Advertisement

வீணையடி நீ எனக்கு!

Share

திருவிடைமருதுார் வந்து இறங்கியதும், ராகினியின் மனசு, பட்டாம் பூச்சியாய் சிறகடித்தது.
குழந்தையை கையில் இறுக்கி, அலைபேசியை எடுத்து எண்களை தேடுவதற்குள், தோளில் கை விழுந்தது.
அம்மு தான்... இருவர் முகத்திலும் பரஸ்பர புன்னைகை விரிந்து விஸ்தீரணமானது.
''எத்தனை நாளாச்சுடி உன்னைப் பார்த்து... ஏய் குட்டி... அப்படியே உன்னோட, நகல் மாதிரி இருக்கா,'' குழந்தையை அவள் துாக்கிக் கொள்ள, இருவரும் நடந்தனர்.
''சொல்லு ராகினி... எப்படி இருக்கே... வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க?'' அம்மு கேட்டாள். அவளுக்கு பதில் சொல்ல வாய் திறக்கும் முன், ராகினியின் அலைபேசி விசும்பியது.
ஊர் போய் சேர்ந்தாளா என்று விசாரிக்க அழைத்தான், அவளது கணவன். பேசி முடித்தவள், தோழியின் புறமாய் திரும்பினான்.
''ம்... என்ன அதுக்குள்ள உன்னவர்ட்டருந்து விசாரிப்பு வந்திருச்சா?'' சொல்லி குறும்பாய் பார்க்க, இருவரும் சிரித்தனர்.
பழைய நாட்களுக்கு பயணப்பட்டது, மனசு.

கும்பகோணம் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, இருவரும் உயிர்த்தோழிகள். ராகினியின் அப்பா, கும்பகோணம் பதிவுத்துறை அலுவலகத்தில் வேலை செய்தார். திருவிடைமருதுாரில் இருந்து கும்பகோணத்திற்கு படிக்க வருவாள், அம்மு.
தினமும், ரயிலில், கல்லுாரிக்கு வரும் அம்முவும், நண்பர்களும், 15 நிமிஷ பயணத்தில் அடிக்கும் கூத்தை, கதை கதையாய் சொல்வர்.
'சே... நான் ஏந்தான் கும்பகோணத்திலே இருந்து தொலைச்சேனோ... நீ ரயில் கதையை சொல்லச் சொல்ல, எனக்கும் அது போல பயணித்து, கல்லுாரிக்கு வர மனசு ஏங்குது...' சிணுங்குவாள், ராகினி.
அவரவருக்கான சந்தோஷங்களையும், அழகியலையும், கனவையும், நீரூற்றி வளர்த்தது, கல்லுாரி.

கிருஷ்ணப்பன் தெருவில் இருந்தது, அம்முவின் வீடு. பெட்டிகளை வைத்து விட்டு, சுகமாய், கிணற்று தண்ணீரில் குளியல் போட்டு வந்தாள், ராகினி. அதற்குள், குழந்தை, மகி துாங்கி இருந்தாள்.
டிகிரி காபியை உறிஞ்சியபடி, ''அம்மு... நீ நிஜத்திலேயே அதிர்ஷ்டசாலி தான்,'' என்றாள்.
''எப்படியாம்!''
''நீ பிறந்து வளர்ந்தது, இதே ஊர் தான். அம்மா வீடு ரெண்டு தெரு தள்ளி. எந்த மெனக்கெடலும் இல்லாத வாழ்க்கை. என்னை பாரு, நாமக்கல்ல பிறந்தேன். கிருஷ்ணகிரியில பாதி படிப்பு. பிறகு, பள்ளி படிப்பும், கல்லுாரி படிப்பும் கும்பகோணத்துல.
''இப்போ கல்யாணத்துக்கு பிறகு, சென்னையில வாசம். ஒரு ஊரும், சூழலும் மனசுல ஒட்டுறதுக்குள்ள இன்னொரு ஊருக்கு போயிட வேண்டி இருக்கு... இன்னும் எத்தனை ஊர் வாழ்க்கையில மிச்சமிருக்கோ!''
அவள் சொல்வதைக் கேட்டு, கலகலவென சிரித்தாள், அம்மு.
''இக்கரைக்கு அக்கரை பச்சை, ராகினி. இப்போ, உன் அப்பா - அம்மா, சென்னையில, அண்ணன் வீட்டுல தானே இருக்காங்க?''
''ம்... சென்னை தான். ஆனா, ரொம்ப துாரம்!''
''துாரமா... என்ன, நம் கும்பகோணத்துக்கும், திருவிடைமருதுாருக்கும் இடையில உள்ள துாரம் இருக்குமா?''
''சொல்லத் தெரியல... துாரம், அவ்வளவு தான்!''
இருவரும் சிரித்தனர். அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டு, மகி கண் விழித்து சிணுங்கி, புரண்டு படுத்தாள்.
''ராகினி, குழந்தை பேரென்ன?''
''மகி...''
''அதென்ன மகி?'' என்றாள், அர்த்த பார்வையுடன்.
''மகின்னா மகி தான்... மகிமா!''
தலையை நிமிர்த்தாமலே, ஜடையை முன்பக்கமாய் போட்டு பின்னியபடியே சொல்லி முடிக்கும்போது, சின்ன பெருமூச்சு வந்தது, ராகினிக்கு.
அதற்குள், அம்முவுடைய கணவனும், குழந்தைகளும் வந்திருந்தனர். அம்முவின் கணவன், மொத்த விலை கடையில், கணக்கு வேலையில் இருந்தான். ஆறு வயசில் ஒரு பையனும், நான்கு வயசில் ஒரு பொண்ணும் இருந்தனர்.

இருவரும், மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றனர். திருவிடைமருதுாருக்கு எப்போது வந்தாலும், அந்த கோவிலுக்கு செல்வாள், ராகினி.
''ஏன் ராகினி... ரொம்ப த்ரிலிங்கா இருக்குல்ல... எப்பவும் நீயும், நானும் மட்டும் தான் தொடர்புல இருப்போம்... மத்த நண்பர்கள் யாருடைய தொடர்பும் இல்ல... சொல்லப் போனா, அவங்களை எல்லாம் மறுபடியும் பார்ப்போமாங்கிற நம்பிக்கை இல்லாம இருந்தேன்,'' நெகிழ்வாய் சொன்னாள், அம்மு.
''ம்... 'தேங்ஸ் டூ, சோஷியல் மீடியா...' அதுல வந்த, 10 ஆண்டு சவாலில், நம் புகைப்படங்களை பார்த்துட்டு, நண்பர்கள் ஒவ்வொருத்தரா தொடர்புக்கு வர, நம், 'நெட்வொர்க்' விரிவாகி, பழைய நட்புகளை உள்ளங்கையில் எடுத்து வந்து சேர்த்தது. அந்த அனுபவத்தை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு.''
''ம்... நாளைக்கு நமக்கெல்லாம், சிறப்பு ஞாயிறு! நாம படிச்ச கல்லுாரியில, சந்திக்க போறோம்... கல்லுாரி முதல்வரிடம், சிறப்பு அனுமதி வாங்கியாச்சு... மாணவர்கள் மட்டுமில்ல, அப்போ நமக்கு கற்று கொடுத்த ஒரு சில பேராசிரியர்களும் கலந்துக்கறாங்க. இந்த நிகழ்ச்சிய நினைச்சாலே சந்தோஷமா இருக்கு, ராகினி!''
இருவரும் பேசியபடியே தரிசனத்தை முடித்து, வீடு வந்து சேர்ந்தனர். இரவுக்குள், இன்னும் சில தோழியரும், அம்முவின் வீட்டிற்கு வர, மொட்டை மாடியில் அரட்டை கச்சேரி, களை கட்டியது.
அம்முவின் கணவன், எந்த தொந்தரவும் செய்யாமல், கூடத்தில் குழந்தைகளோடு படுத்துக் கொண்டான்.

விடிந்ததும், குளித்து முடித்து, அடர்நீல நிறத்தில், தங்க நிற பார்டர் போட்ட சில்க் காட்டன் உடுத்தி, கண்ணாடியில் பார்த்தாள், ராகினி. கல்லுாரி பிரியாவிடை நிகழ்ச்சியில் பார்த்தது போல், எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாள். 10 ஆண்டு ஓடி விட்டது. கொஞ்சம் கர்வமாக இருந்தது.
'என்னை பார்த்தால், என்ன தோன்றும் மற்றவர்களுக்கு... அமுதன், முகிலன், அப்புறம் மகேந்திரனுக்கு...' மனசு மட்டும் அந்தப் பெயரை உச்சரிக்கும்போதே இனித்தது. கண்களுக்குள், ஈஸ்ட்மென் படம் விரிந்தது.
அது, 2008ம் ஆண்டு-
'கல்லுாரி பிரியாவிடை நிகழ்ச்சி அன்று, யாரடி நீ மோகினி இல்ல, குருவி படம் போகலாம், ஓ.கே.,வா?'
'நோ நோ... தமிழ் படமே வேணாம்... பூத்நாத் இந்தி படம் போலாம்பா, ப்ளீஸ்... ரொம்ப ஜாலியா இருக்காம்... அதுல ஒரு குட்டி பையன் செமையா நடிச்சிருக்கானாம்...'
கருநாக ஜடையை முன்னால் போட்டு பின்னியபடியே, ராகினி சொல்ல, மற்றவர்கள் ஆட்சேபித்தனர்.
'அது சரி... இங்கே, யாருக்கு இந்தி தெரியும்... எதுக்கு ராகினி, பெருமைக்கு எருமை ஓட்டச் சொல்ற...' என, நண்பர்கள் போட்டு தாளித்தனர்.
'மூச்... யார்டா அது, ராகினியோட கருத்துக்கு, எதிர் கருத்து சொல்றது... அவள் சொன்னால் அவ்வளவு தான்...' தலையை ஒருக்களித்து சாய்த்தபடி, முன்னால் வந்து கூறிய மகேந்திரன், வாலி அஜித் சாயலை நினைவுபடுத்தினான். பணக்கார வீட்டுப்பிள்ளை; இவர்களுக்கு
இரண்டாண்டு, 'சீனியர்!'
வெட்கமாய் சிரித்தாள், ராகினி. அவளுடைய விருப்பம் ஒரு மனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 80க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒருசேர, படம் பார்த்த அனுபவம், சிலிர்க்க வைத்தது.
கல்லுாரி ஆண்டு விழாவில் அவன், 'வீணையடி நீ எனக்கு...' என்று பாட, 'உன்னை நினைச்சு தான் பாடுறான் டீ...' என்று கற்பனை விதைத்தது, நண்பர் பட்டாளம்.
ஏதேச்சையாக ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தாலும், அவர்களுக்கு மணப்பொருத்தம் இருப்பதாய் சொல்லி சிலாகித்தனர். கள்ளப் பார்வை, ரகசிய ரசிப்பு என்று ஓடிய கல்லுாரி கனவுகள்... அவர்களுடைய காதலை அறிவித்துக் கொள்ள மட்டும், ஏதோ தடையாய் இருந்தது.
மகேந்திரனின் குடும்பம், ஐதராபாத்தில் இருந்தது. கல்லுாரி முடித்த கையோடு, குடும்ப பிரச்னை என்று, அவன் புறப்பட்டுப் போக, அதன்பின், அவனை காணும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
அலைபேசி எண்ணையும் மாற்றி இருந்தான். ராகினிக்குள் அலை அலையாய் குழப்பம்.
'உன்னை காதலிக்கிறேன்...' என்று ஒற்றை வார்த்தை சொல்லி இருந்தாலாவது, அவனை தேடி ஓடலாம்... அவன் சிரிப்பையும், பேச்சையும், தான் தான் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்டோமோ என்று தவித்தாள்; மறக்க இயலவில்லை, மகேந்திரனை.
சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு சென்று, மணிக்கணக்காய் வெறித்தபடி அமர்ந்து, காதலா, காதலில்லையா என்பதை அறியக்கூட இயலாதவளாய் கழிவிரக்கத்தில் தவித்தாள்.
அந்த சமயத்தில், சென்னையில் இருந்து நல்ல வரன் வந்தது. மறுத்தாள்; வீட்டில் காரணம் கேட்ட போது, பதில் தெரியாமல் விழித்தாள்.
'அம்மாடி ராகினி... நீ ஒரே பொண்ணா இருந்தா, இந்த பிடிவாதத்தை உன் கூட சேர்ந்து, நானும் ரசிப்பேன். உனக்கு பின்னாடி தங்கையும், உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை முடிச்ச பிறகு, கல்யாணம் பண்ணிக்க, அண்ணனும் காத்திருக்காங்க... காரணம் இல்லாம எதையும் தள்ளிப்போடற சூழ்நிலையில நாம இல்ல...' என, அம்மா கூறினாள்.
அதற்குமேல் மறுக்க இயலவில்லை. ரொம்ப நல்ல மாதிரியாய் இருந்தான், மாப்பிள்ளை. குறையொன்றும் இல்லை. ஆனாலும், அவனை ஏற்று, வாழ, சில ஆண்டுகள் பிடித்தது. திருமணமாகி எட்டு ஆண்டுகளாகிறது. மகிக்கு, மூன்று வயசு.
எல்லாம் இருந்தும், மனசுக்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இன்று, நண்பர்கள் எல்லாம் சந்திப்பது மகிழ்ச்சி என்றால், மகேந்திரனை சந்திக்கப் போவது, பெரும் ஆனந்தம்.
''ஹேய்!'' ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து விளையாட, அவர்கள் குழந்தைகளும், மனைவியர்களும் வேடிக்கை பார்த்தனர்.
ஒரு சில பெண்களைத் தவிர, மற்றவர்கள், கணவரை தவிர்த்து, குழந்தையை மட்டும் அழைத்து வந்திருந்தனர். கணவனை உடன் வரும்படி அழைத்தாள், ராகினி.
'வேணாம், ராகினி... நீ போயிட்டு வா... ஏன் தெரியுமா... என்ன தான், கணவன் - மனைவியா இருந்தாலும், அவங்கவுங்க தனிப்பட்ட சில ஆனந்தங்கள்ல ஒதுங்கி நிற்கிறது தான், பரஸ்பரம்; நம்முடைய துணைக்கு தர்ற மரியாதை.
'அங்கேயும் வந்து, உன் கவனம் முழுக்க, என் மேல இருக்கணும்ன்னு, தொந்தரவு பண்ணிட்டு... நீ உன், நண்பர்கள் கூட பேசறதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுட்டு... வேணாம், ராகினி, நீ போய், சந்தோஷமாய் இருந்துட்டு வா செல்லம்...' என்றான்.
'ஏய், நீ அப்படியே இருக்க; நீ ரொம்ப, 'வெயிட்' போட்டுட்ட; என்ன அதுக்குள்ள கிழவியாகிட்ட; இன்னும் சாப்பாட்டிற்கு பிறகு, 'தம்' அடிக்கிற பழக்கத்தை விடலயா...' பரஸ்பரம் கேட்கவும், விசாரிக்கவும், ஆயிரம் விஷயங்கள்.
'எந்த ஊரில், எந்த நாட்டில், எங்கு காண்போமோ... எந்த அழகை, எந்த விழிகளில் கொண்டு செல்வோமோ...' பாடினர்; பரவசப்பட்டனர்.
நிறைய சிவந்து, 'பீர்' தொப்பையில், குடும்பத்துடன் வந்திருந்தான், மகேந்திரன். மும்பையில் இருப்பதாய் சொன்னான். அவன் மனைவி, ஒடிசலாய் மாடல் போல் இருந்தாள். ஐந்து வயசில் மகனிருந்தான்.
''எப்படி இருக்கே, ராகினி?''
''நல்லா இருக்கேன். காலேஜ் முடிச்ச கையோடு யார்கிட்டயும் சொல்லாம போயிட்டீங்க... அதுக்கு பிறகு எந்த தொடர்பும் இல்ல,'' என சொல்லி, அவன் கண்களையே படபடப்புடன் உற்றுப் பார்த்தாள்.
''ம்... குடும்ப பிரச்னை... தொழிலை உடனே எடுத்து நடத்த வேண்டிய நிர்பந்தம்... யார்கிட்டயும் சொல்லிக்க முடியல,'' பெருசாய் பாதிப்பில்லாதவன் போல் சொன்னான்.
பொசுகென்று போனது, ராகினிக்கு.
''பை த பை, இது, என் மனைவி... இது, பையன், ராகவ்... செல்லமாய் ராகி,'' அவன் சொல்ல, சுரீரென நிமிர்ந்து பார்த்தாள்.
இவள் பார்வையை தவிர்த்து, மகனின் தலையை வாஞ்சையாக வருடியபடி நின்றான். அதற்குள் இன்னொரு நண்பர்கள் குழு வந்து, அவனை அழைத்து சென்றது.
இவளைப் பார்த்து சினேகமாய் சிரித்தாள், மகேந்திரனின் மனைவி.
''நீங்க எல்லாரும், சென்னைக்கு ஒரு தரம் வந்து போகலாமே,'' என்றாள், ராகினி.
''சென்னைக்கா... மும்பையில இருக்கிற, அம்மா வீட்டுக்கே என்னை விட மாட்டாரு... அத்தனை ஆணாதிக்கம்... இங்கே வந்து, உங்க எல்லாரையும் பார்க்கும்போது, மனசுக்குள்ள ஆதங்கமா இருக்கு... உங்களுக்கான சுதந்திரம் அழகா இருக்கு,'' கடைவிழியின் கண்ணீரை, ஒற்றை விரலில் நாசூக்காக துடைத்துக் கொண்டாள்.
முகம் தெரியாத ஒருத்தியிடமே இவ்வளவு சொல்கிறாள் என்றால், இன்னும் பகிர்ந்து கொள்ள, பல ரணங்கள் உள்ளிருப்பது புரிந்தது.
''நான் வேணா மகேந்திரன்கிட்ட பேசட்டுமா?'' என்றாள்.
''ஐயய்யோ வேற வினையே வேணாம்... உங்க முன்னாடி நல்லதனம் காட்டிட்டு, வீட்டுக்கு வந்து அதகளம் பண்ணிடுவார்... விடுங்க, என் விதிப்படி ஆகட்டும்.''
வலியாய் சிரித்து, மகனை அழைத்து நகர்ந்தாள். இத்தனை ஆண்டுகளாய், இத்தனை நிமிஷமாய் தொண்டைக்கும், நெஞ்சுக்கும் நடுவில் உறுத்திய பெயர் தெரியாத உணர்வு, உருண்டு கீழிறங்கி மறைந்தது.
ஒரு நண்பனாய், தன் கணவன் காட்டிய பொறுமை... பல ஆண்டுகள், இவள் மனசுக்குள் என்ன தான் இருக்கிறது என்றே அறிந்துகொள்ள விரும்பாமல் காத்திருந்த கண்ணியம், உணர்வுக்கு தரும் மரியாதை... சுதந்திரத்தில் தலையிடாத பண்பு, கணப்பொழுதில் கண்முன் வந்து போனது.
சிரிப்பும், களிப்பும் சந்தோஷமுமாய் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர். அடுத்த ஆண்டு, இதே நாளில் சந்திப்பதாக, உறுதி சொல்லியபடி பிரிந்தனர்.
''இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போயேன் ராகினி,'' ஆதங்கமாக சொன்னாள், அம்மு.
''இல்ல அம்மு... கிளம்பறேன்... அவரை அழைச்சுட்டு இன்னொரு நாள் வர்றேன். நீயும் உன்னவர், குழந்தைகளோட சென்னைக்கு வரணும். ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்கு. வாயேன், மகாலிங்க சுவாமி கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்.''
ஒற்றை புருவம் உயர்த்தி, ''என்ன திடீர்ன்னு?'' என்றாள், அம்மு.
''நன்றி சொல்லணும்... நான் விரும்பினதை கேட்டேன். ஆனா, அவர், எனக்கு சிறந்ததை தந்திருக்கார். அதுக்கு தான்!'' என்ற தோழியை, அர்த்தபுஷ்டியுடன் பார்த்தாள், அம்மு.
''மகிமா, வா கோவிலுக்கு கிளம்பலாம்!'' குழந்தையை அள்ளி தோளில் போட்டுக் கொண்டாள்.
''மகி, எப்போ மகிமா ஆனாள்?'' அம்மு, கண்ணடித்து கேட்க...
''அவள் எப்பவும் மகிமா தான். நான் தான் அப்படி கூப்பிடற ஆனந்தத்தை, உணர தவறிட்டேனோன்னு தோணிச்சு... இனிமேல், அவள் எப்போதும் மகிமா தான்!'' என்று சொல்லி, புன்னகைத்தாள், ராகினி.
தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகை ஒன்று, காற்றுக்கு குலுங்கி, இவள் கால்களுக்கடியில் தஞ்சமாகி, வாசம் வீசியது.

எஸ். பர்வீன்பானு

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement