Advertisement

இளஸ்... மனஸ்... (3)

அன்புள்ள சகோதரி மெடோஸ்...
எனக்கு ஒரே மகள்; இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். காலையில் எழும் போதே அழுகை ஆரம்பம் ஆகும்; இரவு வரை தொடரும்.
நாள் முழுக்க, எதற்கெடுத்தாலும் சிணுங்கியபடியே இருப்பாள்.
நான், ஒரு இல்லத்தரசி; எனக்கு இரண்டாவது குழந்தை உருவாகவே இல்லை. மகளை, நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், வேலைக்கு கூட செல்லவில்லை.
மாமியார், மாமனார் எல்லாரும் இருக்கின்றனர். யார் சொல்றதையும் கேட்க மாட்டாள்; அவங்களும், டென்ஷன் ஆகின்றனர்.
'என்ன குழந்தை வளர்க்குறீங்க...' என, கேட்கின்றனர் உறவினர்கள்.
இவள் வயதுள்ளவர்களுடன் விளையாட மாட்டாள். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றால், எங்களை, அசிங்கப்படுத்தி விடுகிறாள். அதனால், இவளை எங்கும் அழைத்து செல்லமாட்டார் என் கணவர்.
சாப்பிடும் போது, இலையில் தண்ணீர் ஊற்றி விடுவாள்; 'சாப்பாடு வேண்டாம்...' என்று அடமும் பிடிக்கிறாள்.
இதோடு கொடுமை, வீட்டு பாடம் செய்ய சொன்னால், கதறி அழுவாள். அதை, செய்து முடிக்கும் வரை அழுகை தொடரும்.
'ஏம்மா இப்படி செய்ற...' என, கேட்டு பார்த்தோம்; அடித்தும் பார்த்தோம்; மாறுவதாய் இல்லை.
சிறுவயதில் இருந்தே, அப்பாவுடன் தான் விளையாடுவாள்.
'நண்பர்களே வேண்டாம்; அப்பாவுடன் தான் விளையாடுவேன்...' என கூறுகிறாள்.
அதனால், என் கணவர் இவளுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டார்; எவ்வளவு நேரம் என்றாலும் தனிமையில் தான் விளையாடுகிறாள்.
இடது கை பழக்கம் உள்ளவள்; இப்பவே, ஐந்து மொழி தெரியும். எல்லா திறமைகளும் இருக்கு; படிக்க வைக்க ரொம்ப கஷ்டபடுகிறேன். சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு போகிறாள்; 'யாருடனும், 'அட்ஜஸ்ட்' பண்ணி போக மாட்டேன்... படிக்கவும் மாட்டேன்...' என்கிறாள்; எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

அன்பு சகோதரிக்கு!
உங்கள் மகள் அழுகுணி பாப்பாவாக இருப்பதற்கு, உடல், மன ரீதியான காரணங்கள் இருக்கலாம்; முதலில், உடல் ரீதியான காரணங்களை பார்ப்போம்...
* உங்கள் மகள், குறை மாதத்தில், சிசேரியனில் பிறந்து, 'இன்குபேட்'டரில் வைத்து பாதுகாக்கப்பட்டவளா... இதனால், சில, பல சவலைக் குழந்தைகள், சிடு சிடுப்பாய் இருக்க கூடும்
* ரத்தசோகை இருக்கிறதா என, பரிசோதியுங்கள்; சிவப்பணுக்களில், 'ஹீமோகுளோபின்' குறைவாக இருந்தால், உற்சாகம் குறைவாக இருப்பாள்
* காதுகளில் நோய் தொற்று அல்லது பூச்சி புகுந்திருத்தல், தொண்டையில் டான்சில், மூக்கில் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகள் இருந்தாலும், தொடர்ந்து அழுவாள்
* வயிற்றில், கொக்கிப் புழு, நாடாப் புழு, உருண்டைப் புழு போன்றவை, அதிகம் இருந்தாலும், அழுகை ராகம் பாடுவாள்
* மிக மிக முக்கியமான விஷயம்; பதட்டப்படாமல் கேளுங்கள்... உங்கள், ஏழு வயது மகளுக்கு, பாலியல் தொல்லைகள், தொடர்ந்து இருந்தாலும், அதை வெளிக்காட்டாது, அழுதபடியே இருப்பாள்
* ஒற்றைத் தலைவலி, ரத்தத்தில், 'இயோசின்' அதிகம் இருத்தல் போன்ற காரணங்களாலும் அழலாம்
* வகுப்பாசிரியையோ, தோழிகளோ ஏதாவது காரணத்திற்காக, அடித்தபடியே இருந்தாலும், தொடர்ந்து அழ வாய்ப்பிருக்கிறது
* படுக்கை விரிப்பு, தலையணை சுத்தமின்மை, சரி வர துாங்காமை போன்றவை இருந்தாலும் அழுவாள்.
மன ரீதியான காரணங்கள்:
* 'அழுதால், எல்லார் கவனமும், நம் மீது விழுகிறது; அதனால் அழுது காரியம் சாதிப்போம்' என்றும் கருத கூடும்
* வீட்டுக்கு ஒரே மகள்; போட்டிக்கு, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லை. வீட்டுக்கு தனிக்காட்டு ராணி என்கிற, தன் முனைப்பிலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்யலாம்
* உங்கள் முந்தைய தலைமுறைகளில், யாராவது ஒருவர், அழுகுணி ராஜாவாகவோ, ராணியாகவோ இருந்திருக்கக் கூடும்; அது, மரபு வழியாக, அதாவது, 'ஜெனிடிக்'காக தொடர்கிறதோ என்னவோ...
* இடது கை பழக்கம் உள்ளவர்கள், மொத்தத்தில் முரண்படுவர்; 'என் வழி அழுது ரகளை செய்யும் தனி வழி' என்கிறாளோ...
அவளுக்கு, முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்; உடல் ரீதியான பிரச்னைகள் இருந்தால், மருந்து மூலம் குணப்படுத்துங்கள்.
பெண் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, 'மன ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா' என கண்டுபிடியுங்கள். இருந்தால், அதை சரி செய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்.
அழும் போது, அவள் முகத்தை, கண்ணாடியில் காட்டுங்கள்; அபூர்வமாய் சிரிக்கும் போதும், முகத்தை கண்ணாடியில் காட்டுங்கள். அது, மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
பெற்றோரின் நடத்தை, ஏதாவது ஒரு விதத்தில் அழுகைக்கு காரணமாக இருந்தால், உங்களை சீரமைத்துக் கொள்ளுங்கள்.
புன்னகை, கோடி பவுன் பொன் நகைக்கு சமம் குட்டீஸ்.
- மெடோஸ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement