Advertisement

திண்ணை!

முனைவர், செ. செல்வராஜ் எழுதிய, 'காமராஜர் நினைவலைகள்' நுாலிலிருந்து: முதல்வர், காமராஜரின் அலுவலகத்திற்கே தேடி வந்தார், ஒருவர். ஏழ்மையை பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை. அவரை அழைத்து, அருகில் அமர வைத்த, காமராஜர், 'என்ன ரெட்டியாரே... ஏதாவது, முக்கிய சேதியா, இல்ல, சும்மா பார்க்க வந்தீரா...' என்று கேட்டார்.
வந்தவருக்கு தயக்கம்.
'பரவாயில்ல சொல்லுங்க, ரெட்டியார்...' என்று, மீண்டும் கேட்டார், காமராஜர்.
'ஒண்ணுமில்ல... என் மகனுக்கு கல்யாணம்... அதான்...'
'இதுக்கு ஏன், ரெட்டியாரே தயங்கணும். நல்ல விசேஷம் தானே...' என்று தட்டிக்கொடுத்து, பாராட்டி, 'நான், என்ன பண்ணணும்...' என்றார், காமராஜர்.
'இல்ல... கல்யாணத்துக்கு, நீங்க தான் தலைமை தாங்கணும்... ஊரெல்லாம் சொல்லிட்டேன்; பத்திரிகை கொடுக்க, நேர்ல வந்தேன்...' என்று தயங்கினார்; 'நீங்க வருவீங்கன்னு, எனக்கு நம்பிக்கை. அதனால, அப்படி சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க...' என்று இழுத்தார்.
கோபத்தில் முகம் இறுகி, 'எந்த நம்பிக்கையில், நீங்க முடிவெடுத்தீங்க... யாரை கேட்டு, மத்தவங்ககிட்ட சொன்னீங்க...' என்று கடுமை காட்டினார், காமராஜர்.
கலங்கிய கண்களுடன், 'தப்பா நினைச்சுக்காதீங்க... அன்னிக்கு, உங்களுக்கு, வேலுார்ல ஒரு கூட்டம் இருக்கு... பக்கத்துல தான், என் ஊர். அதனால, கல்யாணத்துக்கு கூப்பிட்டா, கட்டாயம் வருவீங்கன்னு நினைச்சுட்டேன்...' என்றார், ரெட்டியார்.
'உங்க வீட்டு கல்யாணத்துக்கு, வர்றதா முக்கியம்... அதுவா என் வேலை; வேற வேலை இல்லையா... வர முடியாது... நீங்க போயிட்டு வாங்க...' என, பட்டென்று கூறி அனுப்பி விட்டார், காமராஜர்.
முகத்தில் அடித்தது போல் ஆனது, ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லவில்லை. கல்யாணத்தை அவர் வீட்டில் எளிமையாக நடத்தினார்; அவரது வசதிக்கு அப்படித்தான் முடியும். கடைசியில், காமராஜர் வரமாட்டார் என்பதும், ஜனங்களுக்கு புரிந்தது.
'என்னமோ, நானும், காமராஜரும் ஒண்ணா சிறையில் இருந்தோம்... கூட்டாளிங்க... என் வீட்டு கல்யாணத்துக்கு வருவார்ன்னு பெரிசா தம்பட்டம் அடிச்சுகிட்டாரு... பார்த்தீங்களா அலம்பல...' என்ற ஏளன பேச்சு கூடியது; வந்து, போனவர்கள் எல்லாம் புறம் பேசினர்.
மனம் உடைந்த, ரெட்டியாருக்கு, உடல் கூனிப்போனது. வீட்டிற்குள் சுருண்டு படுத்து விட்டார். அந்த வீடே வெறிச்சோடி போனது. சற்று நேரத்திற்கெல்லாம், காரில் வந்த ஒருவர், 'முதல்வர், காமராஜர் வரப்போகிறார்...' என்ற செய்தியை சொன்னார்.
நம்பிக்கையற்று உட்கார்ந்திருந்தார், ரெட்டியார். சில நிமிடங்களில், அடுத்த காரில், இரண்டு பெரிய கேரியரில், சாப்பாட்டோடு வந்து இறங்கினார், காமராஜர்.
ரெட்டியாரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் சேர்ந்து விட்டது. முதல்வரை தழுவியபடி, குலுங்கி அழுதார், ரெட்டியார்.
தட்டிக்கொடுத்து, சமாதானப்படுத்திய காமராஜர், 'சுதந்திர போராட்டம், ஜெயில்ன்னு எல்லாத்தையும் இழந்துட்ட, உங்க கஷ்டம் எனக்கு தெரியும், ரெட்டியாரே... பையனுக்கு, கல்யாணம்ன்னு சொன்னப்பவே, நான் வர்றதா சொல்லியிருந்தா, நீர், இருக்குற கஷ்டத்துல, கடன் வாங்குவீர்...
'முதல்வர் வர்றார்ன்னு ஏதாவது பெரிசா செய்யணும்ன்னு போவீர்... அதான், அப்படி சொன்னேன்; மன்னிச்சிடுப்பா... உன் வீட்டு கல்யாணத்துக்கு வராம, எங்க போவேன்...' என்று, ஆரத்தழுவினார்.
கண்ணீர், ஆனந்த கண்ணீரான நேரம் அது.
பிறகு, வாசலில் பாய் விரித்து, எடுத்து வந்த சாப்பாட்டை அனைவருக்கும் போடச் சொல்லி, அக்குடும்பத்தாரோடு தானும் அமர்ந்து சாப்பிட்டார்.
சாப்பாட்டு சுமையை கூட அவருக்கு கொடுத்துவிட கூடாது என்று, தன் பணத்தை கொடுத்து, வாங்கி வந்தார் என்றால், ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூற தேவையில்லை.
நிலை மாறினால், குணம் மாறலாம் என்று, மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில், நட்பை போற்றியவர், காமராஜர்.

நடுத்தெரு நாராயணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • Kalyanaraman -

  என்ன ஒரு அற்புதமான மனிதநேயம். அடுத்த தேர்தலைப் பற்றி யோசிக்கும் அரசியல்வாதியாக இல்லாமல் அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்ததால்தான் பெருந்தலைவர் என மக்கள் கொண்டாடினர் இனி எத்தனை நூற்றாண்டு ஆனாலும் இப்படி ஒரு தலைவன் வரமுடியாது. அவரது அமைச்சரவை சகாக்களும் புடம்போட்ட தங்கங்கள். திராவிட திருடர்களின் சினிமா மாயைக்கும் அடுக்கு மொழிக்கும் மதி மயங்கிய நம் பெரியவர்கள் இந்த தியாகசீலரை தோற்கடித்த பாவம் நாம் இன்று அனுபவிக்கிறோம். முன்னோர் செய்த பாவம் இளையோர் தலையில் விடியும் என்ற பழமொழி இந்த விஷயத்தில் பொன்மொழி ஆகிப்போனது.

 • Saravanan Raman - Neyveli ,இந்தியா

  14.07.2019 தேதியிட்ட வாரமலரில், நடுத்தெரு நாராயணன். ‘திண்ணை’பகுதியில்,அளித்த, முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜர் பற்றிய நினைவலைகள், கண்ணில் நீரலையையே ஏற்படுத்திவிட்டது இது போன்ற இனிய, எளிய, மனிதர்கள் இனிமேல் கனவில் மட்டும் தானா? நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்ட திருடர்கள் இந்த மாணிக்கத்தை படுத்தி எடுத்ததன் விளைவைத்தான் இப்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  இவர்தான் உண்மையான தமிழர்.. அடுத்தவர் நிலை அறிந்து உண்மை பாசம் கொண்ட தலைவர். ஏங்க மட்டும் முடியும். தவம் செய்வோம் ஒரு புதிய தலைவர் பிறக்க.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பாவம்....

 • Dawamani - Kajang,மலேஷியா

  இப்படி பட்டவரைதான் தமிழர்கள் தேர்தலில் வீழ்த்தி திருடர் முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் அமர்த்தினர். இன்று தண்ணீர் இல்லை

 • ganeshbabu - Chennai,இந்தியா

  Thinnai is best in Varamalar, we want to know more about the good people and how they lived, it will give good lesson to the next generation.

 • Sarukan -

  I am very proud due to I am also same district Virudhunagar

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement