந்தது.
கதிர்வேலை கூர்ந்து பார்த்தவன், ''என்னய்யா... அழுவுறீங்களா?'' என்று கேலியாக கேட்டான்.
''நீங்க கேக்குற, 10 ஆயிரம்ங்கிறது, எங்க வீட்டுக்கு, ஒரு மாச பட்ஜெட் தொகைய்யா... உங்களுக்கு, அதை கொடுத்தேன்னா, நானும், என் குடும்பமும், ஒரு மாசத்துக்கு, வயித்துல ஈரத் துணியை சுத்திட்டு இருக்கணும்,'' என்றார், கதிர்வேலு.
''அய்யா... உங்க நிலைமை புரியுது... நீங்க, குடும்பம்ன்னு சொன்னதால, அதே கோணத்திலேயே சொல்றேன்... உங்க வீட்டுக்கு, மளிகை சாமான் வாங்கி போட்டுட்டா, சோறும், கொழம்பும் ஆயிடுமா... அதை ஆக்க, 'காஸ்' மற்றும் சமையல் செய்ய ஒரு ஆளும் வேணும்ல?'' கிண்டலாக சொன்னான், பாஸ்கர்.
''வீட்டுல என் மனைவி, சமையல் பண்ணிடுவாங்கய்யா,'' என்றார், கதிர்வேலு.
''ப்ச்... கிண்டலா... நீங்க, மும்முனை மின் இணைப்புக்கு பணம் கட்டி ரசீது வாங்கிட்டதால், இணைப்பு கிடைச்சிடாதய்யா... மெயின் ரோட்லேர்ந்து உங்க வீடு இருக்குற இடம் வரைக்கும், 12 கம்பம் போட்டாதான், இணைப்பு தர முடியும். அதுக்கு தான் இந்த தொகை,'' என்றான்.
''எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே, வீடுங்க இருக்கு சார்... அதுலேர்ந்து, இணைப்பு கொடுக்கலாம்யா,'' என்று, பாஸ்கருக்கு ஒரு ஆலோசனையை அள்ளி விட்டார், கதிர்வேலு.
''புரியாத மாதிரி பேசாதீங்க, சார்... புதுசா ஒரு இணைப்பு கொடுக்கணும்னா, அதுக்குன்னு சில நடைமுறைகள் இருக்கு... அதைத்தான் பின்பற்ற முடியும்... நீங்க சொல்றா மாதிரி, பக்கத்து வீட்டில் இருந்தெல்லாம், இணைப்பு கொடுக்க முடியாது; கொடுக்கக் கூடாது. புரிஞ்சிக்குங்க,'' என்றான்.
''சரி சார்... 12 கம்பம் வரணும்... அவ்வளவுதானே? என் மச்சான், 'சால்ட் கோட்டர்ஸ்'ல, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வேலையை தான் பண்ணிட்டிருக்கான்... அவன்ட்ட நெறைய ஆளுங்க இருக்காங்க... சொன்னா, ஒரு மணி நேரத்துல எடுத்து வந்து இறக்கிடுவாங்க,'' என்றார்.
''நான், நடக்குற கதையை பேசிட்டிருக்கேன்... நீங்க, போகாத ஊருக்கு வழி காட்டிட்டு இருக்கீங்க... அப்படில்லாம் வெளி ஆளுங்கள வெச்சி துாக்கிட்டு வரக் கூடாது சார்... எங்க மின்வாரிய ஊழியர் தான் எடுத்துட்டு வந்து, குழி தோண்டி பொதச்சி, இணைப்பு கொடுக்கணும்,'' என்றான், பாஸ்கர்.
''அதுக்காக, நீங்க கேக்குற தொகை, ரொம்ப அதிகமா இருக்கே, சார்,'' என்றார், கதிர்வேலு.
''சார்... நீங்க, மெய்னா நெனச்சிக்குங்க, இல்ல பொய்னா நெனச்சிக்குங்க... நீங்க கொடுக்கப் போற, 10 ஆயிரம் ரூபாய்ல, மின்வாரிய இன்ஜினியரில் இருந்து, கோட்டை வரைக்கும் பங்கு பிரிச்சி கொடுத்தது போக, 500 - 1,000 ரூபாய் கிடைச்சாலே அதிகம்,'' என்றான்.
''என்னது... செங்கோட்டை வரைக்குமா பங்கு போகுது?'' என, அதிர்ந்தார் கதிர்வேலு.
''செங்கோட்டை இல்ல சார்... செயின்ட் ஜார்ஜ் கோட்டை,'' என்று, திருத்தினான் பாஸ்கர்.
கட்டியுள்ள வீட்டுக்கு, காசு கொடுக்காமல், மின் இணைப்பு கிடைக்காது என்பது, கதிர்வேலுவுக்கு தெளிவாக புரிந்தது. எங்கே, யாரிடம் கேட்பது என்று யோசித்தபடியே, வைப்பு தொகை கட்டியிருந்த, ரசீதுகளை மடித்து, பாக்கெட்டில் போட்டபடியே எழுந்தார்.
''அப்புறம், ஒரு முக்கியமான விஷயம்?'' என்றான், பாஸ்கர்.
என்ன என்பது போல, அவனை, ஏறிட்டு பார்த்தார், கதிர்வேலு.
''புத்திசாலித்தனமா செயல்படுறதா நெனச்சு, லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் சொல்லி, பவுடர் தடவின நோட்டுங்களை எடுத்திட்டு வந்திடப் போறீங்க...
''அப்படி வந்தீங்கன்னா, நான் மாட்டிகிட்டு, 'சஸ்பெண்ட்' ஆகி, ஒரே வாரத்துல, திரும்ப வந்து சேர்ந்திடுவேன்... ஆனா, அப்புறம் உங்களுக்கு, அவ்வளவு சுலபமா இணைப்பு கிடைச்சிடாது... பார்த்துக்கோங்க,'' என்றான், பாஸ்கர்.
திகைத்து, அதிர்ந்தார், கதிர்வேலு.
''அப்புறம், இன்னொரு விஷயம், 10 ஆயிரம் ரூபாய்க்கு, அஞ்சு, 2,000 ரூபாயும், 500 ரூபாய்ல, 20ம் எடுத்து வந்திடாதிங்க... 100 ரூபாய் நோட்டு, ஒரு கட்டு தயார் பண்ணி கொடுங்க...
''இது, பங்கு பிரிச்சி கொடுக்குற தொகை... சில்லரையா இருந்தா, சுலபமா பிரிச்சி கொடுத்துடுவேன். மொத்தமா கொடுத்து, மீதி கேட்டா, 'அடுத்த வேலையின் போது பார்த்துக்கலாம் போய்யா'ன்னு சொல்லிருவாங்க...
''அது மட்டுமில்லாம, நம், பிரதமர், எந்த நேரத்துல, 2,000 மற்றும் 500 ரூபா நோட்டு செல்லாதுன்னு சொல்வாரு என, தெரியாது... அதனால தான் முன்னெச்சரிக்கையா இருக்கோம்,'' என்றான், பாஸ்கர்.
''அப்புறம், வேற ஏதாவது நிபந்தனை இருக்கா?'' என்றார், கதிர்வேலு.
''இருக்கே... பணத்தை நேரா இங்க ஆபீசுக்கு எடுத்திட்டு வந்திடாதீங்க... அடையாறு, இந்திரா நகர்லேர்ந்து, ராஜிவ் சாலை போற வழியில, பக்கிங்ஹாம் கால்வாய் கடக்கும் பாலத்துக்கு பக்கத்துல, முனீஸ்வரன் கோவில் இருக்கு... சரியா, இரவு, 7:00 மணிக்கு, அங்க வந்து வாங்கிக்குறேன்,'' என்றான், பாஸ்கர்.
கதிர்வேலுவுக்கு வியர்த்தது. கை குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டார்.
''முடிஞ்சுதா... வேற ஏதாவது இருக்கா... நான் போலாமா,'' என்றார்.
''போய்ட்டு வாங்க... வர்றதுக்கு முன்ன, ஒரு போன் பண்ணிட்டு வாங்க... இந்தாங்க நெம்பர்,'' என்று, ஒரு துண்டு சீட்டில், அவனுடைய மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்தான், பாஸ்கர்.
துாரத்திலிருந்தே, கதிர்வேல் வருவதை கவனித்த, மச்சான் வளையாபதி, ஓடி வந்து, அவரை கட்டிப்பிடித்தான்.
''மாமா... மழை தான் பெய்யப் போவுது... என்ன இவ்வளவு துாரம்... ஒரு போன் போட்டிருந்தா, நானே வந்திருப்பேனே... கட்டிட்டிருக்குற வீடு எந்த நிலையில இருக்கு... கிரகபிரவேசம் எப்போ,'' என்று, ஒரே மூச்சில் அத்தனை கேள்விகளையும் கேட்டான்.
பிறகு, ''வாங்க, மாமா... உட்காருங்க,'' என்று, அவரின் ஆஸ்தான சிமென்ட் திண்ணையை காட்டினான்.
மின்வாரிய அலுவலகத்தில் நடந்தவைகளை விபரமாக கூறியதோடு, 10 ஆயிரம் பணத்திற்கும் அடி போட்டார், கதிர்வேலு.
''ஓய்வு பெற்று கிடைச்ச பணம் முழுசையும், வீடு முழுங்கிடிச்சு வளையாபதி... கையில சல்லிக் காசு கிடையாது... ஓய்வூதியத்தில தான் பொழப்பு ஓடிட்டிருக்கு... இதுல, மின் இணைப்புக்கு கையூட்டு வேற... என்ன பண்றதுன்னு புரியாம, உன்னை பார்க்க வந்தேன்,'' என்றார்.
வளையாபதியின் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.
அதில் ஒருவன், ''ஷாலிமாருக்கு, ஆறு வேகன் டயர்களை லோடு செய்ததில், 30 ஆயிரம் ரூபாய் இருக்குண்ணே,'' என்று கூறி, பணத்தை கொடுத்தான்.
''அண்ணே... அஞ்சு வேகன் லோடு, 'ஹார்லிகஸ், பூஸ்ட்' வந்திட்டிருக்காம்ணே... அதை, நொய்டா போற வேகன்ல ஏத்தணுமாம்... 'புக்கிங் கிளார்க்' உன்னாண்ட சொல்லச் சொன்னாரு,'' என்றான், வேறொருவன்.
''சரி, ஏத்திடலாம்... உங்கள்ல, யாருக்காவது அவசரமா, பணம் தேவை இருக்காடா... மாமா, ஒரு மேட்டரா வந்திருக்காரு... நாம தான் உதவி பண்ணணும்,'' என்றான், வளையாபதி.
''பண்ணிடலாம்ணே... வராத மாமா, வந்திருக்காரு... முதல்ல, அவரை கவனி... நம் தேவை, சரக்கும், 'சைடு டிஷ்'ஷும் தானே... பாத்துக்கலாம் வுடு,'' என்றான், பணத்தை கொடுத்தவன்.
''தேங்க்ஸ்பா... எல்லாருக்கும் டீ சொல்லிட்டு, 30 ஆயிரத்தை, மூணு கட்டா பிரிச்சிடுங்க... 100 ரூபா நோட்டு பத்தலைன்னா, 'புக்கிங் கிளார்க்' கிட்ட மாத்தி, மாமாட்ட கொடுங்க,'' பரபரப்பா உத்தரவுகளை பிறப்பித்தான், வளையாபதி.
''மாமா... 10 ஆயிரம் ரூபாய, மின்வாரிய எழுத்தருக்கு கொடுத்திட்டு, மீதியை, உங்க கிரகபிரவேச செலவுக்கு வெச்சிக்குங்க... அக்காவை கேட்டேன்னு சொல்லுங்க... நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்குறேன்,'' என்றான்.
டீ வந்து சேர, அனைவரும் பருகினர்.
கிரகபிரவேசம் முடிந்து, மொட்டை மாடியில், 'ஷாமியானா' நிழலில், சாப்பாட்டு பந்தி நடந்து கொண்டிருந்தது. இடது கையில், மாவு கட்டு, வலது கையில், 'வாக்கிங் ஸ்டிக்' உதவியுடன், மெல்ல படியேறி வந்து கொண்டிருந்தான், மின்வாரிய எழுத்தரான, பாஸ்கர்.
''வாங்க, தம்பி... வாங்க,'' என்று, பாஸ்கரை வரவேற்றார், கதிர்வேலு.
''மச்சான்... நம் வூட்டுக்கு, யார் வந்திருக்காங்கன்னு பாரு... 'மின் இணைப்பு கொடுக்க, மின் வாரிய அலுவலகத்துல உதவி பண்ணாரு...'ன்னு சொல்லி இருந்தேன்ல... இவர் தான், பாஸ்கர்,'' என்று, வளையாபதியிடம் அறிமுகப்படுத்தினார்.
''நாங்க யார் வீட்டு விசேஷத்துக்கும் போக மாட்டோம்... ஏதோ உண்மையை தெரிஞ்சிக்க வாங்க, வாங்கன்னு கூப்பிட்டதால வந்திருக்கேன்,'' என்றான், பாஸ்கர்.
''வாங்க, சொல்றேன்... முதல்ல சாப்பிடுங்க,'' என்று, இலை போட்டு, விருந்தை பரிமாறினான், வளையாபதி.
''சார்... சாப்பாடெல்லாம் வேணாம்... அந்த உண்மை என்னன்னு மட்டும் சொல்லுங்க... கேட்டுட்டு போய்ட்டே இருப்பேன்,'' என்றான், பாஸ்கர்.
''உண்மை தெரியணும்னா, சாப்பிட்டா தான் உண்மையை சொல்வோம்,'' என்றார், கதிர்வேலு.
சாப்பிட்டு முடித்து, கை கழுவி வந்த பாஸ்கரிடம், கூற ஆரம்பித்தான், வளையாபதி...
''இந்திரா நகர், பக்கிங்ஹாம் கால்வாய் பாலத்துக்கு பக்கத்துல இருக்குற, முனீஸ்வரன் கோவிலாண்ட வெச்சி, உங்களாண்ட, 100 ரூபா நோட்டு கட்டை கொடுத்தாரு, என் மாமா... அதுக்கப்புறம், என்ன நடந்ததுன்னு கொஞ்சம், 'ரீ வைண்ட்' பண்ணிப் பாருங்க...
''தம்பி, பாஸ்கர்... உங்களுக்கு, அரசாங்கத்துல சம்பளம் கொடுக்குறது, மக்களுக்கு சேவை செய்யறதுக்கு தான்... அதை செய்யறதுக்குன்னு, தனியா, சேவை கட்டணம் கேட்டா, என்னய்யா அர்த்தம்... லஞ்சம் கொடுங்கன்னு நீங்க கேட்டு வாங்குறீங்க... 40 வருஷமா, லஞ்சம் கேட்டாலும், கிடைக்காத துறையில் வேலை செஞ்சி, ஓய்வு பெற்றவருய்யா, என் மாமன்...
''அவரிடம், 'என்னை, லஞ்ச ஒழிப்பு துறையில, புடிச்சி குடுத்தா, ஒரே வாரத்துல, திரும்பி வந்து, வேலைக்கு சேர்ந்துடுவேன்...'னு, சொன்ன பாரு... அதுதான்யா, என்னை யோசிக்க வெச்சிது... மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, லஞ்சத்துல ஊறிக் கெடக்கறப்போ, உன்னை புடிச்சி கொடுத்து, என்ன ஆவப் போவுது... வழக்கு போட்டு தான், என்ன நடந்திட போவுது...
''அதான்... நாங்களே, உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணி, மாமன்ட்ட வாங்குன பணத்தோட, ஏற்கனவே வாங்கி வண்டியில பதுக்கி வெச்சிருந்த பணத்தையும் சேர்த்து, உன், 'ராயல் என்பீல்ட் பைக்'கையும் பக்கிங்ஹாம் கால்வாய்ல துாக்கி போட்டோம்...
''பணத்தை மட்டும் பறிச்சா போதாது... இனிமே, யார்ட்டயும் கை நீட்டி லஞ்சம் கேட்கக் கூடாதுன்னு, கையையும் உடைச்சு அனுப்பினோம்...
''உன்னால, போலீஸ்லயும் புகார் கொடுக்க முடியாது... கால்வாய்ல தள்ளுன பைக்கை வெளியே எடுத்து, அதை, பழுது பார்க்குற செலவுக்கு, புது பைக்கே வாங்கிடலாம்... லஞ்ச பணத்துல வாங்குன பைக்குதானே... போனாப் போவுது...
''இப்ப இருக்குற சூழ்நிலையில, கோர்ட்டு தண்டிக்கும், கடவுள் தண்டிப்பார்ன்னு எல்லாம், அமைதியா இருக்க முடியாது. இனிமே, ஒவ்வொருத்தரும் துணிஞ்சு, தைரியமா எறங்குனா, யாராவது உதவிக்கு வராமலா போயிருவாங்க... சரி, இப்ப சொல்லு தம்பி... இனிமே, லஞ்சம் வாங்குவே,'' என, கூறி முடித்தான், வளையாபதி.
தலையை குனிந்தவாறே, ''வாங்க மாட்டேன் சார்,'' என்றான், பாஸ்கர்.
''யார் அடிச்சாங்க, யார் பணத்தை எடுத்திட்டு போனாங்கங்கற உண்மையை தெரிஞ்சிக்கணும்ன்னு தான், உன்னை கட்டாயப்படுத்தி வரச் சொன்னோம்... இப்ப போலீஸ்ல புகார் கொடுத்தாலும், எங்களை ஒண்ணும் பண்ண முடியாது... பார்த்து பத்திரமா போய்ச் சேரு,'' என்றான், வளையாபதி.
தொங்கிய முகத்துடன், உண்மை தெரிந்தும், ஒன்றும் செய்ய முடியாத சோகத்தில், 'வாக்கிங் ஸ்டிக்' உதவியுடன், படிகளில் இறங்கினான், பாஸ்கர்.

எஸ்ஸாரெஸ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • susainathan -

    without money nothing story good but finish line not to reality we have experience

  • Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ

    Except the last four lines, all the statements are true not only in Chennai but also in Bengaluru, and all other cities. My house at Chakrapani Street, West Mambalam was encroached fifteen years ago, and the case is still going in the courts. I bought a land and built a two story house in the first block, second cross, Jayanagar, Bengaluru. I put five window air conditioners in the upstairs and three in the downstairs. I needed a three-phase connection for the air conditioners, though I had electricity in the house for all other purposes. I paid the required fees in the office for a three-phase connection. No houses had air conditions in the whole of Jayanagar except the Jayanagar shopping center which is about 3 miles from Ashok Pillar, nearer to my home. A person from the office came to my house and asked me Rs. 25,000, if I needed a connection immediately or else it will take months or even years. I took him to my lawyer's office, near Lalbagh West gate. He explained that I come from USA, I can afford to give this small amount to enjoy my summer time, and he had to work with more than 10 linemen to do this job for a distance 3 miles. I gave the money in the presence of my lawyer. The next day ten linemen started their work from Jayanagar shopping center to Ashoka Pillar and from there to my house by stopping electricity in the whole of Jayanagar for three hours. The linemen had to climb the post and tie the line one after another. They finished their job in three hours, all of my air conditioners worked very well, and they turned on the electricity for the whole of Jayanagar. The leader and the twelve line men did not demand but begged me to give them another Rs. 25,000, as they worked so hard for three hours for the pleasure of one family in the whole of Jayanagar. The leader was not only a Tamil speaking person from Vellore but also all the linemen too were speaking in Tamil. They begged me to give them another Rs 25,000. I was so happy to give them another Rs. 25,000 not because they were from my homeland, but they put their life on line for the pleasure of my family. I had to give them a bribe and a gift too.

    • Girija - Chennai,இந்தியா

      You should have avoided this page. Very selfish you are, you should have jailed those corrupts by using your NRI status. You are a covered and hard core self centered person. The very worst and so hurting line is, they stopped power for whole of Jayanagar for three hours for the sake of giving connection to your house and you paid extra bribe of another 25k OR whatsoever. Have you realized or thought about those residents,sick elders and baby infants? Please don't say you are a tamil and from chennai again, you dont have our humanitarian qualities. I am sorry to record this.

  • Rajesh - Chennai,இந்தியா

    படிக்க நல்லாத்தான் இருக்கு, ஆனால் வெளியில சொல்லாம செய்யுங்க [பழைய கால MGR படம் மாதிரி , ராமு இப்பவே போலீசுக்கு போறான்னு சொன்னா வெட்டுத்தான் விழும்]

  • Siva -

    True, have anybody got eb connection without lending money to officers? Never in history of modern india

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மோடிஜி சொல்கிறார் லஞ்சம் ஊழல் இல்லாத ‘ஸ்வச்ச பாரத்’ கொண்டுவருவோம் என்று இந்தக்கதையை மொழிமாற்றம் செய்து எல்லா அரசு, லஞ்ச அதிகாரிகள், அமைச்சர்கள் என அனுப்பி, ‘லஞ்ச ஒழிப்புத் துரைக்கெல்லாம் போகும் அசட்டுத்தனத்தை விட ‘உயர்ந்த’ தீர்வு’ என்ன என்று புரியவைக்கலாம்

  • Prasanna -

    Fantastic. . TN govt officials mainly cheat them bcoz they are well educated. If law is common to all, then why should we keep quiet.

  • Girija - Chennai,இந்தியா

    சூப்பர் கதை , கதையின் கரு நிஜமாகவே உண்மை, முடிவு சற்று நாடக பாணியில் இருந்தாலும் , அந்த லஞ்ச பிசாசின் கண்ணை பிடுங்கி குருடனாக அலைய விட்டிருக்கவேண்டும். எல்லோருக்கும் இப்படி தாங்கி பிடிக்க மச்சானுக்கு எங்கே போவார்கள்? அரசு வேலை பெற்றவர்கள் கடவுளால் ஆசீர்விதிக்க பெற்றவர்கள், பிறகும் கை நீட்டி பிச்சை எடுத்து உண்ணும் இழி பிறப்புகள். நானும் எவ்வளவோ போராடி பார்த்து கடைசியில் இருபத்திஐந்தாயிரம் கொடுத்து தான் இணைப்பை பெற்றேன். வேறு வழியில்லாமல், அவரை பாருங்கள் இவரை பாருங்கள் என்று மின்வாரிய ஆபீஸிலேயே சிலர் நல்லவர் போல் பேசுவார்கள் அனால் அவர்கள் நம்மை எடை போடுவதற்கு தான் அந்த வேலையை செய்கிறார்கள் இவங்க போலீசுக்கு போவார்களா என்று பார்ப்பதற்கு, எல்லாம் ஒரு குட்டையில் உள்ள மட்டைகள். இன்பத்தில் சரி இவர்கள் நல்லது சொல்கிறார்கள் என்று சில உதவாக்கரை ஈ ஈ, எஸ் ஈ என்று போய் பார்த்தால் நமக்கு கால நேரம் தான் தண்டம், காலை ஒன்பது மணி ஆபிசுக்கு ஒரு மணிக்கு வந்து நாலுமணிக்கு செல்லும் இவனுங்களுக்கு குட்மார்னிங் போடுவதைவிட பணத்தை விட்டெறிந்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

    • Rajaram Kandalu - Madurai,இந்தியா

      உண்மை. சாமான்யர் எவராவது லஞ்சம் கொடுக்காமல் மின் இணைப்பு பெற முடிந்ததுண்டா இனியும் முடியுமா?

    • Girija - Chennai,இந்தியா

      லஞ்சம் தராமல் முடியவே முடியாது, போஸ்ட் இல்லை . கேபிள் ஸ்டாக் இல்லை, டிரான்ஸ்போர்மர் கேபாஸிட்டி குறைவு, ரோடை கட்பண்ணி கேபிள் இழுக்க வேண்டும், கார்ப்பரேஷன் அனுமதி வேண்டும் என்று விதவிதமான காரணங்களை அலகு தமிழில் பச்சை இங்கில் எழுதுவான்கள் இந்த வளையாபதிகள். சொல்ல மறந்துவிட்டேன் நாம் கேபிளுக்கு சேர்த்து தான் பணம் கட்டுவோம் ஆனால் இவர்கள் அரசு கொடுக்கும் கேபிள் ஐ அப்படியே அமுக்கிவிடுவார்கள். கேபிளுக்கு என்று தனியாக வேறு தண்டம் அழவேண்டும். அப்படியே மீறி இவர்களை ல\நிஜம் கொடுக்காமல் மிரட்டி பணியவைத்தால் உங்கள் வீட்டு இணைப்பு மட்டும் அடிக்கடி கட் ஆகி வரும் , லோ வோல்டேஜ் ஹை வோல்டேஜ் என்று பழி வாங்குவர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement