Advertisement

மண்ணின்றி மாடித்தோட்ட விவசாயம்

நமக்கு நாமே என்றபடி நம்முடைய உணவை நாமே தயாரித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதன் ஒரு படிதான் மாடித்தோட்டம். இதில் நமக்கு மட்டுமன்றி, நம்மை சுற்றியுள்ளோருக்கும் காய்கறிகளை விளைவித்து வழங்கலாம்.
எதிர்காலத்தில் மாடித்தோட்டம் இல்லாத வீடே இருக்காது என்கிறார், திண்டுக்கல் நாகல்நகர் குடும்பதலைவி ஆர். எழில்ஓவியா.
கீரை வகைகள் சாகுபடி
அவர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டாக மாடித்தோட்ட விவசாயம் செய்கிறேன். ஆரம்பத்தில் வீட்டில் வீணாகும் பிளாஸ்டிக் குடங்கள், தண்ணீர் கேன்கள், சாக்குகள் மூலம் பயிரிட்டு வந்தேன். வெயிலால் சீக்கிரமே வெடித்து விடுவதாலும், அதிக வெப்பத்தாலும் செடிகள் கருகியது.
இதில் இருந்து நிரந்தர தீர்வுபெற தற்போது தார்பாயிலான 'குரோபேக்' மூலம் மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்கிறேன்.
தென்னைநார் கழிவு, மண்புழு உரம், சாணம், அசோஸ் பைரில்லம் ஆகியவை இதற்கு போதும். மண்கூட தேவையில்லை. கத்தரி, கொத்தவரை, முருங்கை, பாகற்காய், செடி அவரை, வெங்காயம், பீட்ரூட், வல்லாரை, தண்டுக்கீரை, சிறுகீரை, செங்கீரை, பசலைக்கீரை, புளிச்ச கீரை உள்ளிட்ட கீரை வகைகளும், துாதுவளை, பிரண்டை, முடக்கத்தான் உள்ளிட்ட மூலிகை வகைகளும் பயிரிட்டுள்ளேன். பல வகை பயிர் செய்வதால், வீட்டுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் கிடைத்து விடுகிறது. 10 முதல் 15 குரோ பேக் வைத்தால் போதும். மகரந்த சேர்க்கைக்காக மல்லி, செம்பருத்தி உள்ளிட்ட பூச்செடிகளையும் வைக்க வேண்டும்.

இயற்கை பூச்சிக்கொல்லி
கத்தரியை பொறுத்தவரை குழித்தட்டு முறையில் நாற்று வளர்த்து 40 நாளில் குரோ பேக்கில் வைக்க வேண்டும். 70 நாளில் காய்ப்பு தொடங்கும்.
ஆறு மாதம் வரை காய்க்கும். 10 நாளைக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய், காதி சோப்பை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி., என்ற அளவில் 10 செடிக்கு கலந்து தெளிக்கலாம். இது சிறந்த பூச்சிக் கொல்லி.
பஞ்சகவ்யம் வாரத்துக்கு ஒரு முறை இட வேண்டும். கடலை புண்ணாக்கு கரைசல் 10 முதல் 15 நாளைக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும். சுழற்சி முறையில் இவற்றை செடிக்கு இட வேண்டும். செடிக்கு ஊடு பயிராக கீரை விதைய துாவலாம். 15 முதல் 30 நாளில் வீட்டுக்கு தேவையான கீரை கிடைக்கும்.
குரோபேக், தென்னை நார் கேக், மண்புழு உரம் ஆகியவற்றையும் வழங்கி வருகிறேன். குரோ பேக் ரூ.25-லிருந்து 225 ரூபாய் வரை உள்ளது. 10 குரோ பேக், தென்னை நார் கேக், மண்புழு உரம் அடங்கிய செட் ரூ.1,500. இது போக காய்கறி நாற்றுகள், நிழல் வலை, நாட்டு விதைகள், உயர்ரக பூ விதையும் வழங்கி வருகிறேன்.
தென்னை நார் கழிவானது ஈரத்தை தக்க வைத்து செடியை வாட விடாமல் பாதுகாக்கிறது. வேரையும் பிடிமானமாக வைத்துக் கொள்ளும். என் வீட்டின் மாடி மட்டுமன்றி, என்னுடைய சகோதரர் அன்புச்செல்வனின் அரிசி கடை மாடியிலும் தோட்டம் வைத்துள்ளேன்.
இதனை வருமானமாக பார்க்காமல் வாழ்க்கைக்கான அவசியமாக பார்க்க வேண்டும்.
காந்திகிராம வேளாண் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர், என்றார்.
ஆலோசனைக்கு 94433 58150ல் தொடர்பு கொள்ளலாம்.
- த.செந்தில்குமார், திண்டுக்கல்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement