Advertisement

நெருப்பாற்றை நீந்திய திருநங்கை!

திருநங்கையாக இருப்பவர்கள், தற்போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான, பத்மினி பிரகாஷ், கோவையில் உள்ள தனியார், 'டிவி' ஒன்றில், செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். நாட்டிலேயே, ஒரு திருநங்கை, செய்தி வாசிப்பாளராக இருப்பது, இது தான் முதல்முறை.
சமீபத்தில், இவரை பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதத்தில், 'சென்னை விஸ்வ ஸ்ம்வாத் கேந்திரம்' என்ற அமைப்பானது, 'நாரதர் விருது' வழங்கி கவுரவித்தது.
அழகான தமிழ் உச்சரிப்பாலும், நாரதர் பற்றிய அரிய தகவல்களை தந்ததாலும், அரங்கத்தில் உள்ளோரின் கவனத்தை ஈர்த்து, கைதட்டலை பெற்றார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, திருநங்கையர் சந்திக்கும், வழக்கமான கேலி, அவமானங்களுக்கு உள்ளானவர் தான். ஆனால், அப்படிப்பட்ட சம்பவங்களை கண்டு, பயந்து முடங்காமல், ஓடி ஒளியாமல், கேலி செய்தவர்களே, உயர்வாக பேசும்படி செய்வதையே, லட்சியமாகக் கொண்டார்.
எந்த மாறுபட்ட சிந்தனைக்கும் இடம் கொடுக்காது, முன்னேற்றம் ஒன்றையே சிந்தனையில் கொண்டார். தமிழ் மீது இருந்த பற்றால், முதுகலை படிப்பை முடித்துள்ளார்; இப்போது, இதில் முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர், பரதநாட்டிய கலைஞர்; வீணையும் வாசிப்பார். இப்படி பன்முகத்திறமை கொண்டதோடு, இதற்கெல்லாம் உச்சமாக, தற்போது செய்தி வாசிப்பாளராக உள்ளார்.
'அமுதசுரபி திருநங்கை புனர்வாழ்வு மையம்' என்ற அமைப்பின் மூலம், திருநங்கையரின் மேம்பாட்டுக்கு உதவி வருகிறார்.
திருநங்கையாக இருப்போர், குடும்பம் நடத்தலாம் என்பதற்கு ஏற்ப, பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து, குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
எப்போதும் சிரித்த முகத்துடன், வணங்கத்தக்க தோற்றத்துடன் உள்ளவர், திருநங்கை, பத்மினி. இவரது இன்றைய சந்தோஷத்திற்கு பின், கடுமையான உழைப்பும், வலியும், வேதனையும் நிறையவே இருக்கிறது.
பத்மினி கூறுகையில், 'நான் கடந்து வந்த பாதை, கரடு முரடானது; முட்கள் நிரம்பியது; பல்வேறு அனுபவங்களையும் கொண்டது. அத்தனையையும், 'நெருப்பாற்றை நீந்தி வந்தேன்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி, ஜூன் 2ல், கோவையில் வெளியிட்டுள்ளேன்.
'இந்த புத்தகம், திருநங்கையருக்கு ஒரு பாடமாக இருக்கும்; பொதுமக்களுக்கும், திருநங்கையர் பற்றிய பார்வையை மாற்றி அமைக்கும்.
'எல்லாரையும் போல, சாரசரி வாழ்க்கை வாழ்ந்து போக விரும்பவில்லை; வாழ்ந்ததற்கான நல்ல அடையாளத்தை, இந்த பூமியில் விட்டுச் செல்ல விரும்புகிறேன். உங்கள் வாழ்த்து, என்னை வழி நடத்தட்டும்... நன்றி!' என்கிறார்.
- எல். முருகராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • N S Sankaran - Chennai,இந்தியா

    தமிழை காப்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு அதை எப்படியெல்லாமோ கொல்பவர்கள் மத்தியில் ஒரு நல்ல தமிழ் செய்தி வாசிப்பாளர். வாழ்த்துக்கள்.

  • skv - Bangalore,இந்தியா

    மனம் நிறைந்த பாராட்டுக்கள் சகோதரி வாழ்க பல்லாண்டு நான் எப்போதும் உங்கள் இனம்கண்டு உங்களை இழிவாக பேசுவோரெல்லாம் மடையர்கள் என்றும் சொல்லுவேன் , பாலினம் குறைபாட்டுடன் பிறந்ததால் நீங்கள் மனிதப்பிறவியே இல்லேன்னு ஆயுடுமா என்ன உங்களையும் மிஸ்யூஸ் செய்யும் பல ஆண்கள் இருக்காங்களே அவங்கள் தான் கயவர்கள் தீயமனம் கொண்டவர்கள் என்பேன் வாலா பல்லாண்டு என்ரும்மீண்டும் வாழ்த்துகிறேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement