Advertisement

செங்கிஸ்கான்!

Share

குளிர் வாட்டி எடுக்கும் மங்கோலிய சமவெளி, ஆசியா கண்டத்தில் உள்ளது. அங்கு தான், மங்கோலியப் பேரரசனாக உயர்ந்த, செங்கிஸ்கான் என்ற டெமுஜின் பிறந்து வளர்ந்தான். டெமுஜின் என்றால், 'எக்கு இரும்பு' என்று பொருள்.
தந்தை யெசுகாய்; மங்கோலியப் பழங்குடி இன தலைவராக இருந்தார். காட்டிலும், மேட்டிலும் இளமைப் பருவத்தைக் கழித்த செங்கிஸ்கான், பெரிய குதிரைகளில் சவாரி செய்வான்; வேட்டையாடுவான்.
ஒன்பதாவது வயதில், மற்றொரு பழங்குடி இனத்தவருடன் தங்கி, பயிற்சி பெற்றான். அப்போது, தன் தந்தையை, எதிரிகள் விஷம் வைத்து கொன்றதை அறிந்து, கடும் கோபத்துடன் திரும்பி வந்தான்.
தந்தை வகித்த தலைவர் பதவியை ஏற்க நினைத்த அவனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதே இனத்தைச் சேர்ந்த, மற்றொருவன் தலைவர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
தப்பிய டெமுஜின் குடும்பத்தினர், காட்டில் மறைந்து வாழ்ந்தனர். குளிரிலும், குடும்பத்தினரைத் தேடி கண்டுபிடித்தான்; தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க திட்டமிட்டான்.
தனக்கு ஆதரவாக, பழங்குடி மக்களை ஒருங்கிணைத்தான்; மற்றொரு பழங்குடி இனப் பெண்ணை திருமணம் செய்து, அந்த குழுவுடன் கூட்டணி அமைத்தான்.
அவன் துணிச்சல் கண்டு, ஆதரவாளர்கள் பெருகினர். படை பலத்தை பெருக்கியவுடன், எதிரிப் படையை, இரக்கமின்றி சிதைத்தான்; எதிரிகளை வெட்டி வீசி, வெற்றி வாகை சூடினான்.
அப்போது மங்கோலியர், பல குழுக்களாக பிரிந்து, தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை இணைத்து, ஆட்சி செய்தான். இதனால், 'செங்கிஸ்கான்' என்ற பெயரை அவனுக்கு பழங்குடியினர் சூட்டினர். அதற்கு, 'அனைவரையும் ஆள்பவன்' என்பது பொருள்.
படையை நிர்வகிப்பதில், புது உத்திகளைக் கையாண்டான். படையை தலா, 1,000 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, 'குரான்' என்று பெயரிட்டான். புகையை உருவாக்கி, சமிக்ஞை கொடுப்பது, கொடியசைப்பு, முரசுச் சத்தம் போன்றவற்றால், தகவல் பரிமாறும் யுத்திகளை போரில் பின்பற்றினான்.
துணிச்சல் மிக்க குதிரை ஏறும் பயிற்சியை, வீரர்களுக்கு இளம் வயதிலேயே அளித்தான். கால்களால், குதிரையைச் செலுத்துவது; அதிவேகத்தில் குதிரையை செலுத்தியபடியே, கொடிய அம்புகளை எதிரிகள் மீது எய்வது என, புதிய சாகச நடை முறைகளை, படையில் அறிமுகப் படுத்தினான்.
எதிரி நாட்டை முற்றுகையிடும் போது, முதலில், ஒரு சிறிய படையை, களத்துக்கு அனுப்புவான். எதிரிகள், அந்த படையை வென்ற களிப்பில், ஓய்வு எடுப்பர். அப்போது, நாலா பக்கத்திலும் பெரும் படையால் சூழ்ந்து, எதிர்பாராத தாக்குதல் நடத்தி, வெற்றிக் கொள்ளும் நடைமுறையை உருவாக்கினான் செங்கிஸ்கான்.
கொலை பாதகம் செய்ய தயங்கியதில்லை; ஆனால், தன்னைப் பின்பற்றியோரை, மிகுந்த அன்புடன் நடத்தினான். வீரர்களுக்கு பதவி உயர்வு தந்தான்; களத்தில் நின்று வென்றால் தான், சொந்த மகன்களுக்கே பதவி என்ற நிலையை உருவாக்கினான்.
மங்கோலிய பழங்குடிகளை ஒருங்கிணைத்த பின், செல்வ வளம் மிக்க பகுதிகளை நோக்கி, அவன் பார்வை திரும்பியது. ஆசியா கண்டத்தில் சீனாவை ஆண்ட ஜின் வம்சம் மீது படை எடுத்தான்; அவர்களின் தலைநகரான யான்ஜிங் நகரை வென்று, சீனாவின் வட பகுதியை பிடித்தான்.
அதன்பின், மேற்கு ஆசிய பகுதி அரசுகள் மீது, அவன் பார்வை திரும்பியது. அங்கு, ஒரு வணிகத் துாதரை அனுப்பினான். துாதர் கொல்லப்பட்டதால், கோபம் கொண்ட செங்கிஸ்கான், இரண்டு லட்சம் வீரர்களுடன் கொந்தளித்துக் கிளம்பினான்.
பல ஆண்டுகள் யுத்தம் நடந்தது; கவாரிஸ்மியா என்ற சாம்ராஜ்யத்தை, ஒட்டு மொத்தமாக அழித்து, கிழக்கு ஐரோப்பா வரை சென்றான்.
மீண்டும் சீனாவுக்கு திரும்பி வந்தான். அப்போது, குதிரையில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
ஒரு போரில், தன் மீது அம்பு எய்த எதிரி நாட்டு வீரனைப் பிடித்த செங்கிஸ்கான், 'மிகவும் தைரியமாகப் போரிடுகிறாய்...' என்று பாராட்டி, தன் படையில் தளபதியாக்கிக் கொண்டான்.
செங்கிஸ்கானின் மகன் டோலுாயி; அவன் மகன் குப்ளாய் கான்; அவன் தான், முழு சீனாவையும் வென்று, யுவான் அரச வம்சத்தை நிறுவியவன்.
'குதிரையில் அமர்ந்து, உலகம் முழுவதையும் வெல்வது எளிது; வென்றதை நிர்வாகம் செய்வது தான் மிகவும் கடினம்...' என்பது செங்கிஸ்கானின் வைர வாக்கு.

ஆசியா கண்டம், மங்கோலிய தலைநகர், உலான் படோர் நகரில் நிறுவப்பட்டுள்ள, செங்கிஸ்கான் உருவ இரும்பு சிலை. இதன் உயரம், 131 அடி.

- ஜீயார்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement