Advertisement

சிரித்தால் முத்து உதிரும்! (2)

Share

சென்றவாரம்: மகேந்திர புரி அரசன் விமலேந்திரனிடம், ஏழரை ஆண்டு, ஊழியனாக இருக்க வேண்டும் என்று விக்கிரமாதித்தனிடம், கூறினார், சனி பகவான். இனி -


வீரகேசரி என்ற பெயரில் ஊழியன் வேடத்தில் இருந்த விக்கிரமாதித்தனின் பொலிவும், உடற்கட்டும், மகேந்திரபுரி அரசனைக் கவர்ந்துவிட்டது.
'உன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன்; எவ்வளவு ஊதியம் கேட்கிறாய்...' என்றான் மகேந்திரபுரி அரசன்.
'நாள் ஒன்றுக்கு, 100 பொன் ஊதியமாகக் கொடுத்தால் போதும்; என்ன வேலையானாலும் தட்டாது செய்வேன்...' என்றான்.
சம்மதித்து, அவன் தங்கியிருக்க, வீடு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டான் அரசன்.
பணியை ஏற்ற விக்கிரமாதித்தன், சத்திரதிற்கு சென்றான். அங்கு, அனந்தனும், சலந்திரனும், மனித உருவில் காத்திருந்தனர்.
அவர்களுடன், வேதாளம், ரத்தினமாலை ஆகியோரை அழைத்து, அரசன் ஒதுக்கிய வீட்டிற்கு சென்றார். ரத்தினமாலை, அவலட்சண உருவத்துடன் இருந்ததால், அவளை எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வீட்டில், உணவு சமைக்க, தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தார் விக்கிரமாதித்தன். ரத்தினமாலை சமைத்தாள்; அனைவரும் உண்டனர்.
இரவில், ரத்தினமாலை பழைய உருவை அடைந்தாள்; அனந்தன், பாம்பு உருவெடுத்து வீட்டை காவல் காத்தான். வாயைத் திறந்து, மேல் தாடைப்பல் தலைவாசல் பக்கமாகவும், கீழ் தாடைப்பல், பின் வாசல் பக்கமாகவும் இருக்குமாறு காவல் புரிந்தான்.
பெரிய தவளை போன்று உருவெடுத்த, சாலந்திரன் கூடாரத்தைப் போல நின்று காவல் காத்தான்.
விக்கிரமாதித்தனுக்கு இரு சேவகர்கள். ஒருவன் கார்மேகன்; இன்னொருவன் கோலகன்; அண்ணன், தம்பியர். இருவரும் உயிருக்குயிராகப் பழகியதால், பகலில் வீட்டுக்குள் வர அனுமதித்திருந்தார் விக்கிரமாதித்தன்.
இரவில், பாம்பு உருவில் அனந்தன் காவல் இருப்பதால், அவர்களால் வீட்டிற்குள் வர முடியவில்லை.
இதை விக்கிரமாதித்தனிடம் கூறி, 'எப்போது வந்தாலும் எங்களை உள்ளே அனுமதிக்கச் சொல்...' என்றனர். அந்த வேண்டுகோளை ஏற்றார் விக்கிரமாதித்தன்.
ஒரு நாள் -
கார்மேகனும், கோலகனும் இரவு நேரத்தில், விக்கிரமாதித்தன் வீட்டுக்கு வந்தனர். அங்கு, அவலட்சண ரத்தினமாலை, தேவலோக கன்னி போல் விளங்குவதைக் கண்டனர்.
மகேந்திரபுரி அரண்மனை திரும்பியதும், 'அரசே... உங்களிடம் ஊழியம் பார்க்கும் வீரகேசரியின் வீட்டில், ஒரு மங்கை, தேவலோக அழகி போல் இருக்கிறாள். இப்படிப்பட்டவள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியனிடமா இருப்பது...' என்று கூறினர்.
மிகவும் ஆர்வம் கொண்ட மன்னன், 'அந்த பெண்ணைப் பார்க்க வேண்டுமே...' என்றான்.
'நீங்கள் அந்த வீட்டுக்குள் சுலபமாகப் போக முடியாது; பெரிய பாம்பு காவல் இருக்கிறது. அதனால், இன்று இரவு, என் தம்பி கோலகனைப் போல் வேடமணிந்து என்னுடன் வாருங்கள். வீரகேசரியின் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன்...' என்றான் கார்மேகன்.
அரசன், கோலகனைப் போல் வேடமணிந்தான். இருவரும், வீரகேசரியின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அங்கு, ரத்தினமாலையை கண்டு, அவள் அழகில் பிரமித்து நின்றான் அரசன்.
அரண்மனைக்கு திரும்பியதும், வீரகேசரியை ஒழித்து, ரத்தினமாலையை கவர்வது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அரசனின் மனப்போக்கை புரிந்து கொண்ட கார்மேகன், 'ஆயிரம் காத துாரத்திற்கு அப்பால், முத்துப்பட்டினம் என்ற ஊர் உள்ளது. அங்கு, முத்துநகையாள் என்ற பெண் சிரிக்கும் போதெல்லாம், வாயில் இருந்து விலை உயர்ந்த முத்துக்கள் உதிரும்...
'அந்த பெண்ணைக் கவர திட்டமிட்ட முனிவர் ஒருவர், அந்த ஊர் மக்களை உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்படி சபித்தார். எல்லாரும் பிணம் போல் கிடக்கின்றனர்; ஊரே சுடுகாடாக மாறிவிட்டது...
'முத்துநகையாளை மயக்கி, சிறை வைத்திருக்கிறார் முனிவர். இப்போது அவள் சிரிப்பதில்லை. முத்துக்கள் உதிர்வதுமில்லை. அவள் சிரிக்கும் போது உதிரும் முத்துக்களை வாங்கி வர, வீரகேசரியிடம் சொல்வோம். அவனால், அதை கொண்டு வர முடியாது. சுலபமாக, மரண தண்டனை விதித்து கொன்று விடலாம்...' என்று, ஆலோசனை கூறினான்.
அதை ஏற்ற அரசன், வீரகேசரியை அழைத்து, 'ஒரு முத்துப்பதக்கம் தயாரிக்க எண்ணியுள்ளேன். விலை உயர்ந்த நல்முத்துக்கள் தேவைப்படுகின்றன. உயர்ந்த முத்துக்கள், முத்துப்பட்டினம் என்ற ஊரில் கிடைப்பதாக கேள்விப் பட்டேன். அங்கு சென்று, 100 முத்துக்கள் வாங்கி வா...' என்றான்.
'திரும்பி வர, 30 நாட்கள் ஆகும்; அதுவரை எனக்கு அவகாசம் தர வேண்டும்...' என்றார் வீரகேசரி.
'அப்படியே ஆகட்டும்; பொக்கிஷ அதிகாரியிடம், 30 நாட்களுக்கு சம்பளத்தையும், நல்முத்துக்கள் வாங்க, பொன்னும் வாங்கி போ...' என்றான் அரசன்.
உத்தரவைப் பெற்ற வீரகேசரி என்ற பெயரிலிருந்த விக்கிரமாதித்தன், வீட்டிற்கு வந்தார். அனந்தன், சலந்திரன் ஆகியோரிடம், திரும்பி வரும் வரை, ரத்தினமாலையைப் பத்திரமாக கவனித்துக் கொள்ள கூறி, வேதாளத்துடன் புறப்பட்டார்.
மகேந்திரபுரியைக் கடந்ததும், வேதாளத்தின் மேல் ஏறி அமர்ந்தார். அது, காடு, மலைகளைக் கடந்து, சங்குபுரம் என்ற ஊரை அடைந்தது.
அவ்வூரில், முத்து வியாபரம் செய்யும், முத்து வீரப்பரை சந்தித்த விக்கிரமாதித்தன், 'ஐயா... எங்கள் அரசருக்கு, 100 முத்துக்கள் தேவைப்படுகின்றன; இங்கு கிடைப்பவைதான் நல்முத்துக்கள் என்று கூறுகின்றனர்...' என்றார்.
- தொடரும்...
கண்ணப்பன் பதிப்பகம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement