Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், கிராமத்து பெண். தற்சமயம், வயது, 34. பக்கத்து ஊரில் உள்ள கல்லுாரியில், பி.ஏ., படித்தேன். அப்பா, சிறு விவசாயி; அம்மா, இல்லத்தரசி. ஒரே பெண்ணான எனக்கு, 23 வயதானபோது, சென்னையில் வசிக்கும் துாரத்து உறவினரின் மகனை, திருணம் செய்து வைத்தனர்.
டில்லியில், மத்திய அரசு பணியில் உள்ளார், கணவர். எனவே, நானும் டில்லிக்கு போக வேண்டிய கட்டாயம். எங்கள் கிராமம், கல்லுாரி தவிர வேறு எந்த வெளி உலகத்துடனும் அதிக பழக்கம் இல்லை. டில்லி எனக்கு பிரம்மாண்டமாக தெரிய, மலைப்பாக இருந்தது.
மாமனார், பணி ஓய்வு பெற, மாமியார், நாத்தனார் உட்பட அனைவரும், எங்களுடன் வந்து தங்கினர். ஆரம்பத்தில், இது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, புகுந்த வீட்டாரின் தலையீடு அதிகமானது.
கணவரோ, சுயமாகசிந்திக்க தெரியாததால், மாமியார் மற்றும் நாத்தனாரின் பேச்சே வேத வாக்கு என்றிருந்தார்.
இந்நிலையில், எனக்கு ஒரு மகள் பிறந்தாள். குழந்தைக்கு, இரண்டு வயதாகும் போது, லட்சத்தில் ஒருவருக்கு தான் வரக் கூடிய, விசித்திர நோயால் பாதிக்கப்பட்டாள். இதை அறிந்ததும், என்னையும், மகளையும் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
நீர்க்குமிழி போல் கலைந்து போன வாழ்க்கையை நினைத்து வருந்துவதா அல்லது மகளின் நிலைமைக்கு நோவதா என்று தெரியாமல், சில காலம் பித்து பிடித்தது போல் இருந்தேன்.
மனிதாபிமானமுள்ள மருத்துவர் ஒருவரின் சிகிச்சையும், பெற்றோரின் அரவணைப்பும் ஆறுதல்படுத்தின.
நர்சரி பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். மேற்படிப்பு படிக்கவும், குழந்தையின் சிகிச்சை என்று, நேரம் காலம் தெரியாமல் உழைத்தேன்.
அவ்வப்போது, போனில் பேசுவார், கணவர். பெங்களூருக்கு வேலை மாற்றல் கிடைக்கப் போவதாக தெரிவித்தார். மேலும், மாமியாரும், நாத்தனாரும், என்னை விவாகரத்து செய்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி, அறிவுறுத்தியதாக கூறினார்.
விவாகரத்து விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு அனுப்பும்படி, போனில் மிரட்டினார், மாமியார். நான் எதுவும் பேசாமல் இருந்து விட்டேன்.
தற்போது, எம்.பில்., பட்டம் பெற்று, கல்லுாரி ஒன்றில், தற்காலிக, உதவி பேராசிரியையாக உள்ளேன். மகளும், உடல்நலம் தேறி வருகிறாள்.
'இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக குணமாகி விடுவாள்...' என்கிறார், மருத்துவர். மருத்துவ சிகிச்சையுடன், என் பெற்றோரின் பராமரிப்பும், இயற்கை சூழ்நிலையுமே, மகளை காப்பாற்றியதாக கருதுகிறேன்.
இந்நிலையில், டில்லிக்கோ, பெங்களூருக்கோ சென்றால், என் பணியும், குழந்தையின் உடல்நலமும் பாதிக்கும் என்பதால், கணவருடன் செல்ல விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். அதேசமயம், விவாகரத்து செய்யவும் விருப்பம் இல்லை.
சுயபுத்தியில்லாத கணவரை எப்படி வழிக்கு கொண்டு வருவது அல்லது விவாகரத்து செய்து விடுவதா... எனக்கு ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

ஒரு விவசாயி, மகா போராளி. தரிசாய் கிடந்த நிலத்தை உழுது, நாற்று நட்டு, நீர் பாய்ச்சி, களை பறித்து, பூச்சிக்கொல்லி மருந்தடித்து, காற்றுடனும், மழையுடனும், வறட்சியுடனும் போராடி, சொற்ப அறுவடை செய்கிறான்.
விவசாயியின் மகள் அல்லவா, நீ... அதனால் தான், உனக்கு ஏற்பட்ட அத்தனை பின்னடைவுகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாய். உன் ஆயுதங்களாக, இடது கையில், கல்வி என்றால், வலது கையில், உன் பெற்றோரின் ஆதரவு.
கணவரில், இருவகை உண்டு. ஒன்று: அக்மார்க் வில்லன்கள். இரண்டு: அக்மார்க் நல்லவர்கள். ஆனால், பாம்புக்கு, தலையையும், மீனுக்கு, வாலையும் காட்டும் விலாங்குகளை எந்த வகையில் சேர்ப்பது.
சுயநலமிக்க, ஆணாதிக்க உணர்வுமிக்க, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையான ஆண்களை விட, படு ஆபத்தானவர்கள், இரண்டும்கெட்டான் வகையினர். இந்த மண் குதிரைகளை நம்பி, வாழ்க்கை ஆற்றில் சவாரி போக முடியுமா... விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட மகள் பிறந்தாள் என்றால், அதற்கான, 'ஜெனிடிக்' பொறுப்பு, கணவன் - மனைவி இருவருக்கும் தானே.
உன்னை மட்டும் குற்றம்சாட்டி, உன்னையும், மகளையும், பெற்றோர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியது, பொறுப்பற்ற கணவனின் மிருகச்செயல். 'இன்னொரு திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்துகின்றனர்...' என, கணவன் கூறுவது, அவன், இன்னொரு திருமணம் செய்ய ஆசைப்படுவதை வெளிப்படுத்துகிறது.
ஒரு தனியார், 'டிவி'யில், 'மனித்' என்ற அமைப்பை நடத்தும், சாரதா என்பவரின், நேர் காணலை பார்த்தேன். 40 வயதில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சில நாட்கள் கோமாவில் கிடக்கிறார், அப்பெண். அதன்பின், ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கிடைக்கிறது.
கராத்தே கற்றுக்கொள்கிறார்; ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு, மாரத்தன் ஓட்டத்தில், சர்வதேச அளவில் பல பதக்கங்களை பெறுகிறார்; 'மனித்' என்ற அமைப்பை நிறுவி, நுாற்றுக்கணக்கான பெண்களுக்கு, போராடும் உத்வேகத்தை கற்றுத் தருகிறார். 60 வயது ஆகும்போதும், 'தொடர்ந்து சாதிப்பேன்...' என்கிறார்.
மகளே... நீயும் இன்னொரு, சாரதாவாக மாறு. இரண்டும்கெட்டான் கணவனிடமிருந்து, சட்டப்படி விவாகரத்து பெறு. பகுதி நேர, பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பை முடித்து, முனைவர் பட்டம் பெறு.
மகளை முழுமையாக குணமாக்கி, அவளை நன்கு படிக்க வை. வாழ்க்கையில், ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும். இன்னொரு கதவு திறக்காவிட்டால், ஆவேசமாய் தட்டி, திறக்க வை.
மனம் தளராத விக்கிரமாதித்தன் முயற்சி, பிரமாண்ட வெற்றியை தரும். ஆண் அடித்தால், 1.5 டன், 'வெயிட்' என்றால், எண்ணங்களை மையத்தில் குவித்து, நேர்கொண்ட பார்வையுடன், ஒரு பெண் அடித்தால், 100 டன், 'வெயிட்!'
சங்கடப் பெண்ணாய் இருந்தது போதும், சாதனைப் பெண்ணாய் உயர்ந்து நில். வெற்றி உனதே, என் தங்க மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement